You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அடம் பிடிக்கும் ரஜினி ரசிகர்கள்: சென்னையில் மீண்டும் ஆர்ப்பாட்டம்
உடல்நலப் பிரச்னைகளை காரணமாகக் கூறி தனது அரசியல் பிரவேசத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்திருந்த சூழ்நிலையில், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலில் ஈடுபட வேண்டுமென்று கோரி அவரது ரசிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களும் பங்கேற்றதாக தெரிகிறது.
"தலைவர் அரசியலுக்கு வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்"
கடந்த 25 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள், கடந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது அரசியல் பிரவேசத்தை அவர் உறுதிசெய்தவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், திடீரென்று கடந்த டிசம்பர் 29ஆம் தேதி, தான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார்.
தனது உடல்நலனை பிரதான காரணமாகக் குறிப்பிட்ட அவர், தன்னுடன் பயணிப்பவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவரது வீட்டுக்கு முன்பு வந்து, ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சார்பில் மீண்டும் ஓர் அறிக்கை வெளியானது. அதில், தனது உடல் நலனைக் கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதால் அதை மதிக்க வேண்டும் என்றும், யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இருந்தபோதிலும் அந்தக் கோரிக்கையை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில்பங்கேற்ற ரசிகர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தலைவருக்கு (ரஜினி) உடல்நிலை சரியில்லை என்று எங்களுக்கு தெரியும். ஆனால், உடல்நலப் பிரச்னை என்பது எல்லோருக்கும் வந்து, போவதுதான். அவர் அரசியலுக்கு வந்தால்தான் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார்.
ரஜினியின் முடிவு தொடர்பாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறி அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறித்து கேள்வி கேட்டபோது, "ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் மட்டும்தான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார்களே தவிர, மற்றவர்கள் ஈடுபடலாம்" என்று அவர் பதிலளித்தார்.
இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மற்றொரு ரசிகர், "இது தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு புரட்சி. தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கு மேல், ரஜினிதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட ரஜினிகாந்த், தனது உயிரை பெரிதாக நினைத்து முடிவெடுத்திருப்பதை எங்களால் நம்ப முடியவில்லை. இதுகுறித்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நேரடியாக விளக்கமளிப்பதுடன் தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று காத்திருக்கிறோம்" என்று கூறினார்.
"ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவர் இப்போது சுற்றுப்பயணத்தில் ஈடுபட வேண்டுமென்றும், மேடை ஏற வேண்டுமென்றும் நாங்கள் கேட்கவில்லை. அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டி மட்டும் கொடுத்தால் போதும், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர் முகம் காட்டினாலே போதும், ஓட்டுகள் தானாக விழுந்துவிடும்" என்று மற்றொரு ரசிகர் கூறினார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் தங்களது கோரிக்கையை ஏற்று தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புவதாக அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: