You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு திறன் குறித்து எழும் கேள்விகள் - சரிவுக்கு சென்ற 5 நிதி நிறுவனங்கள்
- எழுதியவர், நிதி ராய்
- பதவி, மும்பையிலிருந்து
இந்தியாவில் வங்கிகளை கண்காணிக்கும் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (ஆர்பிஐ) மீது கடந்த சில நாட்களாக அதிருப்திகள் எழுந்துள்ளன.
கடந்த முப்பது மாதங்களில் ஐந்து நிதி நிறுவனங்கள் இந்தியாவில் மோசமான நிலைக்கு சென்றுள்ளன.
இதன் தொடக்கம் ஐஎல்&எப்எஸ் நிதி சேவை நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியதிலிருந்து தொடங்கியது. விசாரணை முகமைகள் இந்த நிறுவனம், நம்பிக்கையற்ற பலருக்கு கடன் வழங்கியதாக தெரிவித்திருந்தது.
இரண்டாவது வங்கி திவான் ஹவுசிங் பினான்ஸ் காப்ரேஷன், இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வீட்டுக் கடன் வழங்கி வந்தது இந்த வங்கி. இந்த இரண்டு வங்கிகளும் இருவேறு துறையை சார்ந்திருந்தாலும், இதன் தோல்வி ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது.
ஐஎல் & எப்எஸ் நிறுவனத்தின் கதையால் வங்கிகள் மிகவும் கவனமாக செயல்பட தொடங்கிவிட்டன. இதனால் பணம் வழங்குவதை நிறுத்திவிட்டன இதனால் 2018ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டது. 'கோப்ராபோஸ்ட்' செய்தி ஒன்று வங்கியின் ப்ரோமோட்டர்கள் வாடிக்கையாளர்களின் பணத்தில் 31,000 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறுகிறது.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் மற்றும் மகராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வங்கியின் அதிகாரிகள் எந்த விசாரணையுமின்றி 2,500கோடி ரூபாயை ஹவுசிங் டெவலப்மெண்ட் அண்ட் இன்ஃபிராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்துக்கு வழங்கினர்.
இதனால் வங்கி பெரும் நெருக்கடிக்கு உள்ளானது பிறகு வங்கியின் தலைவர் வார்யன் சிங்கிற்கு 96.5 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. வார்யன் சிங் எச்டிஐஎல்-லில் 1.91 சதவீத பங்குதாரர் ஆவார்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐந்தாவது மிகப்பெரிய தனியார் வங்கியான யெஸ் பேங்க் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கண்காணிப்பிற்குள் வந்தது. வாடிக்கையாளர்கள் அச்சத்தில் திடீரென வங்கியிலிருந்து பணத்தை எடுத்தனர். மிகப் பெரிய அளவு வாராக்கடனும், பங்கு வீழ்ச்சியும் ஏற்பட்டு,வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தையே எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடிக்குள்சிக்கியது யெஸ் பேங்க்.
இந்த பட்டியலில் சமீபத்தில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி லக்ஷ்மி விலாஸ் வங்கியும் இணைந்துள்ளது.
யெஸ் பேங்க் மற்றும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் பிரச்னை மட்டுமே ஆபிஐ-ஆல் சரி செய்யப்பட்டது. ஆனால் இன்றைய தேதி வரை பிஎம்சி வங்கியின் பிரச்னை சரி ஆகாமல்தான் உள்ளது.
எனவே ஆர்பிஐ இந்திய வங்கித் துறையை கண்காணிக்கும் அளவிற்கு திறனற்றுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஆனால் இந்த கேள்விக்கான விடை அத்தனை எளிதானதல்ல. இதற்கு பதிலளிக்கும் நிபுணர்களின் கூற்றும் பல்வேறுபட்டதாகவே உள்ளது. வட்டி விகிதம் நிர்ணயித்தல் மற்றும் வங்கியை கண்காணித்தல் போன்ற ஆபிஐயின் பங்கை பிரித்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தேவையில்லாத குழப்பத்தையும் குறைப்பதோடு, ஒரு தெளிவை கொடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
"வங்கிகள் ஒரே இரவில் நெருக்கடியை சந்திப்பதில்லை. இது முழுமுழுக்க திறனற்ற கண்காணிப்பால் நிகழ்பவை. வட்டி விகிதம் நிர்ணயிக்கும் பணியையும், வங்கிகளை கண்காணிக்கும் பணியையும் பிரிக்க வேண்டும். ஒரே சமயத்தில் உங்களால் பணத்தை காப்பாற்றவும், பெருக்கவும் இயலாது,"என பிபிசியிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத பொதுத்துறை வங்கி ஒன்றின் மூத்த இயக்குநர் தெரிவித்தார்.
சிலர் ஆர்பிஐ தனது தன்னாட்சியை இழந்து அரசியல் சார்பாக செயல்படுகிறது என்கின்றனர்.
சமீபத்தில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நெருக்கடியை சரி செய்ய அதை சிங்கப்பூரை மையமாக செயல்படும் டிபிஎஸ் வங்கியுடன் இணைத்தது குறித்து பேசிய அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் யூனியனின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாச்சலம், "இந்த இணைப்பு தோல்வியிலேயே முடியும் " என்று தெரிவித்தார்.
"இரு வங்கிகளும் வெவ்வேறு முறையை பின்பற்றியிருக்கும். எனவே இந்த இணைப்பு வெற்றியளிக்காது. ஊழியர்கள்தான் பாதிக்கப்படுவர். டிபிஎஸ் லாபம் ஈட்டுவதையே பிரதானமாக பார்க்கும், அதிக கிளைகள் அவசியமில்லை என்று கருதும் எனவே இது ஊழியர்களை பெரிதும் பாதிக்கும்."
"ஆர்பிஐ தனது தன்னாட்சியை இழந்துவிட்டு, மத்திய ஆட்சியின் அரசியல் நீட்சியாக உள்ளது. நமது வங்கிகளை ஏன் சிங்கப்பூரிலிருந்து செயல்படும் ஒரு வங்கி நடத்த வேண்டும்?," என்கிறார் வெங்கடாச்சலம்.
எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவர் பிரதிப் செளத்ரி, மத்திய வங்கியின் திறன் குறித்து கேள்வி எழுப்புகிறார்.
"வங்கிகள் புதிய கடன்களை கொடுப்பதை ஆர்பிஐ தடுக்க வேண்டும். மேலும் வங்கி வைப்புகளுக்கு மோசமான வட்டி வழங்குவதையும் தடுக்க வேண்டும், தனியார் வங்கிகள் வைப்பு நிதிக்கு 6% வட்டி வழங்குகின்றன. பொதுத் துறை வங்கிகள் அதைவிட குறைந்த வட்டியை வழங்குகின்றன. இது ஒரு ஆபத்தான அறிகுறி." என்கிறார்.
மேலும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி இரண்டையும் வெவ்வேறு விதமாக ஆர்பிஐ நடத்துகிறது. அவர்கள் பொதுத்துறை வங்கிகளை மட்டுமே கண்காணிக்கின்றனர். தனியார் வங்கிகளை கண்காணிப்பதில்லை. அதில் மன்னிக்க முடியாத ஒன்று யெஸ் பேங்க் விவகாரம்," என்கிறார் செளத்ரி.
ஆர்பிஐ அனைத்து விவகாரங்களிலும் முன்னதாக நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்கிறார் வங்கித் துறை குறித்த சுயாதீன ஆய்வாளர் ஹெமிந்த்ரா ஹசாரி.
"நாடாளுமன்றம் ஆர்பிஐ-யிடம் கேள்வி கேட்க வேண்டும். பொது மக்கள் கேள்வி எழுப்புவர் என்ற அழுத்தம் ஆர்பிஐக்கு இருக்க வேண்டும். சற்று விரைவாக நடவடிக்கை எடுக்க ஆர்பிஐ தவறிவிடுகிறது," என்கிறார் ஹசாரி.
வங்கித்துறை சார்ந்து எழுதிவரும் தமல் பந்தோபாத்யாய், இந்த கேள்விகள் அனைத்துக்கும் நடைமுறை பதிலை தருகிறார். 2013-14ஆம் ஆண்டில் ஆர்பிஐ தனது காண்காணிப்பு மாடலை மாற்றியது அதாவது CAMELS (போதுமான முதலீடு, சொத்து தரம், நிர்வாகம், வருவாய், பணப்புழக்கம், அமைப்பு மற்றும் கட்டுப்பாடு) என்று சொல்லக்கூடிய மாடலிலிருந்து ஆபத்துகள் அடிப்படையிலான கண்காணிப்பு மாடலாக மாற்றியது. இதனை ஒரு சிறப்பான நடவடிக்கை என சர்வதேச நாணய நிதியமும் தெரிவித்தது.
"இந்த புதிய நடைமுறையில் ஆர்பிஐ வங்கிகளின் பரிவர்த்தனைகளை சோதிப்பதை நிறுத்திவிட்டது. ஆர்பிஐயின் நேரடி கண்காணிப்பில் இருந்த வங்கிகளின் முக்கிய கிளைகள் அதிகப்படியான கடன்கள் மற்றும் அந்நிய செலாவணி செயல்பாடுகளில் ஈடுபட்டன," என பிபிசியிடம் தெரிவித்தார் பந்தோபாத்யாய்.
"சமீபத்தில் ஒரு சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க மத்திய வங்கி திட்டமிட்டது ஆனால் ஆர்பிஐக்குளேயே எதிர்ப்புகள் எழுந்ததால் அது அமைக்கபப்டவில்லை," என்கிறார் அவர்.
இந்த அனைத்து செயல்பாடுகளால் ஆர்பிஐயின் திறன் குறித்து கேள்வி எழுந்துள்ளதா? என அவரிடம் கேட்டபோது, "செப்டம்பர் 2018லிருந்து மார்ச் 2020 வரையான காலக் கட்டத்தில் வெளியான ட்வீட்டுகள், செய்தி அறிக்கைகள், ஆர்பிஐ ஆளுநரின் செய்திகள் அனைத்தும் ஒரு விஷயத்தைதான் திரும்ப திரும்ப தெரிவித்தன. அது... இந்திய நிதியமைப்பு பாதுகாப்பாகவும் நிலையாகவும் உள்ளது என்பதுதான். இந்திய வங்கித்துறை வரலாற்றில் ஆர்பிஐ இம்மாதிரியான அறிக்கைகளை இதுவரை கொடுத்ததில்லை. வங்கி கண்காணிப்பாளர்கள் பொதுமக்களின் கேள்வியான 'எங்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதா' என்ற கேள்விக்கு பதில் கூறிக்கொண்டே இருந்தனர்,"
"சக்திகாந்த தாஸ், ஆர்பிஐ-ன் முதல் ஆளுநர் அல்ல. ஆர்பிஐ நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்டதுதான். எனவே அரசிடமிருந்து அழுத்தங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். இருப்பினும் ஆளுநர்கள் சம நிலையாக நடந்து கொண்டுதான் வருகிறார்கள்," என ஆர்பிஐ-ன் தன்னாட்சி குறித்த கேள்விக்கு பதில் சொல்கிறார் பந்தோபாத்யாய்.
2020ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி நிதி கொள்கைகள் குறித்து அறிவிக்கும்போது ஆர்பிஐ ஆளுநரிடம் ஆர்பிஐ-ன் வங்கிகளை கண்காணிக்கும் திறன்குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த ஆளுநர், "கடந்த இரண்டு வருடங்களில் எங்களின் கண்காணிக்கும் அமைப்புகளை வலுமைப்படுத்தியுள்ளோம். தற்போது நாங்கள் செய்யும் ஆய்வுகளும், கடந்த இரு வருடங்களில் நடந்த கண்காணிப்பும் இதுவரை இல்லாத அளவிற்கு நடைபெற்றுள்ளது," என்றார்.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: நாங்கள் என்ன தீவிரவாதிகளா? ஆவேசம் அடையும் அய்யாக்கண்ணு
- இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: