You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் தீவிபத்து: 10 குழந்தைகள் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்திலுள்ள அரசு பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் இன்று (ஜனவரி 9) அதிகாலை இரண்டு மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 17 குழந்தைகளில் ஏழு குழந்தைகள் மருத்துவமனை பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 குழந்தைகள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பணியில் இருந்த செவிலியர் ஒருவர், மருத்துவமனையின் வெளிப்புற பிரிவில் புகை வருவதையும் பரவுவதையும் கண்டதை அடுத்து அவர் அதிகாரிகளை எச்சரித்தார். சற்று நேரத்தில் மருத்துவமனையை அடைந்த தீயணைப்பு படை வீரர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
"மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இரண்டு தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளன. மருத்துவமனை ஊழியர்கள் ஏழு குழந்தைகளை மீட்ட நிலையில், பத்து குழந்தைகள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்" என்று அந்த மருத்துவமனையை சேர்ந்த மூத்த அறுவை சிகிச்சை நிபுணரான பிரமோத் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பண்டாரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வசந்த் ஜாதவ், "குழந்தைகளின் மரணம் தொடர்பாக உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. எனினும், விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மகாராஷ்டிராவின் பண்டாராவில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் சோக விபத்தில் நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம். குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிப்பு
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, "பண்டாரா மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் மரணமடைந்துள்ளது மிகவும் துயரகரமானது" என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள உத்தவ் தாக்ரே, இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபேவுடன் கலந்துரையாடியுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரிக்க பண்டார மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக மகாராஷ்டிராவின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவாரும் தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்ததற்கு தன் வருத்தை தெரிவித்துள்ளதுடன், இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மற்ற மருத்துவமனைகளில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, மாநிலம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் தணிக்கை செய்யப்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அரசு மூன்று விஷயங்களை செய்யலாமென பட்டியலிடுகிறார் இந்திய மருத்துவக் கழகத்தின் மகாராஷ்டிர மாநில கிளையின் தலைவர் மருத்துவர் அவினாஷ் போந்துவே.
"சிறந்த தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்த கடுமையான விதிமுறைகள் வேண்டும். மருத்துவமனைகளில் இருக்கும் மின் சுற்றுவழி அவ்வப்போது சரிபார்க்கப்பட வேண்டும். இன்குபேட்டர் போன்ற மருத்துவக் கருவிகள் எளிதில் உடையக் கூடியவை, எளிதில் வெடிக்கக் கூடியவை. எனவே இந்த சாதனங்களை முறையாக அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சாதனங்களை வாங்கும் போது பல முறை விலையில் சமரசம் செய்து கொள்வார்கள். அது மருத்துவ சாதனங்களின் தரத்தில் பிரதிபலிக்கும். இந்த சாதனங்கள் நோயாளிகளின் உயிரோடு நேரடியாக தொடர்புடையது. எனவே அரசு இதற்கு கவனம் கொடுக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் அவினாஷ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: