80 வயது மூதாட்டியின் புகாரை வீட்டிலேயே விசாரித்து தீர்த்து வைத்த மதுரை ஆட்சியர்

மதுரை மூதாட்டி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டியை தனது காரிலேயே வீட்டுக்கு அழைத்துச் சென்று பிரச்னை தீர நடவடிக்கை எடுத்திருக்கிறார் அந்த மாவட்ட ஆட்சியர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் நேரடியாக கொடுக்க பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள்.

இந்த நிலையில், ஃபாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி தடி ஊன்றியபடி மாவட்ட ஆட்சியரை சந்திக்க நுழைவு வாயில் அருகே காத்திருந்தார். அப்போது அலுவலக வளாகத்துக்குள் காரில் வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், வழியில் மூதாட்டியை பார்த்ததும் திடீரென காரை நிறுத்துமாறு கூறினார்.

மதுரை மூதாட்டி

பின்னர் இறங்கி வந்த அவர் மூதாட்டியிடம் நலம் விசாரித்து அவருடைய உடல்நிலையை பார்த்து தேநீர் வாங்கி கொடுத்தார். தொடர்ந்து தன்னை சந்திக்க வந்த காரணத்தை மூதாட்டியிடம் அன்பழகன் கேட்டார். அப்போது தான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதாகவும் தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை தராமல் ஏமாற்றுவதாகவும் கூறினார்.

இதை கேட்ட மாவட்ட ஆட்சியர், வீட்டுக்கு எப்படி செல்வீர்கள் என கேட்டபோது "நடந்துதான் போக வேண்டும்" என்று பதிலளித்திருக்கிறார் மூதாட்டி. இதையடுத்து தனது காரிலேயே மூதாட்டியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்ற ஆட்சியர் அன்பழகன், அங்கிருந்தபடி அவரது புகார் குறித்து விசாரிக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக் கொண்டார்.

மதுரை மூதாட்டி

இதையடுத்து, செல்பேசியில் வீட்டு உரிமையாளரை அழைத்துப் பேசிய காவல்துறையினரிடம் "ஆட்சியர் அளவுக்கு செல்வாங்க என நினைக்கலை. ஒரு வாரத்துக்குள் மொத்த பணத்தையும் தருகிறேன்" என்று வீட்டு உரிமையாளர் உறுதியளித்திருக்கிறார்.

இதன் பிறகு, "பாட்டி, விரைவில் உங்கள் பணம் வந்து விடும்" என்று கூறிய ஆட்சியர், தனது கையில் இருந்த ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்து பாட்டியிடம் கொடுத்து விட்டு புறப்பட்டார். அவரது இந்த செயலை உள்ளூர்வாசிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் கரூரில் பணிபுரிந்தபோது, தனது ஓட்டுநர் பணி ஓய்வின் போது அவரை தனது வாகனத்தில் அமர வைத்து தானே காரை ஓட்டிச்சென்று அவரை வீட்டில் இறக்கி விட்டு அவரது குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :