மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு, ஒரு மாவோயிஸ்ட் பலி

பட மூலாதாரம், Ganesh
சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவடாவில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்டை கொன்றுவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதே நேரம், பிஜப்பூரில் ஒரு தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 வாகனங்கள் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோரால் கொளுத்தப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மாவோயிஸ்டுகளோடு நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் ஒரு மாவோயிஸ்டின் உடல் கைப்பற்றப்பட்டதாகவும் தந்தேவடா காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா பிபிசியிடம் தெரிவித்தார். அந்த இடத்தில் பல மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்க அல்லது காயம்பட்டிருக்கக்கூடும் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இன்னும் பல இடங்களில் நடவடிக்கை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் பெயர் வாட்டி ஹியுங்கா என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், இவரைப் பிடிக்க 1 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது போலீஸ்.

பட மூலாதாரம், Ganesh
பிஜப்பூர் அருகே நடந்த தீவைப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கே போலீஸ் படைகள் விரைந்ததாக காவல் கண்காணிப்பாளர் காமலோசன் காஷ்யப் தெரிவித்தார். அந்த தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணியை நிறுத்தும்படி முன்கூட்டியே மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த மாவோயிஸ்டுகள் வாகனங்களில் இருந்த தொழிலாளர்களை இறங்கச் சொல்லிவிட்டு தீவைத்தனர். அத்துடன், எதிர்காலத்தில் அங்கே வேலை செய்யவேண்டாம் என்றும் அவர்கள் தொழிலாளர்களை எச்சரித்துச் சென்றனர்.
அண்மைக்காலமாக இந்தப் பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் நடந்த ஒரு மாவோயிஸ்ட் தாக்குதலில் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
மார்ச் 26ம் தேதி இந்த பிஜப்பூர் பகுதியில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் புத்தாராம் என்பவர் காஷ்யப் மாவோயிஸ்ட் என்று சந்தேகிக்கப்படுவோரால் கொல்லப்பட்டார்.
பிற செய்திகள்:
- இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை
- இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
- கட்டாய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - தகவல் ஆணைய உத்தரவு சொல்வது என்ன?
- மேற்குவங்கத்தில் மத்திய பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி - நடந்தது என்ன?
- சர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












