You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தகுதி அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு - கமல் விளக்கம்
சாதி, மதங்களை கடந்து நேர்மைமிக்க வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்துவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் பேட்டி
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சாதி, மதங்களை கடந்து நேர்மைமிக்க வேட்பாளர்களை மட்டுமே முன்னிறுத்துவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தொழில்துறை வளர்ச்சிக்கான ஏழு வாக்குறுதிகளை கமல்ஹாசன் அறிவித்தார்.
தொழில் துறை புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளுக்கான அமைச்சரவை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துதல், குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாதி, மதங்களை பார்க்காமல் நேர்மைமிக்க தகுதியான நபர்கள் மட்டுமே மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவர். பொதுத்தொகுதிகளிலும் கூட தகுதியின் அடிப்படையில் எந்த சாதியினரும் வேட்பாளராகலாம்," என கூறினார்.
"மேலும், எங்கள் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடைக்காது என்ற அமைச்சர் கருப்பண்ணனின் கருத்தை அவரது பிரார்த்தனையாக மட்டுமே பார்க்கிறேன். எங்கள் பயணத்தில் கிடைக்கும் செய்தி வேறாக உள்ளது. கூட்டணி தொடர்பாக இப்போது முடிவு சொல்ல முடியாது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன்." என்றார்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, 'அது வெறும் தகவல் தான்' என பதிலளித்தார் கமல்.
வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தவர், நியமிக்கப்பட்ட குழு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
"நாங்கள் அறிவித்த திட்டங்கள் இலவசங்கள் கிடையாது. மனித வளத்திற்கான முதலீடு. அரசுடன் தொடர்பில் இருக்க அவை உதவும்" என கூறிய அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கைது நடவடிக்கைகளை தாமதமான நீதியாக பார்க்கிறோம் என தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- "கடும் நடவடிக்கை பாயும்" - யூட்யூப் சர்ச்சை விஷமிகளை எச்சரிக்கும் சென்னை போலீஸ் கமிஷனர்
- பாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி?
- மாஸ்டர் - சினிமா விமர்சனம்
- கொரோனா தடுப்பூசி: இந்திய தயாரிப்பாளர்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா?
- கோட்சே பெயரில் நூலகம் அமைத்த இந்து மகாசபா தலைவர்: எழும் கடும் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: