தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: `அப்பா தரப் போகும் பணம்; சேப்பாக்கம் நிலவரம்!' - நேர்காணலில் உதயநிதி உணர்த்தியது என்ன?

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவாரா?' என தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் தீவிர விவாதம் நடந்து வருகிறது. `வாரிசு அரசியல்' என்ற விமர்சனத்துக்காக மு.க.ஸ்டாலின் பின்வாங்குகிறாரா... என்ன நடக்கிறது தி.மு.கவில்?

சென்னை அண்ணா அறிவாலயம் நேரம் காலை 11.30 மணி

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்பதற்காக 6ஆம் தேதி வந்திருந்தார். அவரது பெயர் மைக்கில் அறிவிக்கப்படும் வரை சுமார் 1 மணிநேரம் காத்திருந்தார்.

மு.க.ஸ்டாலின்: `தொகுதியில் எவ்வளவு செலவு செய்வீர்கள்?'

உதயநிதி: `அப்பா எவ்வளவு பணம் தருகிறாரோ, அவை அனைத்தையும் செலவு செய்வேன்'

துரைமுருகன்: `நிதியை ஒதுக்குவதற்கான அதிகாரம் எனக்கிருக்கிறது'

டி.ஆர்.பாலு: `நான் நிதியை ஒதுக்குகிறேன். நீங்கள் எவ்வளவு செலவு செய்வீர்கள்?'

உதயநிதி : `அப்பா எவ்வளவு கொடுக்கிறாரோ, அதனைச் செலவு செய்வேன். நீங்கள் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற வைப்போம்'.

- சில நிமிடங்களே நடைபெற்ற இந்த உரையாடலின் மூலம், `நேர்காணல் கலகலப்பாக நடந்தாலும், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி நிற்பது தொடர்பாக குழப்பமே நிலவுகிறது. `யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற வைப்போம்' என அவர் கூறியிருக்கிறார். விருப்ப மனுவைக் கொடுத்துவிட்டு நேர்காணலில் பங்கேற்காமல் இருந்தால் விமர்சனம் எழும்' என்பதற்காகவே உதயநிதி அறிவாலயம் வந்தார்' என்கின்றனர் இளைஞரணி நிர்வாகிகள்.

கொந்தளித்த ஸ்டாலின்!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து தி.மு.க நிர்வாகிகள் விருப்ப மனுக்களைப் பெற்றனர். கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரையில் விருப்ப மனு பெறும் நிகழ்வு நடந்தது.

இதில், `உதயநிதி போட்டியிட வேண்டும்' எனக் கூறி சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, திருவாரூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் பணம் கட்டியுள்ளனர். மொத்தம் பெறப்பட்ட 8,000 மனுக்களில் உதயநிதி பெயரில் மட்டுமே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன.

அதேநேரம், தி.மு.க முதன்மை நிலையச் செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி என வாரிசுகளின் பெயர்களிலும் மனுக்கள் குவிந்தன.

இதனை ரசிக்காத ஸ்டாலின், மூத்த நிர்வாகிகளை வரவழைத்துப் பேசினார். அப்போது, `பத்தாண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை என்பது எனக்கு மட்டும் கிடையாது. உங்களுக்கும் சேர்த்துத்தான். நம்மை விமர்சிப்பவர்களுக்கு நாமே வழி ஏற்படுத்தித் தரக் கூடாது. எனவே, நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். என் மகன் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என உறுதியாகக் கூறிவிட்டார்.

25 ஆண்டு இடைவெளி!

இந்தத் தகவல் உதயநிதிக்குத் தெரிவிக்கப்படவே அவரும், `நீங்கள் கூறியதால்தான் போட்டியிட விரும்பினேன். நான் எப்போது போட்டியிட வேண்டும் எனக் கூறுகிறீர்களோ, அப்போது நிற்கிறேன்' என்றார். இதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த கே.என்.நேருவும், `தலைவர் முடிவெடுப்பார்' எனக் கூறி ஒதுங்கிவிட்டார்.

உதயநிதியின் இந்த முடிவால் இளைஞரணி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். `இதனால் தங்களுக்கும் சீட் கிடைக்குமா?' என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது.

இந்நிலையில், அறிவாலய நேர்காணலில் உதயநிதி பங்கேற்றது குறித்து தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

தங்களது பெயரைக் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர்கள், ``ஸ்டாலின் என்ன மனநிலையில் உள்ளார் என்பதில் குழப்பமே உள்ளது. தங்களின் மகன்களுக்கு சீட் கேட்டவர்களும், `எங்கள் வாரிசுகளை அடுத்த தேர்தலில் களமிறக்கிக் கொள்கிறோம். உதயாவை போட்டியிடச் சொல்லுங்கள்' என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதனை ஸ்டாலின் ஏற்றுக் கொள்வாரா என்பதுதான் எங்களின் சந்தேகம்" என்கின்றனர்.

இரட்டை இலக்கத்தில் சீட்!

தொடர்ந்து சில தகவல்களையும் நம்மிடம் தெரிவித்தனர். ``96 ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்சியின் இளைஞர் அணிக்கு சரியான அடித்தளம் இல்லை. அந்தக் காலகட்டத்தில் தா.மோ.அன்பரசன், சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் இளைஞரணியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவிக்கு வந்தார்கள்.

இதையடுத்து கடந்த 25 ஆண்டுகாலமாக இளைஞர் அணிக்கு பெரிதாக முக்கியத்துவம் கிடைக்கவில்லை. தலைமைக்கும் இளைஞர்களுக்கும் இடையில் இடைவெளி வந்துவிட்டது. இந்தமுறை, இளைஞரணி நிர்வாகிகளுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கேட்கிறார் உதயநிதி.

`மாவட்டங்களில் யார் யாரெல்லாம் உண்மையாகக் கட்சிக்கு உழைத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் சீட் கொடுங்கள். அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் கட்சி ஆதரவு கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தி ஸ்டாலினிடம் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்.

உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் இளைஞரணி அமைப்பாளராக இளையராஜா என்பவர் இருக்கிறார். இவர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர். ஆனால், கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக உழைத்து வருகிறார்.

`அவருக்கு சீட் கொடுக்க வேண்டும்' எனத் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளார். முன்பெல்லாம் தலைவரிடம் நேரடியாகப் பேசுவதில் எங்களுக்குத் தயக்கம் இருந்தது. உதயநிதி வந்த பிறகு எங்கள் வயதுள்ளவர் என்பதால் எளிதாகப் பேச முடிகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, `10 வருஷம் தி.மு.கதான் ஆட்சியில் இருக்கும்' என்ற தைரியத்தில், `அடுத்த முறை உதயாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்' என ஸ்டாலின் நினைக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் களநிலவரம் எப்படியிருக்கும் எனக் கணிக்க முடியாது. இந்தமுறை விட்டுவிட்டால், மீண்டும் என்ட்ரி கொடுப்பதற்கு தாமதமாகும். தலைவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் எனத் தெரியவில்லை" என்கின்றனர்.

மேயர் பதவி?

அதேநேரம், `சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு சென்னை மாநகராட்சித் தேர்தலில் உதயநிதியைக் களமிறக்கலாம். ஸ்டாலின் போலவே, அவரும் முதலில் மேயராகட்டும். அதன்பிறகு சட்டமன்றத்துக்குள் நுழைய வைக்கலாம்' என்ற முடிவில் தி.மு.க தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

`சேப்பாக்கத்தில் உதயநிதி போட்டியிடுவாரா?' என சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிற்றரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``கடந்த 4 மாதங்களாக சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் வேலைகளைப் பார்த்து வைத்துள்ளோம். இங்கு மொத்தம் 2,30,000 வாக்குகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதியை வெற்றி பெற வைக்கும் அளவுக்கு வேலைகள் நடந்துள்ளன. இங்கு பா.ஜ.க போட்டியிட உள்ளதாகத் தகவல் வருவதால், சிறுபான்மை மக்களின் ஆதரவு, தலைவரின் மகன், கலைஞரின் பேரன், எளிமை உள்ளிட்ட காரணங்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்" என்கிறார்.

சேப்பாக்கத்தில் என்ன நிலவரம்?

தொடர்ந்து பேசுகையில், ``சேப்பாக்கம் தொகுதியில் வட்டம் வாரியாக மக்கள் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தோம். எந்தெந்த தெருக்களில் என்னென்ன பிரச்சனை என்பதைத் தொகுத்து வைத்துள்ளோம். அவற்றில் சிலவற்றை மாவட்ட நிர்வாகிகளே முன்னின்று சரிசெய்து கொடுத்தனர். அவற்றில் தீர்க்க முடியாத நெடுநாள் பிரச்சனைகளும் உள்ளன. அவர்களுக்கெல்லாம், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சரிசெய்து கொடுப்போம்' என உறுதியளித்துள்ளோம். அடுத்து, கடந்த பத்து நாட்களுக்கு முன்னதாக கலைஞர் பெயரில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், கணிதம் பாடங்களை இலவச ட்யூசன் மூலம் கற்றுக் கொடுத்து வருகிறோம். முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் மூலமாக தினசரி மாலை வேளைகளில் வகுப்பெடுக்கப்படுகிறது.

மழை வெள்ளம் வந்தபோதும் கொரோனா காலத்திலும் அதிகப்படியான நிதி உதவிகளை தொகுதிக்குள் செய்தோம். வட்டம் 119, 119 (அ) என இரண்டு வட்டங்களைத் தவிர மற்ற வட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்கள் வாழ்கின்ற பகுதியாக உள்ளது. மீர்சா பேட் மார்க்கெட் முதல் அயோத்திக் குப்பம் வரையில் எளிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். சிறுபான்மை மக்களும் நிறைந்திருப்பதால் உதயநிதிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அவர் நிச்சயமாகக் களமிறங்குவார் என நம்புகிறோம்" என்றார்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனை நிறைவு செய்துவிட்டால் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை 10ஆம் தேதியன்று அறிவிக்கும் முடிவில் ஸ்டாலின் இருக்கிறார். அப்போது உதயநிதியின் பெயர் அறிவிக்கப்படுமா அல்லது மேயர் நாற்காலியை நோக்கி அவர் நகர்வாரா என்பதும் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: