You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவிட்ட அமித் ஷா
(பிபிசி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சென்ற வாகனங்களை இலக்கு வைத்து மர்ம நபர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
அந்த மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அறிக்கை வழங்குமாறும் அவர் மாநில ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் செளத் 24 பர்கானாஸ் பகுதிக்கு பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்க்கியா தனது காரில் சென்றார். ஆனால், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் சாலையை மறித்து கேரோ செய்தனர்.
அதையும் மீறி அவரது கார் டயமண்ட் ஹார்பர் பகுதிக்கு வந்தபோது வரது வாகனத்தை அடையாளம் தெரியாத சிலர் கல்வீசி தாக்கினார்கள். அதில், அவரது காரின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்தது. காரில் கைலாஷ் விஜயவர்க்கியா இருக்கை அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது.
மற்றொரு தலைவரான தீபஞ்சன் குஹா சென்ற வாகனத்தின் மீதும் செங்கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த நிலையில்,பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொல்கத்தாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாலையில் பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ சென்றபோது, அவரது வாகனங்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்க முயன்றது. நட்டாவின் கார் குண்டு துளைக்காத வாகனம் என்பதால் காருக்குள் இருந்த அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால், நட்டாவின் காருடன் வந்த மற்ற கார்களின் கண்ணாடிகள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. சில கார்கள் மீது பாறைகள் போன்ற மிகப்பெரிய கற்கள் வீசப்பட்டிருந்தன.
12 மணி நேரத்தில் அடுத்தடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த இரு சம்பவங்களும் பாஜக தலைவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டதால் இது மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னை என அம்மாநில ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாஜக தலைவர்களின் வாகனங்கள் மீதான தாக்குதல் தொடர்பான முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
பாஜக தலைவரின் வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதலில் ஆளும் முதல்வர் மமதா பானர்ஜியின் அராஜகம் இருப்பதாக வரும் தகவல்கள் கவலை தருவதாக அவர் நேரடியாகவே குற்றம்சாட்டினார்.
நட்டா வாகன தொகுப்புடன் வந்த மற்ற காரில் இருந்த முகுல் ராய், கைலாஷ் விஜய்வார்கியா ஆகியோர் காயம் அடைந்தனர்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, "ஜனநாயகத்தில் இது அவமானகரமான செயலாகும். எங்களுடைய பாதுகாப்புக்கு வந்த அனைத்து வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன. எனது கார் குண்டு துளைக்காத வாகனம் என்பதால் அதற்கு பாதிப்பு நேரவில்லை. மேற்கு வங்கத்தில் குண்டர்களின் ராஜ்ஜியம் முடிவுக்கு வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதே சமயம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி ஆளும் அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பாஜகவினர் செயல்படுவதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டினார். "இது பாஜகவினரின் வெறுக்கத்தக்க நாடகம். ஹிட்லரும் இப்படித்தான் உருப்பெற்றார். ஒரு சம்பவம் நடந்ததாக காண்பிக்கும் காட்சியை அவர்களே உருவாக்கி ஊடகங்களிடம் பகிர்கிறார்கள். பிறகு தங்களை பாகிஸ்தான், இஸ்ரேல், நேபாளம் தாக்கியதாக அவர்கள் கூறுவார்கள்," என்றார் மமதா பானர்ஜி.
விஜய்யின் 65வது படத்தை இயக்குவது யார்?
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், முழுமையாகத் தயாராகிவிட்ட நிலையில், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், விரைவில் இந்தப் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் விஜய் நடிக்கும் 65வது திரைப்படமாகும். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே நயன்தாராவை நாயகியாக வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கியிருக்கும் டாக்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
விஜய்யின் புதிய படம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் விடியோவில் இயந்திர துப்பாக்கிகள், தோட்டாக்கள், கார் போன்றவை இடம்பெற்றுள்ளன. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாததால், தளபதி 65 என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம்: அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோதி
புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோதி டெல்லியில் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
அதற்காக நடந்த பூமி பூஜையிலும் அவர் பங்கேற்றார் என்கிறது பிடிஐ செய்தி முகமை.
இப்போதைய வட்ட வடிவ நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகிலேயே அமைப்பதென திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய கட்டடம் முக்கோண வடிவம் கொண்டது.
ரூ.971 கோடி ரூபாய் மதிப்பில் இந்தக் கட்டடத்தைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் இடம் பெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு: புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல்: அதீத செலவு, வசதிகள் - முக்கிய தகவல்கள்
இதன் கட்டுமானப் பணியைத் தொடங்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை நடத்திக்கொள்ள மட்டும் அது அனுமதி வழங்கியுள்ளது.
பிற செய்திகள்:
- செளதி அரேபியாவில் இருந்து வரவிருக்கும் புதிய வகை எரிபொருள் - பாதுகாப்பா, ஆபத்தா?
- ஜியோ சிம், அம்பானி, அதானி கம்பெனி பொருள்களை புறக்கணிப்போம்: விவசாயிகள் போராட்ட குழு
- புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல்: அதீத செலவு, வசதிகள் - முக்கிய தகவல்கள்
- 46 ஆயிரம் ஆண்டு பழமையான பழங்குடி குகை: சீரமைத்துத் தர சுரங்க நிறுவனத்துக்கு உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: