பாஜகவின் வேல் யாத்திரை வழக்கு: 'வேல் ஓர் ஆயுதம், ஆயுத சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டுள்ளது' - தமிழக அரசு வாதத்தை ஏற்ற நீதிபதிகள்

தமிழகத்தில் பாஜகவினர் நடத்தும் வேல் யாத்திரையில் தமிழக அரசு தலையிடக்கூடாது என உத்தரவிடமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வேல் யாத்திரை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது என்றும் தமிழக அரசு இந்த யாத்திரையில் தலையிடக்கூடாது என்றும் கோரப்பட்டது.

பாஜகவினர் ஒருங்கிணைத்துள்ள வேல் யாத்திரைக்கு மட்டும்தான் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்றும் பிற அரசியல் நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும் பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, யாத்திரைக்கு உத்தரவு தருவதில் என்ன சிக்கல் உள்ளன என விசாரித்தனர்.

காவல்துறை சார்பாக தரப்பட்ட விளக்கத்தில், யாத்திரை செல்வதற்காக முன்னர் ஒப்புக்கொண்ட விதிமுறைகளை பாஜகவினர் பின்பற்றப்படவில்லை என்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாத்திரை நடைபெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. வேல் யாத்திரை தொடர்பான புகைப்படங்கள், செய்திகள் ஆகியவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனைஅடுத்து, வேல் யாத்திரையால் பொது இடங்களில் சிரமங்கள் ஏற்பட்டதை பதிவு செய்த நீதிபதிகள், "வேல் ஓர் ஆயுதம், ஆயுத சட்டப்படி அது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனை கொண்டு பொது இடத்தில் ஊர்வலம் செல்வது ஏன்," என வினவினர்.

அதற்கு பதில் அளித்த பாஜக வழக்கறிஞர், ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்பட்ட வேல் 'கார்ட்போர்டு வேல்' என்றார். மேலும் தமிழக அரசு இந்த யாத்திரையில் தலையிடக்கூடாது என்று கோரினர்.

பாஜகவின் வேல் யாத்திரை கோயில் யாத்திரை அல்ல என்றும் அரசியல் யாத்திரை என காவல்துறை சார்பாக வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற நீதிபதிகள், யாத்திரையில் தமிழக அரசு தலையிடக்கூடாது என உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பாஜகவின் வேல் யாத்திரை

தமிழ்நாட்டில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6ஆம் தேதிவரை, மாநில பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த யாத்திரைக்கு முதலில் அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த யாத்திரைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் இந்த தகவலை தமிழக அரசு கூறியது.

கொரோனா தொற்று காரணமாக இந்த வேல் யாத்திரைக்கு அனுமதிக்க முடியாது என்று ஏற்கெனவே அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இருப்பினும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி அறிவித்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், எல். முருகன் தலைமையிலான பாஜகவினர் திருத்தணிக்கு செல்ல காவல்துறையினர் திடீரென்று அனுமதி வழங்கினார்கள்.

சென்னை எல்லையில் நாசரேத் பகுதியில் சில நிமிடங்கள் அவர்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மேலும் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.

அவர்கள் செல்லும் பாதையில் காவல்துறையினரே வழியமைத்து போக்குவரத்து சீராக இருக்க நடவடிக்கை எடுத்தனர். எனினும், திருத்தணியில் கோயிலுக்கு செல்ல ஐந்து வாகனங்களில் மட்டுமே பாஜகவினரை காவல்துறையினர் அனுமதித்தனர்.

திருத்தணியில் பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டபடி வேல் யாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்க முற்பட்ட நிலையில், அதன் மாநில தலைவர் எல். முருகன், ஹெச். ராஜா உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, சென்னையில் இருந்து திருத்தணிக்கு திறந்தவெளி வேனில் முருகன், கட்சித் தொண்டர்களுடன் சென்றார். அங்கு கோயிலில் வழிபட்ட அவர் பிறகு தொண்டர்களிடையே உரையாற்றிய பிறகு யாத்திரையை தொடங்க முற்பட்டார்.

இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர், எல். முருகன், எச். ராஜா, மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை கைது செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: