அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன்?: என்ன சொன்னார் எடப்பாடி பழனிசாமி - விவரிக்கும் பிரேமலதா

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பக்குவமான முறையில் நடந்துகொள்ளவில்லையென தே.மு.தி.கவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதலில் ஆளும் அ.தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடத்திய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், கேட்ட இடங்கள் தங்களுக்கு ஒதுக்கப்படவில்லையெனக் கூறி, அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதற்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இடம்பெற்றது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த். அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

"ஜெயலலிதா இருந்தபோது, பிரசாரத்தையே நிறுத்திவிட்டு கேப்டனுடன் பேச்சு வார்த்தை நடத்தி 41 தொகுதிகளை ஒதுக்கினார். நாடாளுமன்றத் தேர்தலின்போது எடப்பாடி கே. பழனிசாமியுடன் நாங்களாகக் கூட்டணிக்குச் செல்லவில்லை. அவர்கள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலமாக எங்களிடம் வந்தார்கள். நாங்கள் கேட்காத நான்கு தொகுதிகளை ஒதுக்கினார்கள். எல்லாத் தொகுதிகளிலும் தோற்றோம். மறுபடியும் அதேபோல நடந்துவிடக்கூடாது என்பதால்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான பேச்சு வார்த்தைகளை டிசம்பர் மாதத்திலேயே துவங்க வேண்டுமெனக் கோரினோம். இது தொடர்பாக சுதீஷ், பார்த்தசாரதி போன்றவர்கள் அ.தி.மு.கவிடம் பேசினார்கள். நாங்கள் திரும்பத் திரும்ப இந்த விஷயத்தைச் சொன்னபோது எல்லோரும் கேலி செய்தார்கள்.

பிறகு பேச்சு வார்த்தை துவங்கி நடந்தாலும் கடைசிவரை முடிவுக்கே வரவில்லை. பேச்சுவார்த்தை நடத்தும்போதுகூட முதலில் மற்ற கட்சிகளுடன்தான் பேசினார்கள். இப்போது எங்களுக்குப் பக்குவமில்லையென எடப்பாடி கே. பழனிசாமி சொல்கிறார். ஜெயலலிதாதான் பக்குவமான அரசியல் செய்தார். அந்தப் பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை.

பேச்சுவார்த்தைக்கு முதலில் பா.ம.கவை அழைத்தார்கள். பிறகு பா.ஜ.கவை அழைத்தார்கள். தே.மு.தி.கவை கடைசியாகத்தான் அழைத்தார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசலாம் என்றால் அதை அவர்கள் ஏற்கவில்லை. பழனிசாமி பக்குவமில்லாத முதல்வராக இருந்தார். 4 முறை பேச்சு வார்த்தை நடந்தது. பிறகு, சுதீஷ் போய் பேசினார். அப்போதும் 13 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். 18 தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா தொகுதியும் கேட்டோம். ஆனால், 13 தொகுதிகளுக்கு மேல் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

அப்படியானால் "எந்தெந்தத் தொகுதிகள் என்றாவது சொல்லுங்கள்" என்று கேட்டோம். "முதலில் கையெழுத்துப் போடுங்கள், சொல்கிறோம்" என்றார்கள். இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதான் நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்தது.

பிறகு, சுதீஷ் போன் செய்து கடைசியாகக் கேட்டபோது, "இவ்வளவுதான் கொடுக்க முடியும் தம்பி; பிறகு உங்கள் இஷ்டப்படி செய்துகொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். பிறகு அந்தக் கூட்டணியில் தொடர்வது கடினம் என்றாகிவிட்டது. கனத்த மனதுடன் வெளியேறிவிட்டோம்.

எங்களிடம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால், கூட்டணி உடையக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருந்தோம். எடப்பாடி எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அளவு பக்குவம் எங்களுக்குக் கிடையாது என்பது உண்மைதான்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகுதான் எங்களிடம் டிடிவி தினகரன் பேசினார். 60 தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது," என அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியதை விவரித்தார் பிரேமலதா.

உங்கள் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ற வகையில்தான் இடங்களை ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்ததாகச் சொல்லப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 18 சதவீதம்தான் வாக்குகளைப் பெற்றது. அவர்கள் வெறும் 18 சதவீத இடங்களைத்தான் பெற்றிருக்கிறார்களா?" என்று கேள்வியெழுப்பினார் பிரேமலதா.

"நாங்கள் டிடிவி தினகரனுடன் செல்ல முடிவெடுத்த பிறகு, பொன்னார் தொடர்பு கொண்டு ஏன் வெளியேறுகிறீர்கள் என்று கேட்டார். நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தபோது நீங்கள் பேசியிருக்கலாமே என்று கேட்டேன்.

அ.தி.மு.க. கூட்டணி பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே, கட்சியினர் பலரும் தொடர்புகொண்டு, இந்தக் கூட்டணியில் போதுமான மரியாதை இல்லை. நாம் ஏன் இதில் இருக்க வேண்டும்? உள்ளாட்சித் தேர்தலிலும்கூட கேட்ட இடங்களைத் தரவில்லை. தந்த இடங்களிலும் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர் என்பதை சுட்டிக்காட்டினர். இருந்தாலும் அமைதி காத்தோம்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது இளங்கோவுக்காக தர்மபுரி தொகுதியைக் கேட்டபோது, திருச்சியைக் கொடுத்தார்கள். மோகன் ராஜாவுக்காக சேலத்தைக் கேட்டபோது சென்னையைக் கொடுத்தார்கள். இதனால்தான் தோல்வி ஏற்பட்டது" என்றார் பிரேமலதா.

இந்தத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை என்றும் தான் தன் தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்த பிரேமலதா, சுதீஷும் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும் எல்லாத் தொகுதிகளுக்கும் பயணம் செய்து பிரசாரம் செய்வார்கள் என்றும் பிரேமலதா தெரிவித்தார். இறுதிக் கட்டமாக விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :