You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் மெஹபூப் ஆலம் யார்?
- எழுதியவர், நீரஜ் பிரியதர்ஷி
- பதவி, பி.பி.சி ஹிந்திக்காக, பட்னா, பிகாரிலிருந்து
பிகார் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் 19 வேட்பாளர்களில் 12 பேர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. கடிஹாரில் பல்ராம்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று நான்காவது முறையாக மெஹபூப் ஆலம் எம்.எல்.ஏ.வாகியுள்ளார்.
மெஹபூப் ஆலம் "மக்களின் தலைவர்" என்று வர்ணிக்கப்படுகிறார். அவரது எளிமை குறித்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டு வருகிறது.
மெஹபூப் தனது இளம் மகளுடன், சாதாரண உடையில், குறைந்த வெளிச்சம் உள்ள ஒரு கச்சா வீட்டின் உள்ளே இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மெஹபூப் , தனது சொத்து, கையில் ரொக்கம் மற்றும் வங்கி டெபாசிட் உட்பட மொத்தம் சுமார் ரூ.1 லட்சம் என்று தெரிவித்துள்ளார்.
பல்ராம்பூர் சட்டமன்றத்தின் ஆபாத்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவானந்தபூர் கிராமத்தில் 800 சதுர அடி வீட்டில் வசித்து வருகிறார் மெஹபூப்.
சீமாஞ்சல் பகுதியில் மட்டுமல்ல, பிகார் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால்தான், மெஹபூப் ஆலம் விவாதிக்கப்பட்டு வருகிறார் . ஆனால், நான்கு முறை எம்.எல்.ஏ ஆன பிறகும் கூட, அவர் குடும்பத்துடன் ஒற்றை அறை கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். அவரிடம் சொந்தமாக ஒரு நல்ல வீடு கூட கிடையாது.
முன்னதாகவும் , ஆலம் பெயர் விவாதிக்கப்பட்டது, முஹரம் ஊர்வலத்தின்போது போது குச்சிகளால் அடித்துக் கொண்டு சென்ற அவரது வீடியோக்கள் சமூக ஊடகத்தில் வைரலானது
அது தவிர, வங்கி மேலாளரை அறைந்த வழக்கில், அவரது பெயர் தலைப்புச் செய்திகளில் வந்தது, சிசிடிவி காட்சிகளில் மெஹபூப் ஆலம் அறைந்த காட்சிகள் இருந்ததாக செய்திகள் வந்தன.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின்படி, ஆலம் மீது ஐந்து குற்றவியல் வழக்குகள் உள்ளன.
ஆனாலும் 'மக்கள் தலைவர்' எப்படி?
பிபிசியிடம் பேசிய மெஹபூப் ஆலம், தனக்கு எதிராக நடந்து வரும் வழக்குகள் பொய்யானவை , ஆதாரமற்றவை என்று கூறினார்.
"இந்த அவதூறுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆதாரம் இருந்திருந்தால், நான் இப்போது தண்டனை பெற்றிருப்பேன். என்னை மாட்ட வைக்கும் சதி என்று பொதுமக்களுக்கு தெரியும், அதனால்தான் நான் வெற்றி பெறுகிறேன்."
தன்னை பற்றி பேசிய மெஹபூப் ஆலம், "நான் ஒரு மார்க்சியவாதி, எனது வாழ்நாள் முழுவதும் எனது வர்க்கத்தினருக்காக போராடுகிறேன் . நான் ஒரு எம்.எல்.ஏ. ஆனாலும் இன்னும் என்னிடம் ஒரு உறுதியான வீடு இல்லை. அது ஒரு விஷயமே இல்லை. இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான , லட்சக்கணக்கான மக்களிடம் உறுதியான வீடு இல்லை. எங்கள் போராட்டம் அந்த மக்களுக்காகவே தவிர, நமக்காக அல்ல" என்றார்.
தற்போதைய தேர்தல்களைப் பார்கும்போது, வெறும் 1 லட்சம் ரூபாய் சொத்துடன் மெஹபூப் நான்கு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை நம்புவது கடினமாக உள்ளது.
தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை என்பது பற்றி மெஹபூப் கூறுகிறார். நான் தேர்தலில் போட்டியிடவில்லை , என் வகுப்பின் அடையாளமாக மட்டுமே இருக்கிறேன் . என் தேர்தலை இங்குள்ள மக்கள் போராடுகிறார்கள் . அதற்கு எனக்கு பணம் தேவையில்லை. தேர்தல் பிரசாரம் என்று பாரத்தால், எனது வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்களிப்பிற்கு முன் செய்யப்படும் பிரசராத்திற்கான நேரம் எனக்கு தேவையில்லை. என் பகுதி மக்கள் மத்தியில் நான் 24 மணி நேரமும் வாழந்து கொண்டிருக்கிறேன் அதனால் நான் கடைசி நேரத்தில் மக்களிடையே செல்ல வேண்டிய அவசியம் இல்லை."
தேர்தலில் போட்டியிடும் போதெல்லாம்,வெற்றி அல்லது இரண்டாவது இடம்
படிப்பறிவு கொண்ட பாரம்பரியத்தை ச் சேர்ந்த மெஹபூப் ஆலம் மிக இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்தார் .
ஆனால், இளைஞராக இருந்த நாட்களில், ரிக் ஷா ஓட்டியதால், ரிக் ஷகாரர்கள் சங்கத்தில் சேர்ந்து,, அமைப்பு அரசியலின் நுணுக்கங்களை கற்றார் .
மெஹபூபின் தேர்தல் அரசியல், 1985ல் அப்போதைய பார்சோய் சட்டமன்றத்திலிருந்து ஒரு சி.பி.ஐ(எம்) வேட்பாளராக தொடங்கியது. அவர் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
பின்னர் சி.பி.ஐ (எம்) உடனான, கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர் 1990இல் அவர் சி.பி.ஐ (எம்.எல்) சின்னத்தில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தில் இருந்தார், ஆனால் அவரது வாக்கு சதவீதம் மேம்பட்டது.
"1995 தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்தது. நிலப்பிரபுத்துவ கிரிமினல் சக்திகள் ஒரு தலித் குடியிருப்பைத் தாக்கி ஒரு குளத்தை கைப்பற்ற முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்."
"தலித்துகளுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகள் பற்றி நான் பேசிக் கொண்டிருந்ததால் , இந்த கொலை வழக்கில் போலீஸ் என்னை குற்றம் சாட்டியது. அந்த நேரத்தில் அதுதான் எனது கோஷமாக இருந்தது," என்று மெஹபூப் விளக்குகிறார்.
தேர்தலில் போட்டியிட முடியாத போது
1995ல் மெஹபூப் ஆலம் சிறையிலிருந்து தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது போட்டி ரத்து செய்யப்பட்டது.
கட்சியின் ஆலோசனையுடன், தனது தம்பி முனாப் ஆலத்தை களத்தில் இறக்கினார் . முனாப் வெற்றி பெற முடியாமல் போனாலும் , 27 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
இந்த கொலை வழக்கில் மெஹபூப்பிற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையில் இருந்து திரும்பி வருவதற்குள் தனக்கு எதிராக மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார். பின் அவர் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாக இருந்தும், 2000மாவது ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு மெஹபூப் வெற்றி பெற்றார்.
2005-ல் இரண்டு முறை சட்டசபை தேர்தல் நடந்தது. முதல் முறையில் மெஹபூப் ஆலம் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டாவது முறை , அவர் வேட்புமனுதாக்கல் செய்யும் போது கைது செய்யப்படலாம் என்று அவர் நினைத்ததால், அவர் தனது சகோதரர் முனாப் ஆலத்தை சிபிஐ-எம்எல் சார்பில் மீண்டும் நிறுத்தினார் .
மெஹபூப் ஆலம் தலைமறைவாக இருந்தபோதும் , தேர்தலில் முனாப் வெற்றி பெற்றார்.
மெஹபூபை, பொறுத்தவரை, அவரது சகோதரர் எம்.எல்.ஏ. என்ற முறையில் தனது பங்கை ஆற்ற முடியவில்லை. மக்கள் கோபமாக இருந்தனர், அதனால்தான் 2010 தேர்தல் நடைபெற்றபோது மெஹபூப் தோற்கடிக்கப்பட்டார்.
ஆனால் 2015 தேர்தலில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மெஹபூப் ஆலம் ஒரு நக்சலைட் என்று எதிர்தரப்பு குற்றம் சாட்டுகிறது. அவர் ஒரு வன்முறையாளர் என்றும் கூறப்படுகிறது
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மெஹபூப் ஆலம் கூறுகையில், "நீங்கள் நிலப்பிரபுத்துவ கிரிமினல் குற்றவாளிகளை த் தாக்கும்போது போலீசார் உங்களைத் தாக்காத்தான் செய்வார்கள். பிகாரில் 21 லட்சம் ஏக்கர் நிலத்தை ஏழை மக்களிடம் பிரித்துக் கொடுப்பது பற்றி பேசினால் நாங்கள் நக்சலைட்டுகளா? இதை மட்டும் நில சொந்தக்காரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. நாம் பொதுமக்களின் பாதுகாப்பிலும் அவர்களின் உதவியாலும் இயங்கிக் கொண்டிருக்கிறோம் ."
மெஹபூப்பைத் தவிர, மற்றவர்களும் உள்ளனர்
இந்த முறை நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மெஹபூப் ஆலம் தவிர, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலரின் அரசியல் வாழ்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஜேஎன்யூவின் முன்னாள் மாணவர் தலைவர் சந்தீப் சௌரவ் மற்றும் பிகார் முன்னாள் மாணவர் தலைவர் அஜித் குஷ்வாஹா ஆகியோரின் பெயர்களும் இதில் அடங்கும்.
மாணவர் அரசியலிலிருந்து மைய அரசியல் நீரோட்டத்திற்கு அவர்களின் பயணம், தேர்தல் விவாதத்தின் மையமாக இருந்தது.
சந்தீப் சௌரவ், பட்னாவில் பாலிகஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பாலிகஞ்சில் வாக்குப்பதிவு நடந்த மறுநாள் மாலை, பட்னாவில் உள்ள மௌரியா லோக் காம்ப்ளக்ஸில் சில இளைஞர்களுடன் சாலையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது சந்தித்தோம் .
"நாங்கள் இங்கிருந்துதான் சென்றோம் , எனவே நிச்சயமாக இங்கே திரும்பி வருவோம்," என்று அவர் கூறினார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால், இங்கே இந்த கைவண்டியில் டீ குடிக்கும் அதே வகுப்பைச் சேர்ந்தவர்தான் நான் என்று சொல்கிறேன் ."
இதேபோல், தும்ரான் சட்டசபை தொகுதியில் சிபிஐ-எம்எல் தரப்பில் வெற்றி பெற்ற அஜித் குஷ்வாஹா, இந்த தேர்தலில் , பிகார் மாணவர் அரசியலோடு தொடர்புடைய ஒரே பெயர்.
சமீப காலங்களில், ஜே.பி இயக்கத்தில் இருந்து தலைவர்களின் தலைமுறைக்கு பின், பிகாரில், பிரதான அரசியல் நீரோட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர் தலைவர் எவரும் இல்லை. இந்த நடைமுறையை அஜீத் குஷ்வாஹா உடைத்திருக்கிறார்.
அவர் பிபிசியிடம் கூறுகிறார்: "முன்பு மாணவர் அரசியலில் இருந்துவிட்டு அதிகாரத்தின் முனைக்கு வருபவர்கள், அடுத்த தலைமுறை தயாராக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை. இதனால், மாணவர் அரசியல் சூழல் கெட்டுவிட்டது. மாணவர் சங்க தேர்தல்கள் நின்று விட்டன . இதற்காக நீண்ட காலமாக போராடினோம். இப்போது மீண்டும் மாணவர் அரசியல் தொடங்கிய நிலையில், வரும் நாட்களில் புதிய முகங்கள் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
பிற செய்திகள்:
- க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன?
- குழந்தைகள் திருட்டு: நைரோபி கள்ளச்சந்தைகள் இலக்கு வைக்கும் அபலை பெண்கள்
- மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்துக் காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்
- பழனி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த முதியவர் பலி - அடுத்தடுத்து கடந்த பரபரப்பு நிமிடங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: