You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா தோழி சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: திட்டமிட்ட சதியா? - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருமான வி.கே.சசிகலாவுக்கு வாக்கு இல்லை' என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் இருந்து சசிகலா ஒதுங்கியுள்ள நிலையில், `வாக்களிக்கவும் வாய்ப்பில்லை' என்ற சூழலால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். என்ன நடந்தது?
ஆன்மிக பயண சர்ச்சை
சொத்துக் குவிப்பு வழக்கின் சிறை தண்டனை மற்றும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை ஆகியவை முடிந்து பெங்களூரு இருந்து கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா சென்னை திரும்பிய பிறகு, தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியுள்ளார்.
அங்கிருந்தபடியே அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வந்தவர், ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். இதன்பிறகு தஞ்சாவூர், காஞ்சிபுரம் என ஆன்மிக தலங்களுக்கு அவர் சென்று வந்தார்.
அவரது பயணத்தின்போது உள்ளூரில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர்கள் அவரைச் சந்தித்து ஆசி பெறுவதையும் வழக்கமாக வைத்திருந்தனர். 'இது ஆன்மிக பயணமாக.. அரசியல் பயணமா?' எனவும் சர்ச்சைகள் எழுந்தன.
சசிகலா, இளவரசி, விவேக் - 3 பேரின் வாக்குகள்
சசிகலாவின் ஆன்மிக யாத்திரையின்போது, செய்தியாளர்கள் கேள்விகளை அடுக்கியபோதும், ''கடவுளை வழிபட மட்டுமே வந்தேன்'' என சசிகலா விளக்கமும் கொடுத்தார்.
இந்நிலையில், ஆயிரம் விளக்குத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வி.கே.சசிகலாவின் பெயர் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சசிகலாவின் உறவினர்கள் சிலரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம்தான், கடந்த 30 ஆண்டுகாலமாக சசிகலாவின் முகவரியாக இருந்தது. இதே முகவரியில் சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி இளவரசி, விவேக் ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையும் இதே முகவரியில் இருந்தது."
"ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஜெயலலிதா வாக்களிக்கச் செல்லும்போதெல்லாம், சசிகலாவும் உடன் சென்று வாக்களிப்பது தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை, அரசுடைமையாக்கிவிட்டனர். இதனால், இயல்பாகவே ஓட்டளிக்கும் உரிமையை சசிகலா இழந்துவிட்டார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தவருக்கு, இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் இல்லாமல் போனதில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்," என்கின்றனர் அவர்கள்.
திட்டமிட்ட சதியா?
"முகவரி மாற்றம் குறித்து மனு கொடுத்திருந்தால் சசிகலாவுக்கு வாக்குரிமை கிடைத்திருக்குமே?" என ஆயிரம் விளக்குத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் வைத்தியநாதனிடம் பிபிசி தமிழ் சார்பாகக் கேட்கப்பட்டது.
"அவர் இந்தத் தேர்தலில் வாக்கு செலுத்தினால் மிகப் பெரிய புரட்சி வந்துவிடும். 2011 தேர்தலில் ரஜினி ஓட்டுப் போட்டு வந்த பிறகு, யாருக்கு வாக்களித்தேன் என சிம்பல் மட்டும்தான் காட்டினார். அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வாக்களிப்பது என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. பொதுவாக, ஒருவர் இறந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்படும். இல்லாவிட்டால், அவரது பெயரை நாளிதழ்களில் குறிப்பிட்டு விளம்பரம் செய்வார்கள். சசிகலா எங்கே இருக்கிறார் என்பது தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும். சிறை அதிகாரிகள் மூலமாகக்கூட அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தவறிவிட்டனர்" என்கிறார்.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதா?' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆமாம். 15 நாட்களுக்கு முன்னரே நாங்கள் மனு கொடுத்தோம். எங்களிடம் பேசிய அதிகாரிகள், `இறுதிப் பட்டியலில் சேர்க்கிறோம்' என்றார்கள். ஆனால், இறுதிப் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்கவில்லை. யாருடைய அழுத்தத்தின் பெயரால் அவரது பெயரை சேர்க்க மறுத்தார்கள் என்பது எங்களின் கேள்வி. சசிகலாவின் ஒரு ஓட்டு, ஆயிரம் விளக்குத் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். சசிகலாவுக்கு ஓட்டுரிமை கொடுக்கும் வரையில் இந்தத் தொகுதியில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்துவோம். இல்லாவிட்டால் நாளை பேலட் வாக்கை சசிகலா செலுத்துவதற்கு உரிமை கோருவோம். தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த உள்ளோம்," என்கிறார் வைத்தியநாதன்.
அ.தி.மு.க தரும்அரசியல் அழுத்தமா?
`சசிகலாவுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதில் அரசியல் உள்ளதா?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"நிச்சயமாக இல்லை. சசிகலா, இளவரசி, விவேக் ஜெயராமன் ஆகியோருக்கு வேதா நிலைய முகவரியில் வாக்குகள் இருந்தன. அ.தி.மு.க அரசு, எப்போது வேதா இல்லத்தை அரசுடையாக்கியதோ, அப்போதே அவர்களின் சொந்தங்கள் வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் தொடர்பான மனுவை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு மனு கொடுப்பதற்கு சசிகலா தரப்பினர் தவறிவிட்டார்கள். அவர் அரசியலுக்கு வராமல் ஒதுங்கியிருந்து, `இந்தக் கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும்' எனக் கூறியதை ஓ.பி.எஸ் வரவேற்றார். ஒருவேளை சசிகலா ஓட்டு போட்டிருந்தால்கூட இரட்டை இலைக்குத்தான் போட்டிருப்பார். அந்தவகையில் எங்களுக்கு ஒரு வாக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாகத்தான் பார்க்கிறேன்," என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: