தீபாவளி பட்டாசு: விதிகளை மீறி வெடித்தால் 6 மாத சிறை - எச்சரிக்கும் தமிழக அரசு

இன்று (12 நவம்பர் 2020, வியாழக்கிழமை) இந்தியாவில் உள்ள, சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழஙகுகிறோம்.

Diwali

பட மூலாதாரம், AFP

தீபாவளியின் போது தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவா்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட வழி வகைகள் இருக்கிறது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணிநேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை தமிழக அரசே முடிவு செய்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரங்கள் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக விதிக்கப்பட்ட அதே நேரக்கட்டுப்பாட்டை, இந்தாண்டும் விதித்து, தமிழக அரசு இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்துவது குறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்தனா். இதில் கடந்த இரு ஆண்டுகளை போலவே இந்தாண்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீதும், மருத்துவமனை, வழிப்பாட்டுத் தளங்கள்,வணிக வளாகங்கள்,குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவா்கள் மீதும், அதிக ஒலி எழுப்பபக் கூடிய பட்டாசு வெடிப்பவா்கள் மீதும் வழக்குப் பதிவதற்கு காவல்துறையினா் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது சட்டப்பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுவதற்கு வழிவகை இருக்கிறது. பட்டாசு வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அளவில் தயாராக இருக்கும்படி உயா் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

"இனி ஓடிடி தளங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன" - இந்திய அரசு

Prakash javatekar

பட மூலாதாரம், Gettyimages

டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஜீ5, நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அரசாணையில் இந்திய குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டுள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆணை மூலமாக, ஓடிடி தளங்களை முறைப்படுத்துவதற்கான கொள்கைகளையும் விதிமுறைகளையும் வகுப்பதற்கான அதிகாரம் அந்த அமைச்சகத்துக்கு அதிகாரப்பூா்வமாக அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், ஓடிடி தளங்களை வரமுறைப்படுத்த ஒரு தன்னாட்சி அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஓடிடி தளம் என்பது வெறும் செய்தித் தளங்களாக மட்டுமல்லாமல் நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட சேவைகளையும் உள்ளடக்கியதாகும்.

முன்னதாக, டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதாக தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் கூறியிருந்தது. அந்த ஊடகத்தில் நிலவும் வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை சுட்டிக் காட்டி, அதை வரைமுறைப்படுத்த ஒரு குழுவை நியமிக்க யோசித்து வருவதாகவும் கூறியிருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஊடகத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துமாறு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது என்று கூறியிருந்தார். ஆனால் ஓடிடி தளங்களும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களைப் போலவே ஒரு ஊடகம் என்பதால், அதையும் ஒழுங்குமுறைப் படுத்த ஒரு வழி வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்று இந்து தமிழ் திசையில் கூறப்பட்டுள்ளது.

"மும்பை தாராவியில் வெறும் இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று"

Dharavi

பட மூலாதாரம், Reuters

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.

புதிதாக இரண்டு பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,608 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3,246 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தற்போதைய நிலையில் அங்கு 51 பேர் மட்டுமே இன்னும் கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.

"ஸ்பூட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்து 92% பாதுகாப்பளிக்கிறது"

Sputnik V

பட மூலாதாரம், Gettyimages

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் V, 92% பாதுகாப்பு அளிக்கிறது என ரஷ்ய அதிகாரிகள் சொல்லி இருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்த கண்டுபிடிப்புகள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்த ஸ்பூட்னிக் V மருந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தால், இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான், ப்ஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து, 90 சதவிகிதம் பாதுகாப்பளிப்பதாகச் சொன்னது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: