You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தரப் பிரதேசத்தில் சேவிங் ப்ளேடால் 8ஆம் வகுப்பு படித்தவர் செய்த சிசேரியன் அறுவை சிகிச்சை: தாய், சேய் பலி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படித்த ஒருவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில் தாய், சேய் இருவருமே உயிரிழந்துவிட்டதாக சனியன்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
உள்ளூர் ஊடகங்களின் செய்தியின்படி, சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள பால்திராய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சைனி எனும் கிராமத்தில் இது நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள ஓர் அனுமதி பெறாத மருத்துவமனையில் 35 வயதாகும் பூனம் எனும் பெண்மணி கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு ராஜேந்திர குமார் சுக்லா என்பவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பூனம் மற்றும் அவரது குழந்தை இருவருமே இறந்து விட்டனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
ராஜேந்திர குமார் சுக்லா எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்றும் அவர் பணியாற்றி வந்த மருத்துவமனையை நடத்தி வந்த ராஜேஷ் குமார் சாஹ்னி என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளவர் என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருடன், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மருத்துவ உதவியாளர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பூனமின் கணவர் ராஜாராம் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூனமுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்கு ராஜேந்திர குமார் முகச் சவரம் செய்ய பயன்படுத்தப்படும் ப்ளேடை பயன்படுத்தியதாகவும் அறுவை சிகிச்சை நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜேஷ் குமார் சாஹ்னி நடத்திவரும் 'மா சாரதா' மருத்துவமனையில் கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யும் பணிக்காக ராஜேந்திர குமார் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜேஷ் குமார் சாஹ்னியின் பதிவு செய்யப்படாத இந்த மருத்துவமனை போலி மருத்துவர்கள் மற்றும் போலி மருத்துவ ஊழியர்களைக் கொண்டு இயங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதியின்றி இயங்கிவரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிற செய்திகள்:
- மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி முதல்வர் பதவியை தக்கவைப்பாரா? மார்க்சிஸ்ட் கணக்கு என்ன?
- சசிகலா தஞ்சை பயணத்தில் என்ன நடந்தது: "சொத்தும் வேண்டாம், சென்டிமெண்ட் வீடும் வேண்டாம்"
- தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த உலகின் இரண்டாவது பெண்
- ஐந்தரை ஆண்டுகளாக ராய்பூர் விமான நிலையத்தில் நிற்கும் வங்க தேச விமானம் - காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: