You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லதா ரஜினிகாந்த் வாடகை பாக்கி: ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா செயலாளராக இருந்து நிர்வகித்து வரும் ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறது. வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இந்த இடத்துக்கு இந்த சங்கம் வாடகை பாக்கி செலுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு. 2013ம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017 ஆகஸ்ட் 16ம் தேதி இடத்தின் உரிமையாளர்கள் பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
வருமான வரி ஆவணங்களை வைத்து ரஜினி மீது விமர்சனம்அதன்பின்னரும் வாடகை பிரச்சினை நீடித்த நிலையில் 2018 ஆகஸ்ட் 3ஆம் தேதி இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது.இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தாங்கள் உறுதியளித்தப்படி காலி செய்ய முடியவில்லை என்று கூறி, மேலும் ஓர் ஆண்டு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இடத்தை காலி செய்வதற்கான ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மாத வாடகையாக டி.டி.எஸ். தொகை உட்பட 8 லட்ச ரூபாய் முறையாக செலுத்தி வருவதாகவும், எனவே கால அவகாசத்தை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராககவேந்திரா கல்வி சங்கத்துக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு காலி செய்யாவிட்டால், கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அதன் செயலாளர் லதா ரஜினிகாந்தை நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும், ஆஸ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது எனவும் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு நீதிபதி தடைவிதித்துள்ளார்.
பிற செய்திகள்
- 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த விண்வெளி தொலை நோக்கி: வியப்பூட்டும் தகவல்கள்
- மதுரை கிராமத்தின் ஓயாத போராட்டம்: எரிவாயு குழாய் திட்டத்துக்கு எதிர்ப்பு
- கொரோனா வைரஸ்: பிளாஸ்மா தெரபியுடன் சில இந்திய மருத்துவர்கள் முரண்படுவது ஏன்?
- கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய வேறு நாட்டிடம் உதவி கோரும் இலங்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்