You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் போராட்டம் மும்பையில் எதிரொலி: வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கில் குவியும் விவசாயிகள்
டெல்லி விவசாயிகள் போராட்டம் தற்போது இந்தியாவின் இன்னொரு மாநகரமான மும்பையிலும் எதிரொலிக்கிறது.
இந்திய அரசின் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள்.
இதில் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளே பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒப்பீட்டளவில் ஒரு தென் மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் மும்பையில் இன்று கூடுகின்றனர்.
இதற்காக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாக மும்பை நோக்கி வருகின்றனர்.
ஜனவரி 23-ம் தேதி நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி ஒரு விவசாயிகளின் வாகனப் பேரணி தொடங்கியது.
இதில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது என்கிறது பி.டி.ஐ. செய்தி முகமை.
இவர்கள் அனைவரும் இன்று இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மும்பை ஆசாத் மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். பிறகு ஆளுநர் மாளிகைக்கு சென்று மனு கொடுக்கப்படும்.
இதில் மாநிலத்தின் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அமைச்சர்கள் பாலாசஹிப் தொராட், சுற்றுலா அமைச்சர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்கிறது பிபிசி மராத்தி சேவை.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் இயக்கம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் ஜனவரி 23 முதல் 26 வரையில் ஆளுநர் மாளிகைகளை நோக்கி பேரணிகளை நடத்தும்படி அறைகூவல் விடுத்திருந்தது.
இதையடுத்து மகாராஷ்டிரத்தில் 100 விவசாயிகள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து 'சம்யுக்த ஷேத்காரி காம்கர் மோர்ச்சா' என்ற இயக்கத்தை ஜனவரி 12ம் தேதி உருவாக்கின.
இந்த இயக்கமே இப்போது மும்பையில் நடைபெறும் போராட்டத்தை ஒருங்கிணைக்கிறது.
இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் செய்யும் வகையில் மத்திய அரசு ஒரு சட்டம் நிறைவேற்றவேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகள்.
இந்தப் போராட்டத்தை ஒட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் போலீஸ் கண்காணிப்பு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: ஆர்.எஸ்.பாரதி
- ஆண்கள் ஏன் பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்? ஆராய்ச்சி செய்த பெண்களின் அனுபவம்
- இலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை வாங்க மறுத்து மறியல்: சமாதானம் செய்தபின் உடல் அடக்கம்
- தனிச் சின்னத்தில் போட்டியிடுமா வி.சி.க.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்