இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி

சமீபத்தில் முடிவடைந்த 2020-21ஆம் நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் அதற்கு முந்தைய நிதி ஆண்டை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான ஆக்சிஜனை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசின் அலுவல்பூர்வ தரவுகளின்படி 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரை 9,301 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்தியா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2020-21 நிதியாண்டின் கடைசி இரு மாதங்களின் (பிப்ரவரி மற்றும் மார்ச், 2021) ஏற்றுமதி குறித்த தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதுவே இதற்கு முந்தைய நிதி ஆண்டான 2019-2020இல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஆக்சிஜனின் அளவு 4,514 மெட்ரிக் டன் என்ற இந்திய அரசின் தரவுகள் காட்டுகின்றன.

மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை, அவற்றை இடமாற்ற தேவையான சிலிண்டர்கள் மட்டும் டேங்கர்களின் மிகவும் குறைவான எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக கோவிட்-19 தொற்றின் தீவிர பாதிப்புக்கு உள்ளாகி உள்ளவர்கள் இந்திய மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் ஆக்சிஜன் கிடைக்காமல் போராடி வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனின் அளவு மருத்துவ காரணங்களுக்காக தேவைப்படும் ஆக்சிஜனின் அளவைவிட குறைவானதாகவே இருக்கிறது.

ஏப்ரல் 22 முதல் தொழிற்சாலை உற்பத்திக்காக ஆக்சிஜன் பயன்படுத்தக்கூடாது என்றும், மருத்துவ நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மருந்து உற்பத்தி, உணவுப் பொருள் தயாரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட சில துறைகளுக்கு மற்றும் இதில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

தொழிற்சாலை பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் 93 சதவீதத்தை விட அதிகமாக சுத்திகரிக்கப்பட்டு அதை மருத்துவ பயன்பாட்டுக்கு வழங்கப்படும் நடவடிக்கைகளும் செயற்கை ஆக்சிஜன் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவிட்-19 பரவல் தற்போது மிகவும் அதி தீவிரமாக இருக்கும் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் தங்களுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து வருகின்றன.

ஆக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து திரவ வடிவிலான ஆக்சிஜனை டேங்கர்கள் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவிக்கிறது.

டெல்லி, மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் உயிருக்கு போராடி வரும் தங்கள் உறவுகளை காக்க மக்கள் ஆக்சிஜனை தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது.

செவ்வாயன்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பிறகு டெல்லியில் உள்ள சில முக்கிய மருத்துவமனைகளுக்கு கடைசி நேரத்தில் ஆக்சிஜன் கிடைத்தது.

தங்கள் வசம் கையிருப்பு இருந்த ஆக்சிஜன் தீர்வதற்கான கடைசி சில மணி நேரங்களில் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை, குரு தேஜ்பகதூர் மருத்துவமனை லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயன் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை பின்னிரவில் தாமதமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர், பொது வெளியிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தங்களது ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உண்டாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

கோவிட்-19 காரணமாக 2023 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 76.32% பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவற்றில் தமிழ்நாடு 10ஆம் இடத்தில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: