You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸின் அறிவிப்பால் உங்களுக்கு என்ன நன்மை?
கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்புகளை ஐந்து முக்கிய தகவல்களாக தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.
- வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 5.15% என்ற அளவில் இருந்த விகிதம் தற்போது 4.4%ஆக குறைக்கப்பட உள்ளது. இதனால் வீட்டுக்கடன், வாகன கடன், இஎம்ஐ மற்றும் தொழில்துறையினர் பெற்ற கடன்கள் மீதான வட்டித் தொகை இனிவரும் காலத்தில் குறையும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.9%லிருந்து 4%ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.
- இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் சுமார் 3,74,000 கோடி ரூபாய் மொத்த பணப்புழக்கத்தில் உட்புகுத்தப்படுவதாக சக்திகாந்த் தாஸ்தெரிவித்துள்ளார்.
- வங்கி டெபாசிட்களுக்கு ஆர்பிஐ வழங்கி வந்த வட்டி 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த தேவையில்லை. கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் எடுத்து கொள்ளலாம். இது அனைத்து வகை கடன்களுக்கும் பொருந்தும்.
- தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
- இந்திய பொருளாதாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 2,80,000 கோடி ரூபாய் அளவு தொகையை உட்புகுத்தப்படும் என்றும், அது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4%ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- 2019 ஆம் ஆண்டில் சரிவை கண்ட சர்வதேச பொருளாதாரம் 2020-ல் மீளும் என்ற நம்பிக்கை கொரோனா வைரஸ் பாதிப்பால் தகர்ந்தது- கோவிட்-19 ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேவேளையில் இந்த சிரமமும் ஒருநாள் விலகும்.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய பொருளாதார சலுகைகளை அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் பொருளாதார சவால்களை சமாளிக்க ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் மேற்கூறிய அறிவிப்புகளை வெளியிட்டார்.