You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம்: "ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட, மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால் மோசமடைந்த உடல்நிலை காரணமாகவே ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கைகள், தடயவியல் பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தள்ள சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள சிபிஐ காவல் கண்காணிப்பாளர் தன்மயா பெஹரா, கூடுதல் கண்காணிப்பாளர் விஜய் குமார் ஷுக்லா, இது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த குற்றப்பத்திரிகையில் உள்ள தடயவியல் பரிசோதனை, விசாரணை ஆய்வு அறிக்கை தொடர்பான தகவல்கள் பிபிசிக்கு தெரிய வந்துள்ளன.
அதில், உயிரிழந்த தந்தை மகன் இருவருமே காவல் நிலையத்தில் வைத்து மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இருவரது உடலில் இருந்தும் ரத்தம் சொட்ட, சொட்ட, போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இருவரையும் காவல் நிலையத்தில் ஒரு மேஜையில் படுக்க வைத்து ஆசனவாய் பகுதியில் லத்தி, கம்பு போன்றவற்றால் மிருகத்தனமாக கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் ரத்தம் கடுமையாக வந்துள்ளது. ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமலேயே கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர் என்று சிபிஐ கூறியுள்ளது.
காவலர்களின் கொடூரமான துன்புறுத்தலினாலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்த தகவல்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர்கள் பியூலா மற்றும் ரேவதியின் வாக்குமூலத்தை வைத்தே உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அதன் பேரில் அன்று இரவு முழுவதும் அவரை தந்தை மகன் இருவரையுமே கடுமையாக தாக்கி உள்ளனர்.
இருவரது ஆடைகளையும் பகுதியளவு கலைத்து, காவல் நிலையத்தில் இருந்த மேஜையில் பின்புறமாக படுக்க வைத்து 3 போலீசார் பிடித்துக்கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முத்துராஜா ஆகியோர் கடுமையாக தாக்கி உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது .இதற்காக அவர்களின் உடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களை கடுமையாக தாக்கப்பட்டதும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இவற்றை மறைத்து போலீசார் மருத்துவச் சான்றிதழ் பெற்று கோவில்பட்டி சிறையில் அடைந்துள்ளதாகவும் போலீசார் கடுமையாக தாக்கி தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று அந்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் தலையீட்டால் சிபிஐ விசாரணை
கடந்த ஜூன் மாதம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் உயிரிழந்தனர் . இது குறித்து உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு தாக்கல் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது. முதலில் சிபிசிஐடிவிசாரித்தது . அதன் பின் தமிழக அரசின் உத்தரவின் பேரில்இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது .இதில் முதற்கட்ட தகவல் அறிக்கையில் தந்தை, மகன் இருவரும் காவல் நிலையத்தில் வைத்து போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததது என கண்டறியப்பட்டது.
முன்னதாக, தமிழ்நாடு காவல்துறையின் மாநில குற்றப்புலனாய்வு சிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால் துரை, காவலர்கள் செல்லதுரை, வெயில் முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 9 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்தபின் விரைவாக விசாரணை நடத்தியது. 9 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தற்போது வேகம் எடுத்துள்ளது.
பிற செய்திகள்:
- பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் - என்ன நடக்கிறது?
- பழைய சி.எஸ்.கே போல விளையாடி பெங்களூரை வீழ்த்திய தோனி அணி
- போர் நினைவிடத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய இந்திய பாதுகாப்பு அமைச்சர்
- முஸ்லிம் நாடுகள் முதல் சீனா வரை: டிரம்ப் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன?
- சீனாவின் நட்பு நாடான மியான்மருக்கு இந்தியா வழங்கிய நீர்மூழ்கி கப்பல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: