You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுவை அமைச்சர் நமச்சிவாயம் உள்பட 2 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல்: காரணம் என்ன?
புதுச்சேரி யூனியன் பிரதேச அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அறிவித்திருந்த பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தனது எம்.எல்.ஏ. பதவி விலகல் கடிதத்தை சட்டமன்ற அவைத் தலைவரிடம் கொடுத்தார்.
அவருடன், உசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தானும் தனது விலகல் கடிதத்தை அவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் தந்தார்.
"நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் இருவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தைக் கொடுத்துள்ளனர். அதனை தற்போது பெற்றுக் கொண்டுள்ளேன். இந்த கடிதத்தை சட்டப்பேரவை செயலருக்கு அனுப்பிய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்," எனப் புதுச்சேரி சபாநாயகர் சிவகொழுந்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனது ராஜினாமா குறித்து பத்திரிகையாளரிடம் விளக்கமளித்த நமச்சிவாயம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து எங்களை ஓரம் கட்டுவதிலும், மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநரை எதிர்ப்பதில் மட்டுமே அவருடைய முழு கவனத்தையும் செலுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.
"இது போன்ற காரணங்களால் 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாகக் கொடுத்த தேர்தல் அறிக்கையை மக்களிடத்தில் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர இந்த மாநில மக்கள் மீதும் கட்சிக்காரர்கள் மீதும், மாநில வளர்ச்சி மீதும் அவருக்கு எந்தவொரு சிந்தனையும், அக்கறையும் இல்லாத சூழ்நிலையில் எங்களது கருத்துக்களைத் தொடர்ந்து முதல்வரிடத்தில் நாங்கள் வலியுறுத்தி வந்தோம்," என்றார் நமச்சிவாயம்.
"மேலும் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தற்போது புதுச்சேரியில் இருக்கின்ற நிர்வாக சீர்கேட்டைச் சரி செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். பல நேரங்களில் எங்களுடைய மற்றும் கட்சியின் பிரச்னைகளை, எங்களது அதிருப்தியை கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்து இருக்கிறோம். இதை பல்வேறு விதமான கட்டங்களில் தொடர்ந்து கூறியும் இந்த நிலைமை அனைத்தும் சரியாகும் என்று பொறுத்திருந்து பார்த்தோம். ஆனால் அதில் அகில இந்தியத் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று எங்களுடைய பதவிகளை நாங்கள் ராஜினாமா செய்துள்ளோம்," என்று கூறுகிறார் நமச்சிவாயம்.
அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கும் அனுப்பி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
"எங்களைப் பொறுத்தவரைப் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும். இங்கு இருக்கின்ற இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். இப்படி பல்வேறு எண்ணங்கள் எங்களிடம் இருக்கிறது. இருந்தபோதிலும் கடந்த இரண்டு தினங்களாக ஆதரவாளர்களுடன் கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் மேலும் சில ஆதரவாளர்களைச் சந்தித்து கருத்துக் கேட்ட வேண்டியதிருக்கிறது. அனைவரின் கருத்தை ஆராய்ந்த பிறகு எங்களது அடுத்த கட்ட முடிவு தெரிவிக்கப்படும்," என நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக காங்கிரஸ் யூனியன் பிரதேசத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் அறிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் "பொதுப்பணி அமைச்சராக இருந்த நமச்சிவாயம் கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைச்சர் என்ற தனது பொறுப்பையும் மறந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற பல நிர்வாகிகளை தன்னுடன் வந்துவிடுமாறு வலியுறுத்தியும், அவர்களுக்கு வேறு கட்சியில் பொறுப்புகள் வழங்குவதாகவும் கூறி அழைத்திருக்கிறார். இதன் மூலமாக அவரை வளர்த்துவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே அவரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளோம்," என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
யார் இந்த நமச்சிவாயம்?
நமச்சிவாயம் புதுச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை அமைச்சராகவும், நான்கு சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியில் இருந்தவர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் நமச்சிவாயம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று புதுச்சேரி முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பிறகு அப்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயத்தை காங்கிரஸ் மேலிடம் சமாதானம் செய்தது. பிறகு கட்சியில் இணக்கமாக செயல்பட தொடங்கினார். அதையடுத்து அவருக்கு பொதுப்பணித்துறை மற்றும் கலால்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆனால், 2020 மார்ச் மாதம் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
முதல்வர் நாராயணசாமியுடன் மோதல் போக்கு காரணமாக அதிருப்தியில் இருந்துவந்தார் நமச்சிவாயம். இதனால் கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சிப் பணிகள், கூட்டங்கள் மற்றும் போராட்டங்களில் அதிக ஈடுபாடு காட்டுவதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், எங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நமச்சிவாயம் பாஜகவில் இணைவுள்ளதாகத் தகவல்கள் கசியவந்தது. அவர் பெங்களூர் சென்று பாஜகவின் சில தலைவர்களை சந்தித்ததாகத் தகவல்கள் கிடைத்தது. அது ஆதாரப்பூர்வமில்லாத தகவல், அப்படி இருந்தாலும் கடந்த சில நாட்களாக அவரது செயல்பாடுகளில் காங்கிரஸ் கட்சியில் சந்தேகம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே காங்கிரஸ் தலைமை அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.
குறிப்பாக நான்கரை ஆண்டு காலமாக எல்லா அமைச்சர்களும் சுதந்திரமாகச் செயல்பட்டனர். எந்த துறையிலும் நான் தலையிட்டது கிடையாது, அவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த அனைத்து துறை சார்ந்த கோப்புகளுக்கும் நான் ஒப்புதல் கொடுத்துள்ளேன். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து அரசு கோப்புகளைத் திருப்பி அனுப்புவது, காலம் தாழ்த்தி வந்தார். அதனால் சில கோப்புகள் கால தாமதம் ஏற்பட்டது. அதற்கு நான் நேரடியாக பொறுப்பேற்க முடியாது," என்றார் அவர்.
தற்போது என் மீது குற்றச்சாட்டு வைக்கும் நமச்சிவாயம் இது குறித்து ஏன் நான்கரை ஆண்டுக் காலங்களில் எதுவுமே கூறவில்லை? தேர்தல் வரும் நேரத்தில் சொல்வதற்குக் காரணம் என்ன? காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக நாராயணசாமி கூறுகிறார்.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான திமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது. நமச்சிவாயம் எடுத்திருக்கின்ற முடிவு காரணமாக எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை," என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் சாமிநாதன், "வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி பெறும். இந்த வார இறுதியில் புதுச்சேரி மாநிலத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் போது நிறைய பேர் பாஜகவில் இணைவார்கள். அதற்கு முன்னதாகவும் பலர் பாஜகவில் இணையவுள்ளனர். காங்கிரஸ் அரசின் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருக்க விருப்பமில்லாமல் வெளியேறியுள்ளனர். மக்களும் இந்த ஆட்சி எப்போது வெளியேறும் எனக் காத்திருக்கிறார்கள்," தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்
- மும்பையிலும் திரண்டனர் விவசாயிகள்: மகாராஷ்டிரம் முழுவதிலும் இருந்து பேரணியாக வந்தனர்
- தமிழ்நாட்டில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: ஆர்.எஸ்.பாரதி
- நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒளியை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கிய எதிர் கோஷ்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: