ரஜினிகாந்த் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை, மம்மூட்டி போட்ட சுவாரசிய ட்வீட்

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. இன்று செய்யப்பட்ட சில பரிசோதனை முடிவுகள் எதுவும் அபாயகரமான முடிவுகள் எதையும் காட்டவில்லை. இன்னும் சில பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன. அந்த முடிவுகளை பொறுத்தும், இன்று இரவு முழுவதும் அவரின் ரத்த அழுத்த நிலையை பொறுத்தும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவது தொடர்பாக நாளை காலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினியின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார் என இன்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்த் தொடர்ந்து நெருக்கமாக கண்காணிக்கப்படுவார், அவரைப் பார்க்க வருகை தருபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சுவாரசியமான ட்வீட் போட்ட மம்மூட்டி

இதனிடையே ரஜினி காந்த் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தி நடிகர் மம்முட்டி சுவாரசியமான ட்வீட் ஒன்றைப் போட்டுள்ளார்.

'Get well Soon Surya. Anbudan Deva' (விரைந்து குணமடைந்து வா சூரியா. அன்புடன் தேவா) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வரிகளும் ரஜினியின் புகைப்படமும் அதில் இடம் பெற்றுள்ளது.

1991ம் ஆண்டு வெளியான ரஜினியின் புகழ் பெற்ற படமான 'தளபதி'யில் மம்முட்டி 'தேவா' என்ற பெயரில் பெரிய தாதாவாக நடித்திருப்பார். அவருக்காக உயிரையும் கொடுக்கும் நண்பனாக நடித்திருக்கும் ரஜினிக்கு அந்தப் படத்தில் 'சூர்யா' என்று பெயர்.

தனது உயிர் நண்பன் ரஜினி என்று சொல்லாமல் சொல்லி வாஞ்சையை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது மம்முட்டியின் இந்தப் பதிவு.

இந்த செய்தி சனிக்கிழமை வெளியானது. ரஜினி ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விரிவான செய்திக்கு:ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்: மருத்துவர்கள் விதித்த கட்டுப்பாடுகள்

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துவருகிறார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் மீண்டும் துவங்கியது. இதற்காக தனி விமானத்தில் அவர் ஹைதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்றார்.

இந்த நிலையில், அந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

தற்போது 70 வயதை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் கட்சி ஜனவரி மாதம் எந்த தேதியில் தொடங்கப்படும் என்று டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்போவதாக கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :