You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அகமது படேல் மரணம்: காங்கிரஸ் மூத்த தலைவரின் அரசியல், வாழ்க்கை வரலாறு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 71.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அகமது படேல் ஒரு மாத காலத்துக்கு முன்பு உண்டான கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார். இதை அவரது மகன் ஃபைசல் படேல் தெரிவித்துள்ளார்.
"எனது தந்தை அகமது படேல் 25.11.2020, அதிகாலை 3:30 மணி அளவில் காலமானார் என்பதை மிகுந்த வேதனையுடனும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாத காலத்திற்கு முன்பு அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பு அவரது உடல்நிலை உள்ளுறுப்புகள் செயலிழப்பால் மிகவும் மோசமடைந்தது. இறைவன் விருப்பத்தின்பெயரால் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கட்டும்," என்று ஃபைசல் படேல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அகமது படேல் யார்?
குஜராத்தில் உள்ள பரூச் மாவட்டத்தில் இருக்கும் பிராமல் எனும் கிராமத்தில் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று பிறந்தவர் அகமது படேல். அவரது தந்தையின் பெயர் முகமது இசாக் படேல். தாயின் பெயர் ஹவபென் படேல்.
இறக்கும்போது காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்த அகமது படேல் சோனியா காந்திக்கு அரசியல் ஆலோசகராக இருந்த போது கட்சியில் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்கினார்.
1985இல் ராஜீவ்காந்திக்கு அவர் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார்.
எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள அகமது படேல், பரூச் தொகுதியில் இருந்து மூன்று முறை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், ஐந்து முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு 28 வயதாக இருந்தபோது பரூச் மக்களவைத் தொகுதியில் இவரைப் போட்டியிட வைத்தார் இந்திரா காந்தி. பின்னர் 1980 மற்றும் 1984 தேர்தல்களிலும் அங்கு மீண்டும் போட்டியிட்டு வென்றார்.
1984இல் அகில இந்திய காங்கிரசின் துணைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல். பின்பு 1986ஆவது ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அகமது படேல்.
1988இல் காந்தி -நேரு குடும்பம் நடத்தும் ஜவகர் பவன் அறக்கட்டளையின் செயலாளர் ஆக்கப்பட்டார். இதன் பின்பு காந்தி- நேரு குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக உருவானார்.
ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தபோது அவருக்கு எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்தாரோ அதே அளவு நம்பிக்கைக்குரியவராக சோனியா காந்திக்கும் அவர் இருந்ததாகவே பார்க்கப்பட்டார்.
கடைசியாக அகமது படேல் 2017இல் மாநிலங்களை அவைக்கு தேர்வானார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியவரின் நெருக்கடியால், வழக்கமாக போட்டியின்றித் தேர்வாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பல ஆண்டுகளுக்கு குஜராத் சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு நடந்தது.
பல ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று அகமது படேல் மாநிலங்களை அவைக்கு மீண்டும் தேர்வானது அப்போது தேசிய அளவில் பெரிதும் பேசப்பட்டது.
இவரது மறைவிற்கு தலைவர்களும், பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட பிற கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
- கிருஷ்ணவேணி: தனது மரணத்தை தொட்டுப் பார்த்த ஒரு தலித் பெண்
- நிவர் புயல்: "ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது" - மாநில அரசுகளுக்கு கேபினட் செயலாளர் உத்தரவு
- நிவர் புயலுக்கு பெயர் வைத்தது இரான் - அடுத்து வரும் புயல்களுக்கு என்ன பெயர் தெரியுமா?
- நிவர் புயல்: பாம்பன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ குடிசைகள்
- நிவர் புயல்: தமிழகம், புதுச்சேரி மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :