You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாந்தி சோஷியல் சர்வீசஸ் சுப்பிரமணியன் - கோயம்புத்தூர் மக்களின் கண்ணீர் அஞ்சலி
கோவை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் சாந்தி சோஷியல் சர்வீசஸ்' எனும் தன்னார்வ அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியன் காலமானதையடுத்து, மக்கள் பலரும் கண்ணீர் மல்க வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்கள்.
மிகக் குறைந்த விலையில் தரமான உணவு மற்றும் மருத்துவ சேவைகளை சுப்பிரமணியனை அறங்காவலராகக் கொண்ட சாந்தி சோஷியல் சர்வீசஸ் அமைப்பு வழங்கி வருகிறது.
1972ம் ஆண்டு, கோவையில் 'சாந்தி கியர்ஸ்' என்ற நிறுவனத்தை துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து வந்தார் சுப்புரமணியன்.
மக்கள் சேவையை கருத்தில் கொண்டு 1996ஆம் ஆண்டில் 'சாந்தி சோஷியல் சர்வீசஸ்' என்ற சமூக நல அமைப்பை இவர் தொடங்கினார்.
உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் அவரது அமைப்பு நடத்தி வருகிறது.
மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் சாந்தி சர்வீசஸ் உணவகத்தை தேடி வருகின்றனர். தினமும் 300 முதியவர்களுக்கு இலவச உணவும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இங்குள்ள மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய் மட்டுமே. 30 சதவீதம் குறைவான விலையில் அனைத்து மருந்துகளும் விற்கப்படுகின்றன.
இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும், மருந்துகள் வாங்கவும் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த எளிய மக்கள் பலர் இங்கு வந்து செல்கின்றனர்.
சாந்தி சோசியல் சர்வீசஸ் அமைப்பின் சார்பில் இலவச மின் மயானமும் செயல்பட்டு வருகிறது.
மக்கள் சேவைக்காக பல பாராட்டுகளை பெற்ற சுப்பிரமணியன், ஊடகங்களில் முகத்தை காட்டுவதில்லை என்பதில் இறுதி வரை உறுதியாக இருந்தார்.
78 வயதான சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலையில் உயிரிழந்தார்.
முகம் தெரியாவிட்டாலும், அவரது சேவைகளால் பயனடைந்த எளிய மக்களும், மலிவான விலையில் நிறைவான உணவை உண்டு மகிழ்ந்த கோவைவாசிகளும் சுப்புரமணியத்திற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுப்பிரமணியனின் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: