You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மமதா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி: தான் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?
நந்திகிராமில் தேர்தல் பணியில் ஈடுபட்டபோது தான் தாக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
வருகின்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
எனவே அங்கு தேர்தல் பணிக்காக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். முன்னதாக புதன்கிழமையன்று காலை அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
தன்னைச்சுற்றி காவலர்கள் யாரும் இல்லாத சமயத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் தன்னை தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
"நான் எனது காரின் அருகில் இருக்கும் சமயத்தில் சிலர் என்னை தள்ளிவிட்டனர். எனக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனது கால் வீங்கியுள்ளது. கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. நான் மருத்துவரைக் காண செல்கிறேன்," என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
"இது ஒரு சதி. என்னை காக்க காவலர்கள் யாரும் என்னுடன் இல்லை. அவர்கள் என்னை காயப்படுத்த வேண்டும் என்றுதான் வந்துள்ளனர். நான் கொல்கத்தாவிற்கு திரும்பி செல்ல முடிவெடுத்துள்ளேன்," என்று தெரிவித்தார் மமதா.
வீடியோவில் தனது கால்களைக் காண்பித்து, `எவ்வளவு வீங்கியுள்ளது என்பதை பாருங்கள்` என்கிறார் மமதா.
மமதா எஸ்எஸ்கேஎம் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் பந்தோபாத்யாய் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல் கட்ட சிகிச்சையில் இடது மூட்டு மற்றும் காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் வலது தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் கழுத்தில் காயம்பட்ட அடையாளங்கள் தெரிகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மம்தா தெரிவித்ததாகவும் பந்தோபாத்யாய் தெரிவித்துள்ளார். அவர் மேலும் 48 மணி நேரங்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் உத்தரவு
இதற்கிடையில் மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் மம்தாவிடம் தொலைப்பேசியில் இதுகுறித்து விசாரித்தாக தெரிவித்துள்ளார்.
"மமதாவைத் தொலைபேசியில் அழைத்து பேசினேன். இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு இயக்குநரிடம் தகவல் கேட்டுள்ளேன். சுகாதாரத் துறை செயலர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது," என ஆளுநர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளின் கருத்து
பாஜகவின் மாநில துணைத் தலைவர் அர்ஜுன் சிங், மமதா அனுதாபம் பெறப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸை சேர்ந்த மேற்கு வங்கத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியின் மக்களை உறுப்பினர் அதிர் ரஞ்சன் செளத்ரி, இது ஒரு `அரசியல் நாடகம்` எனத் தெரிவித்துள்ளார்.
"தேர்தல் முடிவுகளை கணித்துவிட்டு அவர் (மம்தா) இவ்வாறு நாடகம் ஆடுகிறார். முதலமைச்சர் பொறுப்பை தவிர்த்து காவல்துறையும் அவரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அப்படியிருக்க அவரைச் சுற்றி காவல்துறையினர் இல்லாமல் எப்படி இருந்திருக்க முடியும்," என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மம்தா தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு யார் பொறுப்போ அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மம்தா உடனடியாக நலம் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மமதா மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தேர்தல்
மேற்கு வங்க சட்டமன்றத்திற்கான தேர்தல் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 வரை நடைபெறவுள்ளது.
மமதா பானர்ஜி போட்டியிடுவதாக தெரிவித்துள்ள நந்திகிராமில் ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்