சௌரவ் கங்குலி மருத்துவமனையில் சேர்ப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சௌரவ் கங்குலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறது பி.டி.ஐ. செய்தி முகமை.

லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவருக்கு மயக்கமும், நெஞ்சு வலியும் ஏற்பட்டு, உடனடியாக வுட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கங்குலி உடம்புக்கு என்ன?

அவருக்கு லேசான கார்டியாக் அரஸ்ட் என்று சொல்லப்படும் இதய நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் பகிர்ந்த செய்தியில் கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு வேதனைப்படுவதாக கூறியுள்ளார். அத்துடன், அவர் விரைவாக, முழுமையாக குணமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வேண்டுதல்களும், யோசனையும் அவரோடும், அவரது குடும்பத்தோடும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது எப்படி இருக்கிறார்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய் ஷா, தாம் சௌரவ் கங்குலி குடும்பத்துடன் பேசியதாகவும், சிகிச்சைக்கு கங்குலியின் உடல் நன்கு ஒத்துழைப்பதாகவும், அவர் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :