You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மு.க. ஸ்டாலின் ஆவேசம்: "திமுக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் வேலுமணி மீது வழக்கு பாயும்"
திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு பாயும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதையொட்டி கோவை கொடிசியா மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் பின்னர் கூட்டத்தில் பேசினார்.
"திமுக சார்பில் பெறப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் குறைதீர்ப்புக்கு என தனி துறை உருவாக்கப்பட்டு உடனடியாக புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பிரச்னைகள் தீர்க்கப்படும். இதனால் 1 கோடி குடும்பங்கள் பயனடைய உள்ளனர்."
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அவர் மீதான ஊழல் புகாருக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றது. திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தொடர்ந்த வழக்கில், தமிழகம் முழுவதும் எல்இடி தெருவிளக்குகள் அமைப்பதில் ஊழல் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் லோக் ஆயுத்தா அமைப்புக்கு இந்த வழக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அமைச்சர் ஊழல் செய்துள்ளது உறுதியாகி உள்ளது. கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர், அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளால் மாநகராட்சியில் பல ஊழல்களை செய்து வருகிறார்.
கோவையில் அமைச்சராக வேலுமணியின் அண்ணன் அன்பரசன் வலம் வருகிறார். இவர்களுக்கு சொந்தமான, 2011-12ல் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வருவாய் தற்போது 3000 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போல் தான் ஜெயலலிதாவின் டான்சி வழக்கிலும் நடந்தது. அமைச்சரின் ஊழல் குறித்து பேசும் பத்திரிக்கையாளர்களும், திமுகவினரும் மிரட்டப்படுகின்றனர்.
அமைச்சர் அதிகாரம் இருப்பதால் அதிகாரிகளும், காவல் துறையினரும் அவருக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். ஆட்சி மாறும்போது காட்சிகளும் மாறும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் வழக்கு பாயும். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என பொய் சொல்லி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதில் ஓட்டை விழுந்துவிட்டது, கூடிய விரைவில் அதை குழிதோண்டி புதைக்க திமுகவினர் உறுதியேற்போம்.' என ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, பொது மக்களின் புகார்களை பெற்றுக்கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால் கோவையில் சிறு குறு நடுத்தரத் தொழில்கள் நலிவடைந்து உள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் எனவும், மத்திய அரசிடம் இது குறித்து எடுத்துரைப்போம் எனவும் ஸ்டாலின் கூறினார்.
மேலும், பாரதியார் பல்கலைக்கழக நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: