You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவது ஏன்?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க தலைமையிலான கூட்டணிகள் களமிறங்க உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தோடு இணைந்து சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதேநேரம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தனித்துக் களமிறங்க உள்ளன. இதில், 234 தொகுதிகளுக்கும் சரிபாதியாக ஆண், பெண் வேட்பாளர்களைக் களமிறக்குகிறார் சீமான். இது தொடர்பாக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளார்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், இந்தமுறை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார். `கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகத் தகவல் வெளியானது. திடீரென திருவொற்றியூருக்கு மாறுவது ஏன்?' என சீமானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
`` எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் அங்கு களமிறங்குகிறேன். அங்கு 350 ஏக்கர் நிலத்தை கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அதானிக்குக் கொடுத்துள்ளனர். இங்கு புதிதாக எதையும் தொடங்க முடியாது. ஆனால், `விரிவாக்கம் செய்து கொள்ளலாம்' என ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதற்காக 6,111 ஏக்கரில் கடலுக்குள் 2,000 ஏக்கர், நிலத்தில் 2,000 ஏக்கர், நதியில் 2,000 ஏக்கர் என துறைமுக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவ்வளவு பெரிய துறைமுகம் எதற்காக? இவர்கள் எதனை ஏற்றுமதி செய்வார்கள்? அதானி வந்துவிட்டால், மற்ற துறைமுகங்களை மூடிவிடுவார்கள். இதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் போட்டியிடுகிறேன்" என்கிறார்.
மேலும், `` சாம்பல் மேடுகளால் மக்கள் வாழவே முடியாத பகுதியாக எண்ணூர் மாறிவிட்டது. அங்கு நாம் நின்று சத்தம் போட்டால்தான் சரியாகும் என முடிவெடுத்தேன். தவிர, தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதெல்லாம் இல்லை. நாட்டைக் கைப்பற்றாமல் ஒரு இடம், இரண்டு இடம் வென்றால் ஒன்றுமே செய்ய முடியாது" என்கிறார்.
`திருவொற்றியூரை தேர்வு செய்ய பிரதானக் காரணம் உள்ளதா?' என்றோம். `` ஆறு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள தொகுதி அது. மக்களிடம் பிரசாரம் செய்வதற்கு எளிதாக இருக்கும். என்னுடைய ஊரான காரைக்குடியில் நின்றால் எளிதாக வென்று விடுவேன்.
நான் இந்தியாவுக்கான நபர் அல்ல. இந்த நாட்டுக்கான நபர். என்னை இந்தியாவுக்கான நபர் என மக்கள் நினைத்தபோதே அதிக வாக்குகளைக் கொடுத்தனர். இந்தமுறை கூடுதல் வாக்குகளைப் பெறுவோம். இங்கு நான் மட்டும்தான் அரசியல் பேசி வருகிறேன். நாங்கள் வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதை உரக்கச் சொல்கிறோம். எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை பணிகள் நிறைவடைந்துவிட்டன. வருகின்ற 10 ஆம் தேதி வெளியிட இருக்கிறோம்" என்றார்.
திருவொற்றியூர் நிலவரம் என்ன?
திருவொற்றியூர், எர்ணாவூர், எண்ணூர், மணலி, சின்னசேக்காடு உள்ளிட்ட பகுதிகள், இந்தத் தொகுதிக்குள் அடங்கியுள்ளன. சென்னை உரத் தொழிற்சாலை, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு நாடார், முதலியார், மீனவர் ஆகிய சமூகத்தினர் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். எர்ணாவூர் பகுதியில் மலையாள சமூக மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட கோகுல் என்பவர், 3,961 வாக்குகளைப் பெற்று ஐந்தாம் இடம் பிடித்தார். கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், திருவொற்றியூர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். சாலை சீரமைப்பு, கொரோனா கால நற்பணி எனத் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். இதுவரையில் இந்தத் தொகுதியில் தி.மு.க 6 முறையும் அ.தி.மு.க நான்கு முறையும் வெற்றி வாகை சூடியுள்ளன. இருப்பினும், போக்குவரத்து நெரிசல், பாதாள சாக்கடைத் திட்டம், சுற்றுச்சூழல் மாசு என நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளும் உள்ளன. இதையே மையமாக வைத்து சீமான் களமிறங்க உள்ளார்.
2010 ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக இயங்கத் தொடங்கிய நாம் தமிழர் கட்சி, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் களறமிறங்கவில்லை. முதல்முதலாக 2016 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கி 4,58,104 வாக்குகளைப் பெற்றது. இது 1.07 சதவிகிதம் எனக் கணிக்கப்பட்டது. இதன்பின்னர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. நீலகிரியில் மட்டும் படுக தேச முன்னணி என்ற அமைப்புக்கு சீமான் ஆதரவு கொடுத்தார். இந்தத் தேர்தலில் 16,45,185 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது. வாக்கு சதவிகிதமும் 3.87 ஆக அதிகரித்தது.
இதன் காரணமாக, 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறார் சீமான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்