You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாலுபிரசாத் யாதவ் உடல் நிலையில் சிக்கல்: ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டார்
பிகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் குழுவின் பரிந்துரையின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டுள்ளார்.
ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லாலு பிரசாத் யாதவை பார்க்க அவரது மகன் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை வந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவர் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.
ரிம்ஸ் மருத்துவமனை சனிக்கிழமை வெளியிட்ட ஒரு மருத்துவ அறிக்கையில் அவரது "உடல் நிலை அப்படியே இருக்கிறது. ஸ்திரமாக இருக்கிறது, கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என்று வந்திருக்கிறது. ரத்தப் பரிசோதனையும் சாதாரண தொற்று என்பதாகவே காட்டுகிறது. ஆனால் மார்பு ஸ்கேன் அவருக்கு நிமோனியா இருப்பதைக் காட்டுகிறது. மாநில மருத்துவக் குழுவின் அறிவுரையின் பேரில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
இதையடுத்து ராஞ்சி பீர்சா முண்டா விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லிக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் லாலு பிரசாத் யாதவ், இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்த தேசிய முன்னணி அரசு அமைய முக்கியப் பங்கு வகித்த தலைவர்களில் ஒருவர்.
1989ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையில் அமைந்த அந்த அரசுதான் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்து ஆண்டு வந்த காலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக இருந்து ரயில்வே பயணிகள் கட்டணத்தைத் தொடர்ந்து குறைத்து, லாபமும் காட்டி வியப்படைய வைத்த நிர்வாகி அவர்.
ஆனால், அவர் முதல்வராக இருந்த காலம் பிகாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்குப் பெயர் பெற்றது. அவர் முதல்வர் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது மனைவி ராப்ரிதேவியை அந்தப் பதவியில் அமர வைத்து மறைமுகமாக ஆண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
பிற செய்திகள்:
- "என்னை அழைத்து அவமதிக்காதீர்கள்" - மோதி முன்னிலையில் கோபப்பட்ட மம்தா பேனர்ஜி
- மனித உரிமை மீறலை விசாரிக்க இலங்கை ஜனாதிபதி நியமித்த குழு: தமிழர்கள் கருத்து என்ன?
- கார் பார்க்கிங்கில் தூங்கிய அமெரிக்க பாதுகாப்புப் படையினர்: பைடன் மன்னிப்பு கேட்டார்
- "கொரோனா வைரஸின் புதிய திரிபு உயிரிழப்பை தீவிரப்படுத்தக்கூடும்" - எச்சரிக்கும் பிரிட்டன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்