You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினி மீது வருமான வரி ஆவணங்களை வைத்து விமர்சனம்
நடிகர் ரஜினிகாந்த் தன் பணத்தை வட்டிக்கு விட்டதாக வருமான வரித்துறை ஆவணங்களில் கூறியிருக்கும் தகவல்கள் வெளியான நிலையில், இதனை மையமாக வைத்து ட்விட்டரில் அவரது எதிர்ப்பாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் 2002 - 2005 ஆண்டு காலகட்டத்தில் வருமான வரியை சரியாகச் செலுத்தவில்லை என்று கூறி, மூன்று நிதியாண்டுகளுக்கும் சேர்த்து 66,22,436 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனை எதிர்த்து ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அந்த நோட்டீஸை ரத்துசெய்தது. இந்த ரத்து நடவடிக்கையை எதிர்த்து வருமான வரித்துறை 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், வழக்கு புதன்கிழமையன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாங்கள் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தை அடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
"ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான அபராதத் தொகையைக் கொண்ட வழக்குகளை இனி தொடர்வதில்லை; ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது என முடிவெடுக்கப்பட்டதால், ரஜினிகாந்த் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டதாக" வருமான வரித்துறையின் சார்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித் துறை தாக்கல் செய்திருந்த ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதன்படி, 2002-2003, 2004-2005 காலகட்டத்தில் பணத்தை வட்டிக்குவிடும் வேலையைச் செய்துவந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். 2002-03 ஆண்டு காலகட்டத்தில் 2.63 கோடி ரூபாயை வட்டிக்கு விட்டு, அதன் மூலம் 1.45 லட்ச ரூபாயை வட்டியாகப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் நிகர லாபமாக அவருக்கு 1.19 லட்ச ரூபாய் கிடைத்ததாகக் கூறியுள்ளார்.
கே. கோபாலகிருஷ்ண ரெட்டி என்பவருக்கு 18 சதவீத வட்டியில் 1.95 கோடி ரூபாயும் அர்ஜுன் லால் என்பவருக்கு 60 லட்ச ரூபாயும் சஷி பூஷண் என்பவருக்கு ஐந்து லட்ச ரூபாயும் கொடுத்திருக்கிறார். அதற்கு அடுத்த ஆண்டில் மேலும் ஒருவருக்கு 10 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறார். அந்த ஆண்டில் அவருக்கு வட்டி மூலம் 1.99 லட்ச ரூபாயும் இதில் 1.64 லட்ச ரூபாய் நிகர லாபமாகவும் கிடைத்துள்ளது.
ஆனால், 2004-05ல் இம்மாதிரி கடனாகக் கொடுத்த ரூபாயில், சுமார் 1.71 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் ரஜினி தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த ஆண்டு 33.93 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் தனது வருமான வரி தாக்கலில் ரஜினி குறிப்பிட்டதாக அந்த பத்திரிகை செய்தி கூறுகிறது.
ஆனால், இது தொடர்பாக 2005ல் வருமான வரித்துறை அவரிடம் விசாரணையும் நடத்திருக்கிறது. அப்போது தான் வட்டிக்கு விடும் தொழில் செய்யவில்லையென ரஜினி மறுத்திருக்கிறார்."நான் சிலருக்குக் கடன் கொடுத்திருப்பேன். ஆனால், அந்தத் தொழிலில் இல்லை" எனக் கூறியதாக பத்திரிகை செய்தி தெரிவித்தது.
அதற்குப் பிறகு, மீண்டும் வருமான வரித்துறையைத் தொடர்பு கொண்டு, வட்டிக்கு விடுவது என்றால் நகையை வாங்கிக்கொண்டு வட்டிக்கு விடுவதென நினைத்துவிட்டதாகவும் அந்தக் கருத்தை மாற்றிக்கொள்வதாகவும்கூறி புதிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருக்கிறார். முன்பு தள்ளுபடி செய்ததாக கூறப்பட்ட தொகையை பெற முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தகவல்கள் இன்று காலையில் நாளிதழில் வெளியானதும் சமூக வலைதளங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்தும் கேலிசெய்தும் பதிவுகள் வெளியாகத் துவங்கின. #கந்துவட்டி_ரஜினி எனக் குறிப்பிட்டு கிட்டத்தட்ட 31 ஆயிரம் ட்வீட்கள் வரை பதிவுசெய்யப்பட்டன.
இதற்குப் போட்டியாக ரஜினி ரசிகர்களும் #மக்களுக்காக_ரஜினி என்ற ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்யத் துவங்கினர். இருந்தபோதும் ரஜினியை விமர்சிக்கும் ஹாஷ்டாக் மாலை வரை முதல் சில இடங்களில் தொடர்ந்து நீடித்து வந்தது.
ரஜினிகாந்த் தரப்பிலிருந்து இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: