You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி: "நடைமுறைக்கு ஒத்துவராத அரசியல் சவால்கள்"
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார மேடை, திமுக மற்றும் அதிமுக தலைவர்களின் விவாத மேடையாக மாற தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக, திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களில் பிரசார கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கிராம சபை கூட்டங்கள் என்ற பெயரில், பொது மக்களிடம் நேரடியாக உரையாடும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதிமுகவை பொறுத்தவரை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக பிரசாரம் ,தனியாக பிரசாரம் என்று உற்சாகமான உரைகளை நிகழ்த்துகிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் பிரசார கூட்டங்களில் அதிமுக அரசை ஊழல்வாத அரசு என்றும், ஊழல் பட்டியல் என்ற பட்டியலை வாசித்தது வருவதை விமர்சித்த பழனிசாமி, ஊழல் பற்றி விவாதிக்க திமுக தயாரா? என்று சமீபத்தில் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், முதல்வரின் அழைப்பை ஏற்று விவாதத்திற்கு தயார் என்று அறிவித்த ஸ்டாலின் அதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ள தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதோடு, அ.தி.மு.க அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டி அமைச்சரவை தீர்மானத்தை நாளையே நிறைவேற்றி, தமிழக ஆளுநரிடம் அதனை உடனடியாக பழனிசாமி ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், விவாதத்திற்கு பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துடன் வரலாம் என்றும் தான் தனி நபராக அந்த விவாதத்தில் பங்கேற்க தயார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆனால், ஸ்டாலின் விதித்துள்ள நிபந்தனைகள் தேவையற்றவை என்றும், விவாதிக்க அவர் தயாராகவில்லை என்றும் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இதேவேளை, திமுகவினர் விவாதத்திற்குத் தயார் என்றும் அதற்கான விதிகளை விதிப்பதில் தவறில்லை என்றும் திமுகவினர் பதில் பதிவிடுகிறார்கள்.
இரண்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஊழல் பற்றிய விவாதத்தில் பங்கேற்பதாக கூறுவது உண்மையில் நடைமுறையில் சாத்தியம் தானா? என எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியான பழ கருப்பையாவிடம் பிபிசி கேட்டது.
''இரண்டு கட்சிகளும் ஊழலில் ஊறிய கட்சிகளாக இருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்த கட்சிகள் அல்ல. இது உலகம் அறிந்த உண்மை. இதற்கு ஒரு விவாதம் தேவை இல்லை. கருணாநிதி காலத்தில் தான் தமிழகத்தில் ஊழல் என்ற சொல்லாடல் அறிமுகமாகியது. விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யத் தெரிந்தவர் கருணாநிதி என நீதிபதி சர்க்காரியா தனது அறிக்கையில் விவரித்தார்.
அன்று தொடங்கி, தற்போது 2 ஜி ஊழல் வரை, பல ஊழல் வழக்குகள் அக்கட்சியினர் மீது உள்ளன. அதேபோல அதிமுகவில் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. ஊழலுக்காக சிறைக்கு சென்றவர் ஜெயலலிதா. இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஊழல் மன்னர்கள் என்பது சிறிய குழந்தைக்குக் கூட தெரியும்,''என்கிறார் பழ கருப்பையா.
திமுக, அதிமுக என இருவரும் ஊழல் காரணமாக தேர்தலில் படுமோசமாக தோற்றவர்கள் என்கிறார் அவர். ''இரண்டு கட்சிகளும் வலிமையான நிறுவன அமைப்பை பெற்றிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சிகளை தோற்கடிக்கும் வாய்ப்புள்ள மூன்றாவது கட்சி கடந்த 50 ஆண்டுகளாக இல்லை என்பதாலும்தான் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள். வலிமையான மூன்றாவது அமைப்பு ஒன்று இருந்தால், இவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். ஜனநாயகத்தின் பலவீனத்தினால் இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்,''என்கிறார் அவர்.
''உள்ளங்கையைப் பார்ப்பதற்கு ஒரு விவாதம் தேவையில்லை. இரண்டு கட்சிகளின் அறக்கட்டளைகளிடம் பணம் எப்படி சேர்ந்தது, எப்படி திரட்டினார்கள். வெறும் 11 லட்சம் ரூபாயை தேர்தல் நிதியாக வைத்து ஆட்சிக்கு வந்தார் அறிஞர் அண்ணா. தற்போது இரண்டு கட்சிகளும் அண்ணாவின் கொள்கைகளை ஊழலில் மூடி கவிழ்த்து விட்டன,''என்கிறார் பழ. கருப்பையா.
தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி இரண்டு கட்சிகளும் விவாதிப்பதற்கு தயார் என கூறுவது வேடிக்கையாக இருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் அருணன்.
இதுபோன்ற ஒரு விவாதம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பது இரண்டு கட்சிகளுக்கும் தெளிவாகத் தெரியும் என்பதால், தங்களின் பேச்சாற்றலை காட்ட பிரசார கூட்டத்தில் காட்டமாக பேசுகிறார்கள் என்கிறார் அருணன்.
''இந்திய சட்ட நடைமுறைகளின்படி, ஊழல் குற்றசாட்டு இருந்தால், அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்ற விசாரணையின்படி, தீர்ப்பு வழங்கப்படும். ஆனால் ஊழல் பற்றி நேருக்கு நேர் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. இப்படி ஒரு விவாதம் நடத்துவோம் என்று கூறுவதே சரியான முறை அல்ல. அந்த விவாதத்திற்கு யார் நடுவராக இருப்பார்? ஒருவர் கருத்தை மறுப்பார், மற்றொருவர் ஆமோதிப்பார். பட்டிமன்றம் போன்றதல்ல இது,''என்கிறார் அருணன்.
பிரசார மேடையில் விடும் சவால்களை அரசியல் தலைவர்கள் மக்களை கவருவதற்காக பேசுகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் அருணன்.
அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் விவாதம் பற்றி பேசிய அவர், ''அமெரிக்காவில் நடைபெறும் விவாதத்தில் கூட, இரண்டு தரப்பினரும் தங்களது கொள்கைகள் பற்றிதான் விவாதம் செய்வர்கள். அதுபோன்ற விவாதம் இங்கு நடைபெற்றால், மக்களுக்கு அது நேரடியாக காட்டப்பட்டால், வாக்காளர்களுக்கு உதவியாக இருக்கும். ஊழல் குற்றசாட்டுகளை விவாதம் வைத்து தீர்க்க முடியாது, அது சரியான முறையும் இல்லை,''என்கிறார் அவர்.
இரண்டு கட்சியினரும் பேசுவதுபோல ஊழல் பற்றிய விவாதம் பற்றி பேசுவதன் பின்னணி என்ன என பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டோம்.
''தமிழகத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் ஆட்சிக்கு வந்ததும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் வழக்கு போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த விவாதம் என்பது எப்போதும் நடைபெறப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் நடைபெறும் ஒரு வாய்சவடாலாக தான் இந்த விவாத அழைப்பை பார்க்கமுடியும். உண்மையில் ஊழல் பற்றி விவாதிக்கவேண்டும் என்றால், ஒரு கட்சி ஊழல் குற்றச்சாட்டு வாசிக்கும், மற்றொரு கட்சி எதிர்க்கும். இதனால் நிரந்தர தீர்வு எட்டமுடியாது. அப்படி ஒரு விவாதத்திற்கு வாய்ப்பில்லை என்பதால்தான் இருவரும் தயாராக இருப்பதுபோல பேசுகிறார்கள்,''என்கிறார் ப்ரியன்.
மேலும் அவ்வாறான விவாதம் நடைபெற்றால் இரண்டு கட்சிகளுக்கு இடையில் நடைபெறும் வாக்குவாதமாக மாறுமே தவிர எந்த முடிவும் ஏற்படாது என்கிறார் அவர். ''சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் கட்சி, எதிர்கட்சி மீது ஊழல் வழக்கு போடுவார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. தற்போது அமெரிக்க தேர்தல் நடைமுறை போல விவாதம் இங்கு நடைபெறாது. அதனை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அதனால் இரண்டு கட்சியினரும் பேசுவதில் எந்த தீர்வும் கிடைக்காது,''என்கிறார் ப்ரியன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்