வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களுக்கு இடையே நடந்த 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமலே முடிந்தது.

டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் வெள்ளிக்கிழமை அன்று மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தை வெறும் 15-20 நிமிடங்கள் மட்டுமே நடந்ததாக விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் பஞ்சாப், ஹரியானா மற்றும் சில மாநில விவசாயிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கடந்த சுமார் 2 மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி வந்துள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இந்த சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இன்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்க, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்னும் நாள் குறிக்கப்படவில்லை.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக கூறும் மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்வதில் விவசாய சங்கங்களிடையே கருத்து வேறுபாடு இருக்கிறதா என்று பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா கேட்டதற்கு பதில் அளித்த விவசாய சங்கத் தலைவர் ஒருவர், "அனைவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக நாங்கள் எடுத்த முடிவு ஒன்றுதான். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்." என்று அவர் கூறினார்.

விக்ஞான் பவனுக்கு வெளியே மற்றொரு விவசாய சங்கத் தலைவர் கூறுகையில், நடந்து முடிந்த பேச்சுவார்த்தையில் அரசு புதிதாக எந்த பரிந்துரையும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். முதலில் கொடுத்த பரிந்துரையிலேயே அரசு பிடிவாதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாய சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் கூறுகையில், "மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள தயாராக இல்லை. நாங்களும் எங்கள் நிலையில் இருந்து பின்வாங்க மாட்டோம். அப்படி செய்தால் அது தற்கொலைக்கு சமம்" என்று தெரிவித்தார்.

இதற்கு என்னதான் தீர்வு என்று பிபிசி செய்தியாளர் கேட்டபோது, "நாங்கள் அரசிடம் புகார் கொடுத்துள்ளோம். அரசுதான் இதற்கு பதில் கூற முடியும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக புதன்கிழமையன்று விவசாயிகளுக்கும், அரசுக்கும் நடைபெற்ற பத்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் விவசாய சட்டங்களை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும், இருதரப்பு நபர்களையும் கொண்டு கமிட்டி ஒன்று உருவாக்கப்படும் எனவும் அரசாங்கம் முன் வைத்த யோசனையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :