You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் போராட்டம்: பங்கேற்க வேண்டும் என்னை பணியில் இருந்து விடுவியுங்கள் - பஞ்சாப் டிஐஜி வேண்டுகோள்
"நான் விவசாயியின் மகன். அது குறித்துப் பெருமைப் படுகிறேன். நான் போராடும் விவசாயிகளோடு நிற்கவேண்டும்" சொன்னவர் அரசியல் தலைவரில்லை, செயற்பாட்டாளர் இல்லை, பஞ்சாப் மாநிலத்தில் பணியில் இருக்கும் ஒரு டி.ஐ.ஜி.
அவரது பெயர் லக்மிந்தர் சிங் ஜக்கர். பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருப்பவர். சொன்னதோடு மட்டும் நிற்கவில்லை. தாம் வயது முதிர்வடையும் முன்பே ஓய்வு பெற்றதாக அறிவித்து தம்மை பணியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டு அவர் மாநில உள்துறை செயலாளருக்கு விண்ணப்பித்துள்ளார்.
"இது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமானால், நான் மூன்று மாதம் முன்கூட்டியே அரசுக்கு நோட்டீஸ் தரவேண்டும். அல்லது இன்றே பதவி விலக வேண்டுமானால், மூன்று மாத காலத்துக்கான ஊதியத்தை அரசுக்கு திருப்பித் தரவேண்டும். நான் உடனே போகவேண்டும். எனவே ஊதியத்தை திருப்பிச் செலுத்த தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
உள்துறை செயலாளருக்கு எழுதிய விண்ணப்பத்திலேயே அவர், "நான் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் எனது விவசாயி சகோதரர்களோடு நிற்கவேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ.
"விவசாயிகள் நீண்ட நாள்களாக அமைதியாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். யாரும் அவர்களது குரலைக் கேட்கவில்லை. நான் ஓர் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட படையில் இருக்கிறேன். நான் பணியில் இருந்தால் விதிப்படி எந்தப் போராட்டத்தையும் நான் ஆதரிக்கக் கூடாது. முதலில் நான் எனது பணியைப் பற்றி முடிவு செய்யவேண்டும். பிறகு நான் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றி முடிவு செய்யலாம்" என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது ஏ.என்.ஐ.
ஓய்வு பெற்ற ஐ.ஜி. ஆதரவு
ஏற்கெனவே, இந்தப் போராட்டத்துக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஜி. ஒருவர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது பெயர் சஜ்ஜன் சிங் சீமா, முன்னாள் கூடைப் பந்து விளையாட்டு வீரரான இவர், விளையாட்டுத் துறை சாதனைக்காக தமக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருதையும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பித் தருவதாக அறிவித்தார்.
இது தொடர்பான செய்தி:
"நாங்கள் விவசாயிகளின் பிள்ளைகள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக அவர்கள் நடத்திவந்த போராட்டங்களில் சிறு வன்முறைகூட இல்லை. இப்போது டெல்லி செல்லும் பேரணி மீது அரசு கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தாக்குகிறது. எங்கள் முதியவர்கள், சகோதரர்களின் டர்பன்கள் கழன்று விழுகின்றன. இதற்குப் பிறகு, இந்த விருதுகளால், கௌரவங்களால் எங்களுக்கு ஆகப்போவது என்ன?" என்று சஜ்ஜன் சிங் சீமா கேட்டதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது.
நானும் உண்ணாவிரதம் இருப்பேன்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஒரு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
"நாளை, டிசம்பர் 14ம் தேதி டெல்லி போராட்டத்தில் இருக்கும் விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆம் ஆத்மி கட்சி இதனை முழுமையாக ஆதரிக்கிறது.
விவசாயி சகோதரர்களுக்கு ஆதரவாக நானும் நாளை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்துள்ளார்" என்று அறிவித்துள்ளவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: