You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 22 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் சனியன்று நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அந்த மாநிலத்தின் காவல்துறை தெரிவிக்கிறது. குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர்.
மாவோயிஸ்டுகள் வலுவாக உள்ள பகுதிகளாகக் கருதப்படும் பிஜப்பூர் மற்றும் சுக்மா ஆகிய மாவட்டங்களில் இருக்கும் தெற்கு பஸ்தார் காட்டுப் பகுதியில், 2,000 பேருக்கும் அதிகமான படையினரைக் கொண்ட வெவ்வேறு குழுக்கள் வெள்ளி இரவு மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
இந்திய ரிசர்வ் காவல் படையினர், 'கோப்ரா' படையினர், சத்தீஸ்கர் மாநில காவல் துறையின் சிறப்புப் படையினர் உள்ளிட்டோர் இவர்களில் அடக்கம்.
அப்போது பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லையில், சனிக்கிழமை மதியம் அவர்களைச் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இருதரப்பு மோதல் மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாகவே தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டு தலைவர் மாத்வி ஹித்மா என்பவர் குறித்த தகவல் மாவோயிஸ்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசுப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தாக்க திட்டமிட்ட மூன்று மாவோயிஸ்டுகள் கடந்த வியாழனன்றுதான் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையில் காயமடைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த 37 பேர் பிஜாப்பூர் மற்றும் ராய்ப்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மாவோயிஸ்டு தாக்குதல் இது என நம்பப்படுகிறது.
"படையினரின் தியாகம் என்றும் நினைவில் வைத்து கொள்ளப்படும்" என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாதுகாப்பு படையினரின் தியாகத்திற்கு முன் நான் தலை வணங்குகிறேன். படையினரின் வீரத்தை நாடு மறவாது. அமைதி மற்றும் வளர்சிக்கு எதிரான எதிரிகளை நோக்கிய நடவடிக்கை தொடரும்." என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் படையினரின் தியாகம் வீணாகாது என தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- 2016இல் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் அதிமுக நிறைவேற்றியது எத்தனை? #BBC_Exclusive
- பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்த அமேசான் ஓட்டுநர்கள்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்
- அனிதா இறப்பும் அரசியலும்: "நீட் தேர்வால் தமிழகம் இழந்தது அதிகம்" - விலக்குப் பெறுவது சாத்தியமா?
- வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: