You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரத் பயோடெக்: கோவேக்சின் மருந்துக்கு அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
(இன்றைய நாளில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
ஹைதராபாத் நகரத்தில் இருக்கும், அரசு நிறுவனமான பாரத் பயோடெக், ஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து, கோவேக்சின் என்கிற கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் ஃபைசர் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (ஆக்ஸ்ஃபோர்டு & ஆஸ்ட்ராசெனீகா கண்டுபிடித்த கோவிஷீல்ட்), நிறுவனங்கள், தங்களின் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு, இந்தியாவில் அவசர அனுமதி வழங்க வேண்டும் என, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அமைப்பிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
தற்போது பாரத் பயோடெக் நிறுவனமும், தன்னுடைய கோவேக்சின் மருந்துக்கு, அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என டி.சி.ஜி.ஐ அமைப்பிடம் விண்ணப்பித்து இருப்பதாக, பிடிஐ செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த 28 நவம்பர் 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோதி, கொரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி குறித்து நேரடியாக மேற்பார்வை செய்ய, அஹமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனே என மூன்று நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத் நகரத்தில் அமைந்து இருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் சென்றார் என்பது நினைகூரத்தக்கது.
சில தினங்களுக்கு முன், ஹரியாணா மாநிலத்தின் உள் துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
கடந்த 20 நவம்பர் 2020 அன்று பாரத் பயோடெக் தயாரித்து மேம்படுத்தி வரும் கோவேக்சின் தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கெடுத்த இவருக்கு, கோவேக்சின் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் விளக்கம்
கோவேக்சின் தடுப்பூசியைத் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த 05 டிசம்பர் 2020 அன்று விளக்கம் அளித்தது.
கோவேக்சின் தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்துக்கொள்ளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே மனிதர்களிடம் பரிசோதிக்கப்படுகின்றன என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
"இரண்டாவது டோஸ் முடிந்து 14 நாட்கள் கழித்த பிறகே இந்த தடுப்பூசி பலன் தரும். அப்படித் தான் கோவேக்சின் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது" எனக் கூறி இருந்தது பாரத் பயோடெக்.
வீட்டுக்காவலில் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளாரா? இல்லை என்கிறது டெல்லி போலீஸ்
டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்த பிறகு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ஆம் ஆத்மி கட்சி தமது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
இதனை டெல்லி போலீஸ் மறுத்துள்ளது.
"பாஜகவின் டெல்லி போலீஸ் அரவிந்த் கேஜ்ரிவாலை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது.
அவர் நேற்று சிங்கு எல்லைப் பகுதியில் விவசாயிகளை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து (அரவிந்த் கேஜ்ரிவால்) வீட்டில் இருந்து வெளியேறவோ, வீட்டுக்குள் நுழையவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை" என்று அந்த ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ட்வீட்டுக்கு டெல்லி வடக்கு துணை போலீஸ் ஆணையரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் பதில் அளித்துள்ளது.
அதில் "டெல்லி முதல்வர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் இந்தக் கூற்று தவறானது. மண்ணின் சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார். வீட்டின் முகப்பைக் காட்டும் படம் எல்லாவற்றையும் கூறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் முகப்பைக் காட்டும் படம் ஒன்றையும் அதில் பகிர்ந்துள்ளார்கள்.
'சட்டத்துக்கு உட்பட்டு நடமாடும் உரிமையை அவர் செயல்படுத்தி வருகிறார்' என்றால் அதன் பொருள் என்ன? இதில் போலீஸ் ஏதேனும் நுட்பமாக சொல்ல வருகிறதா? என்று தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: