தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு: பள்ளி - கல்லூரிகள், திரையரங்கங்களுக்கு கூடுதல் அனுமதி

தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் கல்லூரிகளை திறப்பதற்கு அனுமதி, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது உள்ளிட்ட பல தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த் தொற்று விகிதம் கடந்த இரண்டு வாரமாக, ஒரு சதவிகிதமாக இருப்பதாக கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 550 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000க்கு மேல் இருந்து தற்போது 4,629 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது" என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நிபுணர்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், தற்போதுள்ள நோய்ப் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தும் என தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட தளர்வுகளின் பட்டியலின் படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள்/ பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் 8.2.2021 முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை பொருத்தவரை, 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும், 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்கலாம். மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இரவு 10.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்க வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி 01.02.2021 முதல் செயல்படஅனுமதி வழங்கப்பட்டுள்ளன.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள் உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் ஆகியவை 01.02.2021 முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அனுமதிக்கப்படுகிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொதுமக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைகளை பொறுத்தவரை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: