இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு அனுமதி: எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?

சமீப நாட்களாக இந்தியாவில் தினமும் ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசியைப் பயன்படுத்த இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (டி.ஜி.ஜி.ஐ) அனுமதி வழங்கியிருக்கிறது.

ஏற்கெனவே ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவதாக ரஷ்யத் தடுப்பூசி இணைந்திருக்கிறது.

வைரஸுக்கு எதிராக 92 சதவிகிதம் வரை ஸ்புட்னிக்-V தடுப்பூசி பாதுகாப்பு அளிப்பதாக பரிசோதனைத் தரவுகள் அடிப்பையில் லேன்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 59 நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருப்பதாக இதைத் தயாரிக்கும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் இதுவரை 10 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1.60 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 880 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனால் புதிய தடுப்பூசிகளுக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகாமல் தடுக்க மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், தடுப்பூசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் கட்டத்தை அம்மாநிலம் எட்டியிருக்கிறது.

முன்னதாக, ஸ்புட்னிக் V தடுப்பூசி மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கோரி ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் மத்திய அரசிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பம் செய்தது. இதைத்தொடர்ந்து தடுப்பூசி மருந்து தயாரிப்பின் முழு ஆய்வுத் தரவுகளை சமர்ப்பிக்க இந்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டங்களின் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமை மத்திய நிபுணர்கள் குழு கூடி ஸ்புட்னிக் V தடுப்பூசி மருந்தை அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்தது.

ஸ்புட்னிக் V தடுப்பூசியை 2 டிகிரி முதல் 8 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். இதை இரண்டு டோஸ்களாக போட்டுக் கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

இதே ஸ்புட்னிக் தடுப்பூசியை ரெட்டி நிறுவனம் மட்டுமின்றி, கிளாண்ட் ஃபார்மா, பனாக்கியா பயோடெக், விர்செள பயோடெக், ஸ்டெலிஸ் பயோஃபார்மா ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிக்க ரஷ்யா கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 852 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் V தடுப்பூசி மருந்துக்கு கடந்த ஃபிப்ரவரி மாதம்தான் உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, தமது நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசியை ரஷ்யா செலுத்தத் தொடங்கியது. இந்த நிலையில், ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு 92 சதவீத வலிமை இருப்பதாக லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் ஆய்வுக்கட்டுரை வெளிவந்த பிறகு, அந்த தடுப்பூசி மருந்து மீதான உலக நாடுகளின் பார்வை மாறத் தொடங்கியது.

ஸ்புட்னிக் V பெயர் வைக்க என்ன காரணம்?

ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அங்கமான காமலேயா நோய்த்தொற்றியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம்தான் ஸ்புட்னிக் V தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. ஆனால், இந்த தடுப்பூசி மருந்துக்கு 1957இல் தனது முதலாவது செயற்கைக்கோளுக்கு இடப்பட்ட பெயரான ஸ்புட்னிக் என்ற பெயரை ரஷ்யா வைத்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த ஸ்புட்னிக்தான் உலகிலேயே முதலாவது செயற்கைக்கோளாகும்.

எதைச்செய்தாலும் அதில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ள ரஷ்யா, விண்வெளித்துறையில் சாதித்தை போல, உலகிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் காட்டிய ஆர்வத்தின் விளைவாக அந்த தடுப்பூசிக்கும் ஸ்புட்னிக் V என்ற பெயரை சூட்டியுள்ளது.

ஐந்து முக்கிய தகவல்கள்

  • தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபைஸர், பயோஎன்டெக், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் வைரஸ் தடுப்பூசிக்கு பிறகு 91.5 சதவீத வலிமையான ஆற்றலை கொண்டுள்ளதாக ஸ்புட்னிக் V வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • சர்வதேச சந்தையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ஒரு டோஸுக்கு 10 டாலர்கள்.
  • இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசியை தயாரிக்க ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் என்ற அமைப்புடன் ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இதேபோல, பனாக்கியா பயோடெக் என்ற நிறுவனமும் இதே தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ்கள் மருந்து தயாரிப்போம் என கூறியுள்ளது.
  • தற்போது இந்தியா மட்டுமின்றி வெனிஸ்வேலா, பெலாரூஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இந்தியாவில் 18 வயது முதல் 99 வயது வரை உள்ள 1,600 பேர் இந்த மருந்தை பெற பதிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: