You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவேக் மறைவு, கண்ணீரில் தமிழ்நாடு: நரேந்திர மோதி, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், கலைஞர்கள் இரங்கல்
தமிழ் திரைப்படத்துறையின் பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழில் மட்டும் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59.
முன்னதாக, நேற்று (ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை) காலை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டு அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணம் தமிழ்திரைப்பட நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள விவேக்கின் இல்லத்தில் அவருக்கு நடிகர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் இரங்கல்
"பிரபல நடிகர் விவேக்கின் அகால மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை டைமிங் மற்றும் புத்திசாலித்தனமான வசனங்கள் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என பிரதமர் மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
முதல்வர், ஸ்டாலின் இரங்கல்
அவரது மறைவால் தமிழ் திரைப்பட உலகிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகர்கள் பலரும் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவு செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர். எண்ணற்ற படங்களில் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப் பெரிய இழப்பு" என்று அவர் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் நடிகர் விவேக் என்று முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.
"'சின்ன கலைவாணர்' என திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் நடிகர் விவேக். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அவர். பல சாதனையை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்தவரை இயற்கை அவசரமாக ஏன் பறித்துகொண்டதோ?" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், "நாங்கள் எப்போது சந்தித்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும். அவரது நகைச்சுவை உணர்வை கண்டு பலமுறை நான் வியந்துள்ளேன். அவரது மறைவு திரை உலகிற்கு மட்டுமல்ல பலருக்கும் இழப்பு. அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, நல்ல வசனகர்த்தா, இயற்கை விரும்பி, ஆர்வலர்,'' என்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.
டிடிவி தினகரன், ரஜினிகாந்த்
அ.ம.மு.க. கட்சி தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 'சிவாஜி'படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
"சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த எனது தம்பி விவேக் நம்மோடு இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தான் வெளியிட்டுள்ள காணொளியில் நடிகர் சத்தியராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன்
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நடிகர் விவேக்கின் இறப்பை நம்ப முடியவில்லை. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்; திரைத்துறையில் பல ஆண்டுகள் மக்களை மகிழ்வித்து வந்த நீங்கள் என்றென்றும் எங்கள் நினைவுகளில் இருப்பீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
"சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!" என்று நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன்
நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார் நடிகரும், மக்கள் நீதிமையம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன்.
"நடிகர் விவேக் அவர்களை இழந்து வாடும் அவரது அன்புக்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். படைப்பு உலகில் ஒரு பெரிய வெற்றிடம் இன்று ஏற்பட்டுள்ளது" என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க இரங்கல்
சக நகைச்சுவை நடிகர் விவேக் காலமானது தொடர்பாக இரங்கல் தெரிவித்து காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ள வடிவேலு, "பொதுநல சிந்தனை அதிகம் கொண்ட நண்பர் விவேக் மறைந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது" என்று அதில் தெரிவித்துள்ளார்.
"விவேக்கின் ரசிகன் நான்; என்னை விட யதார்த்தமாக, எளிமையாக பேசக்கூடியவர் விவேக். நான் மதுரையில் இருப்பதால் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. விவேக்கின் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று கண்ணீர்விட்டு அழுதபடி அந்த காணொளி பதிவில் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
"விவேக் சார் இனி நம்முடன் இல்லை என்று அறிந்து பேரதிர்ச்சி அடைந்துள்ளேன். அவர் பலருக்கும் ஊக்கமளிக்கும் நபராக திகழ்ந்தார். என் திரையுலக பயணத்தின் முதல் காட்சியே அவருடன்தான் தொடங்கியது" என்று நடிகர் விஷால் ட்விட்டர் தெரிவித்துள்ளார்.
ஜனங்களின் கலைஞன் - எம்.எஸ்.பாஸ்கர்
ஊடகங்களிடல் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஜனங்களின் கலைஞராக வாழ்ந்தவர் விவேக் என்றார். ''மரணம் பொதுவானது. ஆனால் இவரின் மரணம் கொடுமையானது. இறக்கவேண்டிய வயதில் அவர் இல்லை. அவரை காலம் நம்மிடம் இருந்து பறித்துகொண்டு போய்விட்டது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தைரியமான மனது கொண்டவர்,'' என்றார்.
மரங்கள் கண்ணீர் சிந்தும் - நாசர்
விவேக்குக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் நாசர் ஒரு மாதத்திற்கு முன்னர் விவேக்குடன் பேசிய தருணத்தை நினைவுகூர்ந்தார். ''என்னால் இன்னும் அவரது மரணத்தை நம்பமுடியவில்லை. நகைச்சுவை நடிகராக தனக்கென அடையாளத்தை உருவாக்கிகொண்டவர். பல லட்சம் மரங்களை அவர் நட்டுள்ளார். மனிதர்களை விட அந்த மரங்கள் அவருக்காக கண்ணீர் சிந்தும். நான் ஒரு நண்பனை இழந்துவிட்டேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் அவருடன் நீண்டநேரம் உரையாடினேன். ஆன்மிகம், நாத்திகம், சுற்றுசூழல், உடல்நலம் என பலவற்றை பேசினார். தற்போது அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை,'' என்றார்.
இது மட்டுமின்றி, நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி, சூரியா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்டவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பாரதீய ஜனதா கட்சியின் குஷ்பூ, தேமுதிகவின் பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சமூக ஊடகங்களில் குவியும் இரங்கல் செய்திகள்
நடிகர் விவேக்கின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து, நடிகர்கள் மம்மூட்டி, தனுஷ், ஆர்யா, அர்ஜுன், துல்கர் சல்மான், மாதவன், அபிஷேக் பச்சன், சிவகார்த்திகேயன், விவேக் ஓபராய், பிரித்வி ராஜ், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் சிம்ரன், வரலட்சுமி சரத்குமார், ஹன்சிகா, தமன்னா, பார்வதி, வேதிகா மற்றும் இசையமைப்பாளர்கள் தமன், சந்தோஷ் நாராயணன், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், பாடகி சித்ரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்.
இதேபோன்று நடிகர் விவேக்கின் சாமானிய ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது இரங்கல்களை ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- அலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா?
- கொரோனா அலை: உத்தரகாண்டில் 200 பேருக்கு மேல் கூடத் தடை, கும்பமேளாவுக்கு விலக்கு
- பிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்?
- கொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன?
- புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: