கேரளாவில் இஸ்லாமியர் - கிறிஸ்தவர் ஒற்றுமையில் பாஜக பாதிப்பை ஏற்படுத்துமா?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசிக்காக

கேரளாவில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை தன்பக்கம் ஈர்க்கும் ஒருங்கிணைந்த முயற்சியை பாஜக மேற்கொண்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், கணிசமான சிறுபான்மை சமூகங்கள் ஒரே தொகுதியாக வாக்களிக்கும் சாத்தியக்கூறு குறைந்துவருகிறது.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் இணைந்து வாக்களிப்போரில் 48 சதவிகிதம் உள்ளனர். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். இந்த தென் மாநிலத்தில் பாஜகவை அதிகாரத்திற்கு வரவிடாமல் சிறுபான்மையினர் தடுத்து வைத்துள்ளனர். சிபிஎம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃ.ப்) ஆகிய இரண்டுமே கேரளாவில் மாறிமாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

ஆனால் இந்த முறை இதில் சிறிதளவாவது தாக்கம் ஏற்படக்கூடும். தேவாலயத்தில் இருக்கும் பிளவுகளின் எதிர்முனைகளில் இருக்கும் சில கிறிஸ்துவப் பிரிவினரை, தன்பக்கம் இழுக்க பிஜேபி-ஆர்எஸ்எஸ் முயற்சி மேற்கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

பாஜக தனது விருப்பமான `லவ் ஜிகாத்'-ஐ இந்த முறை கிறிஸ்துவர்களை நோக்கியும், சொல்லிவருகிறது. இவை இரண்டையும் குறித்து சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலங்கரா தேவாலயத்தில் நிலவிவந்த 400 ஆண்டுகால பழமையான பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றம் ஒரு இணக்கமான தீர்வைக் காணமுடியாத நிலையில், பிரதமர் நரேந்திர மோதி தலையிட்டபோது இந்த முயற்சிகள் ஒரு உத்வேகத்தை பெற்றன.

கடந்த வாரம், மலங்கரா தேவாலயத்தின் தலைவர்களும், மற்ற பிரிவான யாக்கோபிய திருச்சபையும், மோகன் பகவத்துக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்ஸின் மூன்றாவது மிக முக்கியமான தலைவரான மன்மோகன் வைத்யாவை சந்தித்துள்ள நிலையில் மற்றொரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான உறுதியான யோசனைகளும் இல்லை என்றும் ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைக்கு இணக்கமான தீர்வுகாண உறுதியளித்தார் என்றும் தேவாலயத்தின் இருபிரிவுகளின் செய்திதொடர்பாளர்களும் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், பாஜகவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அவர்கள் ஒரு குறிப்பைக் கொடுத்தனர்.

"எப்படியோ, அவர்கள் திருச்சபையுடன் ஒரு நல்ல உறவைக் கட்டியெழுப்பியுள்ளனர். உறவை வளர்த்துக் கொள்ள இது போன்ற முயற்சியை பாஜக மேற்கொண்ட முந்தைய சந்தர்ப்பத்தை என்னால் நினைவுபடுத்தி பார்க்க முடியவில்லை. அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் உள்ளது,'' என்று ஜேக்கபைட் (Jacobite) தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் பிஷப் டாக்டர் குரியகோஸ் தியோசோபிலோஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிஷப் தியோசோபிலோஸ் மற்றும் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் பாதிரியார் ஜான்ஸ் அப்ரஹாம் கோனெட் ஆகிய இருவருமே, ஆர்எஸ்எஸ் தலைவருடன் அரசியல் கலந்துரையாடல் இருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்கள்.

"கூட்டத்திற்குச் சென்ற ஆயர்களிடம் நான் பேசினேன். தேர்தல்கள் குறித்து எந்தக் பேச்சும் இருக்கவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். வேறுபாடுகளுக்கான காரணங்களை மட்டுமே நாங்கள் விளக்கினோம்,'' என்று பாதிரியார் கோனெட் பிபிசியிடம் தெரிவித்தார்.

மலங்கரா தேவாலய சர்ச்சை

மலங்கரா தேவாலயத்தின் இரு பிரிவுகளுக்கிடையேயான கருத்து வேறுபாடு 1599க்கு முற்பட்டது. அடிப்படை பிரச்னை என்னவென்றால், 'பேட்ரியாக் ஆஃப் ஆண்டியோக் ஆண்ட் ஆல் தி ஈஸ்ட்,' யாரை பின்பற்றவேண்டும் என்பதே. செயின்ட் பீட்டர் மூலம் அப்போஸ்தலிக்க வாரிசு என்று கூறப்படுவதை யாக்கோபியர்கள் பின்பற்றுகிறார்கள். அதே நேரம் ஆர்த்தடாக்ஸ் பிரிவில் மெட்ரோபொலிடன் பிஷப், தலைமை பொறுப்பில் உள்ளார். அவர் கேரளாவின் கோட்டயத்தில் வசிக்கிறார்.

பல ஆண்டுகளாக, வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் ஒரு தீர்வையும் ஏற்படுத்தவில்லை. 1934 முதல் பல தசாப்தங்களாக இந்த சர்ச்சை நீதிமன்றங்களில் இருந்தது. 2017ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தேவாலயங்கள் மீதான யாக்கோபியரின் உரிமைகளை ரத்து செய்தது.

நீதிமன்ற உத்தரவின் பின்னர் 52 தேவாலயங்களை ஆர்த்தடாக்ஸ் பிரிவிடம் இழந்த யாக்கோபியர்களுக்கு அடக்கம் செய்வதற்கான உரிமைகளை வழங்க, இடதுசாரி முன்னணி அரசின் அவசரச்சட்டம் தேவைப்பட்டது.

எல்.டி.எஃப் அரசு தேவாலயங்களையும் மீட்டுத்தரவேண்டும் என்று யாக்கோபியர்கள் விரும்பினர். ஆனால் தங்க கடத்தல் வழக்கு போன்ற பிரச்னைகள் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசிடமிருந்து விரோதப்போக்கை எதிர்கொண்டுள்ள ஆளும் இடதுசாரி முன்னணி அரசு, உச்ச நீதிமன்றத்துடன் மோத விரும்பவில்லை.

யாக்கோபியரின் அடக்கம் தொடர்பான உரிமைகள் குறித்த அவசரச்சட்டத்தை அமல் செய்ததில் எல்.டி.எஃப் அணுகுமுறை சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சட்டசபை தேர்தல்களுக்கு முன்னோட்டம் என்று கருதப்பட்ட பஞ்சாயத்து தேர்தல்களில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப்பின் வலுக்கோட்டை என்று கருதப்பட்ட தொகுதிகளில், யாக்கோபிய திருச்சபையை பின்பற்றும் மக்கள், எல்.டி.எஃப்-ஐ முழு மனதுடன் ஆதரித்தனர்.

இறந்த உடல்களை நல்லடக்கம் செய்ய நிறைவேற்றப்பட்ட அவசரசட்டத்திற்காக, எல்.டி.எஃப் அரசுக்கு மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை பெயர் வெளியிட விரும்பாத யாக்கோபிய திருச்சபையின் பிரதிநிதி ஒப்புக்கொண்டார். "ஆனால், எங்கள் தேவாலயங்களை பாதுகாக்க எல்.டி.எஃப், சட்டம் நிறைவேற்றாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இப்போது மக்கள் குழப்பத்தில் உள்ளனர். தேவாலயங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் 80 சதவிகித வாக்குகள் எல்.டி.எஃப்-க்குச் சென்றிருக்கும் என்பது உறுதி. மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது இப்போது எங்களுக்குத் தெரியவில்லை. மூன்று கட்சிகளுக்கிடையில் வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன,'' என்றார் அவர்.

"நாங்கள் எந்தவொரு கட்சியையும் அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லை. மக்களுக்கு உண்மைநிலை தெரியும். அவர்கள் தங்கள் வாக்குகளை பொறுப்புடன் அளிப்பார்கள் என்று நம்புகிறோம். எல்.டி.எஃப்-க்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எங்களிடம் எதுவும் இல்லை. நாங்கள் இதுவரை எந்த அரசியல் நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை,'' என்று பாதிரியார் கேனெட் தெளிவுபடுத்தினார்.

செங்கனூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு (ஆர்.பாலாசங்கர்) வாக்களிக்குமாறு தனது தேவாலயம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுவதை பாதிரியார் கோனெட் மறுத்தார். பாலாசங்கர் மத்திய அரசிடம் வேண்டுகோள்விடுத்து, ஆலப்புழா மாவட்டம் செப்பாட்டில் 1,000 ஆண்டுகள் பழமையான தேவாலயம், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்படாமல் பார்த்துக் கொண்டார்.

வழிபாட்டு மாடத்தில் அரிய சுவர் சித்திரங்களைக் கொண்ட தேவாலயத்தை கையகப்படுத்துமாறு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை கேட்டுக்கொள்ள மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. பாலாசங்கரை ஆதரிக்குமாறு தன் மக்களை தேவாலயம் கேட்டுக்கொண்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்கு பதிலளித்த பாதிரியார் கோனெட் , "ஜோடிக்கப்பட்ட செய்யப்பட்ட தேவாலய கடித தாளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்ட போலி செய்திகள் அவை," என்றார்.

சைரோ மலபார் கத்தோலிக்க தேவாலயத்தின் மேஜர் ஆர்ச்பிஷப், கார்டினல் ஜார்ஜ் அலென்சேரியை, கேரளாவுக்காக பாஜகவின் பார்வையாளரும், கர்நாடகாவின் துணை முதலமைச்சருமான டாக்டர் சி.என்.அஸ்வத்நாராயண் சென்றவாரம் சந்தித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தேவாலய நிலம் தொடர்பான சர்ச்சையை அடுத்து, ஜார்ஜ் அலென்சேரியின் நிர்வாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

"இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த நேரத்தில் அனைத்து சமூகங்களின் தலைவர்களையும் நாங்கள் சந்தித்து வருகிறோம். நாங்கள் தேர்தல்களைப் பற்றி விவாதிக்கவில்லை,'' என்று டாக்டர் அஸ்வத்நாராயண் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்கு யுடிஎஃப் பாரபட்சம் காட்டுகிறதா?

சமீபத்திய மாதங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப்-க்குள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் (ஐ.யூ.எம்.எல்) பங்கு போன்ற பிரச்னைகளின் மெதுவான மற்றும் நிலையான அளவுத்திருத்தத்தை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கணிசமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட வடக்கு கேரள மாவட்டங்களின் மீது கட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் ஐ.யூ.எம்.எல், யு.டி.எஃப் இன் `உந்து சக்தி 'என்று விவரிக்கப்பட்டுள்ளது.

யுடிஎஃப் ஆட்சியின் போது முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதாகவும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை என்றும் சமூக ஊடக தளங்களில் சில காலமாக மக்கள் பகிர்வுகளை பெற்று வருவதாக அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டுகின்றனர். யுடிஎஃப் ஆட்சிக்கு வந்தால், கல்வி மானியங்களின் நன்மை, கிறிஸ்தவ சமூகத்திற்கு கிடைக்காது, முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதே இதன் அடிப்படை செய்தி.

"இரண்டு சிறுபான்மை சமூகங்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிக்கும் சில சக்திகள் உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. முஸ்லிம் நிறுவனங்களுக்கு ஆதரவாக 80:20 ஆக இருந்த மானியங்களின் விகிதம் திருத்தப்பட வேண்டும். முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்குள் உள்ள ஒவ்வொரு துணை சமூகத்தின் பொருளாதார நிலையின் மாற்றத்தையும் நாம் கவனிக்க வேண்டும்,'' என்று எர்ணாகுளம்-அங்கமாலி மறைமாவட்டத்தின் தலைமை பேராயர், பாதிரியார் பென்னி ஜான் மரம்பரம்பில் பிபிசியிடம் தெரிவித்தார்.

எர்ணாகுளம் அங்கமாலி மறைமாவட்டத்தின் பாதிரியார் கவுன்சிலின் செயலாளர் குரியகோஸ் மண்டோடன், "அந்த விகிதம் தீர்மானிக்கப்பட்ட நேரத்தில், முஸ்லிம்கள் உண்மையில் பின்தங்கியவர்களாக இருந்தனர். தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் இது சமீபத்தில் ஒரு பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது.'' என்றார்.

"யு.டி.எஃப் ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்தவ சமூகத்தின் உரிமைகள் குறைக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. யுடிஎப்பின் மிக முக்கியமான தலைவர் உம்மன் சாண்டி என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கல்வி நிறுவனங்களுக்கான மானியங்களின் விகிதம் ஏற்றக்குறைவாக இருக்கிறது என்பது உண்மை. இருப்பினும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த மோதலும் இல்லை. யுடிஎஃப் இந்தத் துறையில் சமநிலையை பராமரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று பிஷப் தியோபிலோஸ் தெரிவித்தார்.

பாதிரியார் கோனெட்டும் அத்தகைய பயம் ஏதும் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில் ஐ.யூ.எம்.எல் இன் தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குன்ஹல்லிகுட்டி பாரபட்ச குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

"எங்கள் மாநிலத்தில் இத்தகைய அச்சத்திற்கு எந்த காரணமும் இல்லை. அமைச்சரவையில் முழுமையான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர்தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. அப்போது நிதியமைச்சராக கேரள காங்கிரஸின் காலஞ்சென்ற கே.எம்.மணி இருந்தார். முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் பிளவுபடுத்த தீவிர முயற்சிகள் உள்ளன என்று நான் கருதுகிறேன்,'' என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"மேலும், பாரம்பரியமாக தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு அனைத்து சமூகத் தலைவர்களுடனும் நாங்கள் விவாதிக்கிறோம். தேவாலய தலைவர்களை நான் தனித்தனியாக சந்தித்தேன். அதே போல் உம்மன் சாண்டி மற்றும் ரமேஷ் சென்னித்தலா (காங்கிரஸ் தலைவர்கள்) ஆகியோரையும் சந்தித்தேன், ஆனால் இந்த பிரச்னைகள் யாராலும் எழுப்பப்படவில்லை,'' என்று அவர் குறிப்பிட்டார்.

லவ் ஜிகாத்

முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை குறிவைத்து, அவர்களை கவர்ந்தெழுந்து, திருமணத்திற்கு முன் அவர்களை இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்கிறார்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் சமீபத்திய மாதங்களில் இது, "கிறிஸ்தவ பெண்களை கவர்ந்தெழுப்பதாக.'' மாறியுள்ளது.

பல்வேறு தேவாலய பிரிவுகளின் செய்தித் தொடர்பாளர்களும் லவ் ஜிகாத் குற்றச்சாட்டை, நடைமுறையில் இல்லை என்று கூறி நிராகரித்தனர். "அது நடந்தாலும், அங்கும் இங்கும், எதோ சில சமயங்களில் நடக்கிறது," என்கிறார் ஒரு பாதிரியார்.

ஆனால், கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் (கே.சி.பி.சி) செய்தித் தொடர்பாளரும், துணை பொதுச்செயலாளருமான பாதிரியார் ஜேக்கப் பலகப்பிள்ளி, "லவ் ஜிகாத் பற்றிய விளக்கத்தை நாங்கள் நம்பவில்லை. திருமணத்திற்காக பெண்கள் அழைத்துச் செல்லப்பட்ட சில சம்பவங்கள் உள்ளன,'' என்று பிபிசியிடம் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கையை கேட்டபோது, அந்த விவரங்கள் தன்னிடம் இல்லை என்று அவர் கூறினார். ஆனால், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றும் இவை அனைத்துமே பொய்பிரச்சாரம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

எந்தவொரு கிறிஸ்தவ மதத் தலைவரும் தனது சந்திப்பின்போது லவ் ஜிகாத் பற்றி குறிப்பிடவில்லை என்று குன்ஹல்லிகுட்டி கூறினார்.

"நாங்கள் பொதுக் கூட்டங்களில் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறோம். இதில் மறைக்க எதுவும் இல்லை,'' என்றார் டாக்டர் அஸ்வத்நாராயண்.

கிசுகிசுப்பின் சக்தி

1991 மே 21ஆம் தேதி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பெங்களூரு மாநகராட்சியின், பாஜக நகரசபை உறுப்பினர் ஒருவர், மக்களவைத் தேர்தலில் பாஜக சிறப்பாக செயல்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

"தற்போது எங்கள் வேலை, ஒரு கிசுகிசுப்பை, ஒரு சலசலப்பை உருவாக்குவது மட்டுமே. எங்கள் சின்னத்தை பிரபலமாக்கவே இது செய்யப்படுகிறது. எனவே, தாமரை என்ற செய்தி குடிசைப்பகுதிகளில் இதன் மூலம் பரப்பப்படுகிறது. ஏனென்றால் அது எதிர்காலத்தில் எங்களுக்கு ஆதரவாக வேலை செய்யும் அடிப்படை,'' என்று அவர் கூறியிருந்தார்.

பாஜக கர்நாடகாவில் ஆட்சிக்கு வர கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆனது. தங்கள் கட்சியின் முயற்சிகள் எதிர்காலத்தை, ஒருவேளை அடுத்த தேர்தலை நோக்கமாகக் கொண்டவை என்பதை பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக தலைவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

"இந்தத் தேர்தலில், எட்டு முதல் ஒன்பது இடங்களை வெல்வதை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். ஏனெனில் இது, இரு முன்னணிகளுக்கும் இடையிலான நெருக்கமான போட்டி. நாங்கள் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும்,'' என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

"தற்போதைக்கு உடனடி பயனாளி எல்.டி.எஃப். தான். நிச்சயமாக அடுத்த சில வாரங்களில் கூடுதல் உத்திகள் மற்றும் எதிர் உத்திகளை நாம் கண்டிப்பாக பார்க்கலாம்," என்று அரசியல் பார்வையாளர் ஜோசப் மேத்யூ கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :