You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒரு மொழித் திணிப்பு' - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சமஸ்கிருதச் செய்தித் தொகுப்பை மாநில மொழித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப, தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அந்த அறிக்கை மொழித் திணிப்புக்கான முயற்சி என விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமஸ்கிருத செய்தித் தொகுப்பைத் தமிழின் பொதிகைத் தொலைக்காட்சியிலும், பிற மாநில மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று மண்டலத் தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்டாலின், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல்பாட்டை இனியாவது மோதி அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை டெல்லி தூர்தர்ஷன் ஒளிபரப்பும் 15 நிமிட சமஸ்கிருதச் செய்தி அறிக்கையை அதே நேரத்திலோ, அல்லது அடுத்த அரை மணி நேரத்திலோ மாநில மொழி அலைவரிசைகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என சுற்றறிக்கையில் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
அதேபோல, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வாராந்திரச் செய்தித் தொகுப்பையும் மாநில மொழித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என இந்தச் சுற்றறிக்கை வலியுறுத்துகிறது என்றார்.
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான தகுதியையும், ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியையும் அளித்து, பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ளது இந்திய ஒன்றிய அரசு. அதற்கு மாறாக, பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாளிலிருந்தே இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை மட்டுமே மேற்கொண்டு, மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தி, ஒருமைப்பாட்டைக் குலைக்கும் நடவடிக்கைகளை அனைத்து மட்டத்திலும் மேற்கொண்டு வருகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
''தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளுக்கான தூர்தர்ஷன் அலைவரிசையில் அந்தந்த மாநிலச் செய்திகள் அம்மாநில மக்களின் தாய்மொழியில் ஒளிபரப்பாகின்றன. தேசிய அளவிலான செய்திகள் ஆங்கிலத்தில் விரிவாக ஒளிபரப்பாகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 15 ஆயிரம் பேர் அளவிற்கே பேசப்படும் - 'உலக வழக்கழிந்த' சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை 8 கோடிக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களிடமும், அதுபோலவே பல கோடி அளவிலான இந்தியாவின் பிற மொழி பேசும் மக்களிடமும் திட்டமிட்டுத் திணிப்பது, அவரவர் தாய்மொழி மீது - மொழி சார்ந்த தேசிய இனத்தின் மீது, தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்கப் பண்பாட்டுப் படையெடுப்பாகும்,'' என தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்