You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா அலை: ஒரே நாளில் 3.14 லட்சம் தொற்று, ஆக்சிஜன், தடுப்பூசிக்கு தேசியக் கொள்கை வேண்டும் - இந்திய உச்ச நீதிமன்றம்
இந்தியாவில் ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2,104 பேர் இறந்துள்ளனர். உலகிலேயே ஒரே நாளில் இவ்வளவு தொற்று ஏற்படும் நாடு இந்தியா மட்டுமே.
வியாழக்கிழமை காலை இந்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி முந்திய 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 3,14,835.
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கை: 1,84,657.
இந்தியாவில் இதுவரை ஏற்பட்டுள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 1,59,30,965.
இந்நிலையில், நாட்டில் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிற கொரோனா நோயாளிகளுக்கு அளிப்பதற்கான ஆக்சிஜன் இருப்பு மிக மோசமாக குறைவாக இருப்பதாக கூக்குரல்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக, கடந்த சில நாள்களாக டெல்லி யூனியன் பிரதேச அரசு ஆக்சிஜன் இருப்பு தொடர்பாக அபயக் குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
சில மணி நேரங்களுக்கே டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பதாக கூறியும், மத்திய அரசு டெல்லிக்கு ஆக்சிஜன் சப்ளை அளிக்கவேண்டும் என்று கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது டெல்லி அரசு.
இதையடுத்து டெல்லிக்கு அளிக்கும் ஆக்சிஜன் சப்ளை அளவு ஓரளவு அதிகரிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக டெல்லி ஆக்சிஜன் சிக்கலை சந்திப்பதாகவும், தினசரி 700 டன் ஆக்சிஜன் தேவை என்று யூனியன் பிரதேச அரசு மதிப்பிட்டுள்ளதாகவும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால், எல்லா மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் கோட்டாவை நிர்ணயிக்கும் மத்திய அரசு டெல்லிக்கு தினசரி 378 தருவதாக நிர்ணயித்தது. பிறகு இதனை 480 டன்னாக அதிகரித்தது. அவர்கள் தந்ததற்கு நன்றி. ஆனால், தேவை இன்னும் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த உலகத் தொற்றுக் காலத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி, அவசியமான மருந்து ஆகியவற்றின் விநியோகம் தொடர்பாக தேசியக் கொள்கை வகுக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இது தொடர்பாக வெவ்வேறு வழக்குகள், இந்தியாவின் வெவ்வேறு உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தாமாக முன்வந்து இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், இந்தப் பிரச்னையில் ஒரு தேசியக் கொள்கையை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா?
2018ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கோவிட்-19 தொற்றாளர்களுக்கு அளிப்பதற்கான மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டும் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் இந்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான ஹரிஷ் சால்வே உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் ஐந்து - ஆறு நாட்களில் தங்களால் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க முடியும் என்று ஹரிஷ் சால்வே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசிய போட்டுக்கொண்டவர்களில் எவ்வளவு பேருக்கு தொற்று தெரியுமா?
- சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் கோவிட் தொற்றால் மரணம்
- உயிர் காக்கும் ஆக்சிஜன் எப்படி உற்பத்தியாகிறது, விலை என்ன?
- "பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களை காப்பாற்றுங்கள்" - ஆக்சிஜன் தட்டுப்பாடு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம்
- இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: