You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார் - ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானதையடுத்து அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இன்று பிற்பகல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் தகன மயானத்துக்கு விவேக்கின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமான அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க உடலை சுமந்து செல்லும் வாகனத்தை சாலையின் இரு புறத்திலும் நின்றவாறு பார்த்தனர்.
முன்னதாக, தமிழக அரசு உத்தரவின்படி மாநில காவல்துறை சார்பாக சென்னை ஆயுதப்படையினர் மயானத்தில் அணிவகுத்து, வானை நோக்கி தங்களின் துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டு நடிகர் விவேக்கின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதும் சம்பிரதாய சடங்குகளை நிறைவேற்ற அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் 2015இல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தற்போது அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தேஜஸ்வினி, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் முன்னிலையில் இறந்த தனது தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்து உடலுக்கு தீ மூட்டினார்.
இதையடுத்து அவரது உடல் மாலை 6 மணியளவில் மின் தகன மேடைக்குள் எரியூட்ட அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திரைத்துரையினரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
காவல்துறை மரியாதை ஏன்?
விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க, அவரது கலை மற்றும் சமூகச் சேவையை கௌரவிக்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று மாநில அரசு சனிக்கிழமை காலையில் அறிவித்தது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. அதுவரை தேர்தல் நடத்தை விதிகள் மாநிலத்தில் அமலில் உள்ளதால் விவேக்குக்கு காவல்துறை மரியாதை வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு சார்பில் அனுமதி கோரப்பட்டது. அந்த அனுமதி ஏற்கப்பட்டதையடுத்து, விவேக்கின் இறுதி நிகழ்வில் போலீஸ் மரியாதைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
59 வயதாகும் விவேக், நேற்று வெள்ளிக்கிழமை அவரது சென்னை வீட்டில் கடுமையான மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.
மருத்துவமனை அறிக்கை
நேற்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயகுமார் சொக்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "காலை 11 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரது குடும்பத்தினரால் கொண்டு வரப்பட்டார். அவரது உடல்நிலையை நிபுணர்கள் குழு பரிசோதித்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் உள்ள விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது," என்று கூறப்பட்டிருந்தது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள்
முன்னதாக, நேற்று முன்தினம், வியாழக்கிழமை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் விவேக். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் அச்சம் நிலவுவதாகவும், அந்த அச்சத்தைப் போக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் அப்போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதற்காக, சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ஆகியோருக்கும், இரு மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் ட்வீட் செய்திருந்தார்.
ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் ஊசி போட்டுக் கொண்டதற்கும், மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
தடுப்பூசி - தமிழக அரசு கருத்து
அதேநேரம், தடுப்பூசி தொடர்பான சர்ச்சைக்கு விளக்கமளித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், "நடிகர் விவேக், மிகவும் நல்ல எண்ணத்தில்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் அளிக்கிறது. மத்திய அரசின் தடுப்பூசி வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இதய கோளாறு, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், விவேக்கின் நிலைமை எங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் உள்ளது. நேற்றைய தினம் எங்களுடன் இருந்தவருக்கு, இன்றைய தினம் இதுபோன்ற இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும், இதற்கும் நேற்று தடுப்பூசி போட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார்.
பிரார்த்தனைகள்
தொடர்ந்து, நடிகர் விவேக் குணமடைய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இந்நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக அக்கறை உள்ள கலைஞன்
தற்போது 59 வயதாகும் நடிகர் விவேக், நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறையுள்ள கலைஞராகவே பார்க்கப்பட்டார். தான் நடித்த படங்களிலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியதால், `சின்ன கலைவாணர்' என்று அவர் அழைக்கப்பட்டார்.
முற்போக்கான கருத்துகளை திரைப்படத்தில் பரப்பியதற்குப் பெயர் பெற்ற பழம் பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். விவேக்கின் நகைச்சுவைகளும் அப்படிப்பட்ட கருத்துகளைத் தாங்கி வந்ததாக கருதப்பட்டதால், அவர் சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என அக்கறை காட்டினார். இதுவரையில் 33,23,000 மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கோடி மரக் கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டிருந்தார் அவர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் நடிகர் விவேக்.
யார் இந்த விவேக்?
பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் அளிக்கிற தகவல்கள்:
நகைச்சுவை நடிகர் விவேக் 1987ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் இயக்குனர் பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர்
கோவில்பட்டியில் பிறந்த இவர், படிப்பு மற்றும் வேலை காரணமாக சென்னைக்கு குடியேறினார்.
1980களில் நடிக்க தொடங்கியிருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கென நகைசுவை பணியில் மாற்றங்களை செய்து, தலைமுறைகளை கடந்தும் மக்களின் மனங்களின் இடம்பெற்றவர்.
ஆரம்பகட்டத்தில் ஒரு சில நகைச்சுவை காட்சிகளில் மட்டுமே தோன்றிய அவர், 1990களில் பல படங்களில் கதாநாயகனின் நண்பனாக, கதையில் வலுவான முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
நகைச்சுவை மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை பேசியவர். மூடநம்பிக்கை, மக்கள் தொகை பெருக்கம், ஊழல், லஞ்சம், பெண் சிசுக்கொலை, பெண்கல்வி, வறுமையில் வாடும் நகரவாசிகளின் வாழ்க்கை என பலவிதமான விஷயங்களை நகைச்சுவை வாயிலாக மக்களுக்கு கொண்டுசென்றார்.
புதுப்புது அர்த்தங்கள், ரன், மின்னலே, நம்மவீட்டுக் கல்யாணம், தூள் உள்ளிட்ட பல படங்களில் விவேக்கின் நகைச்சுவை நடிப்பு பாணி மிகவும் பிரபலமானது.
தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நான்கு முறைபெற்றுள்ளார் . மேலும்,
2009ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.
சமீபத்தில், நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
- அலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா?
- கொரோனா அலை: உத்தரகாண்டில் 200 பேருக்கு மேல் கூடத் தடை, கும்பமேளாவுக்கு விலக்கு
- பிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்?
- கொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன?
- புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: