கொரோனா பணிச்சுமையால் அவதிப்படும் தமிழக மருத்துவ மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மாணவர்கள், தங்களுடைய கொரோனா கால பணிக்காக, எந்தவித சிறப்பு உதவித்தொகையோ இன்சூரன்ஸ் திட்டமோ வழங்கப்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா முதல் அலையின் தாக்கம் தீவிரமாக இருந்த நேரத்தில் அரசு மருத்துவர்களை போலவே ஓய்வின்றி உழைத்த மாணவர்களுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளநிலை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு பணிச்சுமை கூடியதோடு, அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை என அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அரசு மருத்துவர்களை போலவே, மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இன்சூரன்ஸ் அளிக்கப்படவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாரியப்பன்.
''மருத்துவ மாணவர்களின் உழைப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். முதலில் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு, அதாவது இன்சூரன்ஸ் தேவை. உதவித்தொகை வழங்க வேண்டும். அறிவிப்போடு நிறுத்தி விட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் சென்னையில் உள்ள மூன்று பிரதான மருத்துவ கல்லூரிகளான- ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளை சேர்ந்த முதுநிலை மருத்துவர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கவில்லை என்றும் பணிச்சுமை கூடுதலாக உள்ளது என்றும் கூறி போராட்டம் நடத்தினர். கொரோனா காலத்தில் கூட இந்த மாணவர்களுக்கு அரசு உதவவில்லை என்பதை போராட்டம் உணர்த்தியுள்ளது,''என்றார் மாரிமுத்து.
சென்னை மட்டுமல்லாது கடலூர்,கோவை என பல மாவட்டங்களிலும் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு ஆண்டு காலம் கொரோனா வார்டுகளில் பணியாற்றி மருத்துவ படிப்பை முடித்துள்ளார் தஞ்சாவூரைச் சேர்ந்த கணேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
''நான் கொரோனா வார்டில் வேலை செய்தேன். ஆரம்பகட்டத்தில் மருத்துவ மாணவர்களுக்கு உதவித்தொகை அரசு கொடுக்கும் என்ற அறிவிப்பு வந்தது. நம்பிக்கையாக இருந்தோம். ஆனால் அந்த அறிவிப்பு செயலாக்கம் பெறவில்லை. கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்கள் கூட, 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், உடல்நிலை தேறி மீண்டும் பணிக்கு வந்தார்கள். ஓய்வும் குறைவாக இருந்தது. சளைக்காமல் பணியாற்றினோம் என்ற திருப்தி இப்போதும் இருக்கிறது. ஆனால் எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது,'' என்கிறார் ஹரி.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பெருந்தொற்று காலத்தில், பிற சிகிச்சைகள் மற்றும் பிற மருத்துவ துறைகள் இயங்கவில்லை என்பதால், கொரோனா சிகிச்சையில் மட்டுமே மாணவர்கள் ஈடுபட்டனர் என்கிறார் மாணவர் விக்னேஷ்.
''இறுதி ஆண்டில் எல்லா துறைகளில் உள்ள மருத்துவ பயிற்சிகளை மாணவர்கள் பெறுவார்கள். ஆனால் கொரோனா காலத்தில் பிற துறைகளில் உள்ள சிகிச்சைகளை நாங்கள் கற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த கொரோனா காலத்தில் நாங்கள் முன்கள பணியாளர்களாக வேலை செய்தோம் என்பதை அங்கீகரிக்க குறைந்தபட்சம் எங்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கினால் வேலைவாய்ப்பில் எங்களுக்கு முன்னுரிமை பெற உதவும்,'' என்கிறார் விக்னேஷ்.
சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது படித்துவரும் மாணவர் ஒருவர் பேசுகையில், கொரோனா முதல் அலையின்போது, N95 மாஸ்க் கூட தரப்படவில்லை என்றார்.
''N95 மாஸ்க் தட்டுப்பாடு இருந்தது. நாங்கள் மூன்று லேயர் மாஸ்க் அணிந்து கொண்டு பணியாற்றினோம். ஆரம்பத்தில் பாதுகாப்பு உடைகள் கூட எங்களுக்கு அளிக்கப்படவில்லை. தற்போது இரண்டாம் அலையின்போதும் தொடர்து வேலை செய்கிறோம். தற்போது அடிப்படையான மாஸ்க், பாதுகாப்பு உடை தருகிறார்கள். ஆனால் அரசாங்கம் அறிவித்த உதவித்தொகை எதுவும் தரவில்லை,'' என்றார் அவர்.
பிற செய்திகள்:
- கொரோனா இரண்டாம் அலை: ஐபிஎல் தொடரிலிருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள் சொல்வது என்ன?
- கொரோனா ஆக்சிஜன்: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
- கொரோனா தடுப்பூசி: 18-45 வயதுடையவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் பதிவு
- ஸ்புட்னிக் V, கோவிஷீல்ட், கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
- "வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது"
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
- இந்தியாவிற்கு ஆக்சிஜன் அனுப்பி உதவ தயாராகும் வெளிநாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












