You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரூரில் இளைஞர் படுகொலை: ஆணவக்கொலைகள் கும்பல் வன்முறையாக உருமாறுவதாக கவலை
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கரூர் நகரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை ஆய்வு செய்த 'எவிடென்ஸ்' தன்னார்வ அமைப்பு, அதனை ஆணவக்கொலை என தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறது.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 1:30 மணி அளவில், கரூரில் உள்ள பசுபதி ஈஸ்வரன் கோயில் முன்பு 23 வயது இளைஞர் ஹரிஹரன் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது.
பொதுமக்கள் முன்னிலையில், கற்களால் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் பலத்த காயமடைந்த ஹரிஹரன், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிக்கும் காணொளி தமிழகம் முழுவதும் பரவி காண்போரை அதிர்ச்சி அடையவைத்தது.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில், வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் ஹரிஹரன், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், அதுதொடர்பான தகராறில் பெண்ணின் உறவினர்கள் ஹரிஹரனை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காயமடைந்த ஹரிஹரன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காதல் விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தபோது, ஹரிஹரன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு அவர்கள் மறுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள ஹரிஹரனின் தந்தை ஜெயராமன், "சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் எனது மனைவிக்கு போன்செய்து, 'ஹரிஹரனும் நானும் காதலிக்கிறோம். அவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்' என கூறியுள்ளார். இதுகுறித்து, நான் எனது மகனிடம் கேட்டபோது இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டார். வேறுபட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இது ஒத்துவராது என கூறினேன். பின்னர், அந்தப் பெண்ணின் உறவினர்கள் எனது வீட்டிற்கு வந்து எனது மகனை மிரட்டிச்சென்றனர். இந்த நிலையில்தான் எனது மகனை அவர்கள் கொலை செய்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி ஹரிஹரனின் உறவினர்களும், நண்பர்களும் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். பின்னர், அவர்களை சமாதானம் செய்த காவல்துறையினர் உடலை ஒப்படைத்து, பலத்த பாதுகாப்போடு உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 147, 341, 342, 294 (B), 323, 307, 302 மற்றும் 502 (ii) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சாதி வேற்றுமை காரணமாக கரூரில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் ஆணவக்கொலை குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கிவைத்துள்ளது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், தமிழகத்தில் ஆணவக்கொலைகள் கும்பல் வன்முறையாக உருமாறி வருவதாக தெரிவிக்கிறார்.
"பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் இந்த கொலை நடந்திருக்கிறது. சங்கர் ஆணவக்கொலை என்பது ஒரு கூலிப்படை வேகமாக அரிவாளால் வெட்டி கொலை செய்து இடத்தைவிட்டு கிளம்பினர். ஆனால் ஹரிஹரன் சுமார் 30 நிமிடம் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சுமார் 200 மீட்டர் இடைவெளியில் காவல்நிலையம் இருக்கிறது. அந்த பகுதியில் போலீசாரும் ரோந்து பணியில் இருந்திருக்கின்றனர். இரண்டு நிமிடத்தில் அந்த பகுதிக்கு வந்து அந்த இளைஞரை மீட்டிருக்க முடியும்" என்று கூறும் கதிர், அந்த பகுதியில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் எங்களது குழுவினரிடம் 12 - 15 பேர் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறிய நிலையில், பெண்ணின் குடும்பத்தினரை மட்டும் குற்றவாளிகளாக வழக்கில் போலீசார் சேர்த்துள்ளதாகவும் உடன் வந்த கும்பலை வழக்கில் சேர்க்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
"பெரும் கும்பலோடு ஒரு இளைஞரை தாக்குகின்றபோது பொது மக்கள் அச்சமடைந்து தடுக்க வரமாட்டார்கள். இதனை உணர்ந்துதான் பெண்ணின் குடும்பத்தினர் பெரும் இளைஞர் அடியாள் கும்பலோடு சேர்ந்து அந்த இளைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. காதலிக்கும் இளைஞரை பொது இடத்திற்கு வரவைத்து கல்லால் அடித்து கொல்வது என்பது நாகரீகமற்ற படுபாதக செயல். தமிழ்நாட்டில் இதுபோன்ற கலாசாரம் துவங்கியிருப்பது பெரும் ஆபத்து என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என்கிறார் அவர்.
'எவிடென்ஸ்' தன்னார்வ அமைப்பு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சாதிய ஆணவக்கொலை சம்பவங்களை ஆய்வு செய்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும் செய்து வருகிறது.
"தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மட்டும் 10 ஆணவக்கொலைகளும் மரணங்களும் நடந்துள்ளன. ஆனால் தமிழக அரசு இவற்றை தடுப்பதில் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லை. கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆணவக்கொலையை தடுப்பதற்கு ஒவ்வொரு மாநில அரசுக்கும் 20 வழிகாட்டுதல் நெறிமுறைகளை தீர்ப்பாக வழங்கி நடைமுறைப்படுத்த வலியுறுத்தியிருக்கிறது. தமிழக அரசு இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கொண்டிருக்கிறது" என்கிறார் கதிர்.
தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த தலித் இளைஞரான சங்கர் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இவர்கள் உடுமலைப்பேட்டை குமாரமங்கலத்தில் உள்ள சங்கர் வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று கௌசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், இருவரையும் கத்திகளால் வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். தலையில் வெட்டுக்காயமடைந்த கௌசல்யா சிகிச்சைபெற்று குணமடைந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம், முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியை வழக்கிலிருந்து விடுவித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: