You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா, சீனா போருக்கு வித்திட்ட "1959" எல்லை மோதல் - அதிகம் அறியப்படாத அதிர்ச்சிப் பின்னணி
- எழுதியவர், எம்.ஏ. பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 1959ம் ஆண்டு அக்டோபரில் லடாக் பகுதியில் சீன படை வீரர்கள், இந்தியப் பகுதிகளை அத்துமீறி ஆக்கிரமித்ததை எதிர்கொண்டபோது ஏற்பட்ட சண்டையில் இந்திய காவலர்கள் பத்து பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, ஆண்டுதோறும், அக்டோபர் 21ஆம் தேதி தேசிய காவலர் வீர வணக்க நாள் ஆக கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது இந்திய முப்படைகளில் பணியில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி என்ற பெயரில் நினைவிடம் உள்ளது.
அதைச்சுற்றிய தூண்களின் சுவர்களில் இந்தியாவுக்காக உயிர்த் தியாகம் செய்த முப்படை வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இவர்களுக்காக தேசிய அருங்காட்சியகமும் அருகே கட்டப்பட்டுள்ளது.
முப்படையினரைப் போலவே, காவல் துறையினருக்கும் அத்தகைய கெளரவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் காவலர் நினைவிடம் அமைக்க அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, அடிக்கல் நாட்டப்பட்டது.
பல்வேறு காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டு வந்த அந்த திட்டம், 2018ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி செயல்வடிவம் பெற்றது. அதன்படி, ஏற்கெனவே சாணக்கியபுரி பகுதியில் நிறுவப்பட்டிருந்த காவலர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு, பணியில் உயிர்த்தியாகம் செய்த காவலர்கள் மற்றும் இந்திய துணை ராணுவப்படையினருக்கான நினைவுச்சின்னமும் ஓர் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டன.
அங்கு 238 டன் எடையிலான கிரானைட் தூண் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் அருகில் சுவர் அமைக்கப்பட்டு அதில் உயிர்த் தியாகம் செய்த 34,800 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் பிரதமர் நரேந்திர மோதி 2018ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
காவலர்களின் வீர வணக்க நிகழ்வுக்கான பின்னணி
1959-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் தேதி. அப்போதைய ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் உள்ள ச்சாங் சென்மோ நதி நீர்ப் பள்ளத்தாக்கின் சோதனைச் சாவடிதான் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற முகாம் தளம்.
கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 300 அடி உயரத்தில் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான உறை பனி சூழல் அங்கு நிலவிய காலகட்டத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் இந்திய ரிசர்வ் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கமான பணியின் அங்கமாக ஹாட் ஸ்பிரிங்ஸில் கண்காணிப்பு தூரத்தை அறிதல் என்ற திட்டத்தின்படி லானக் லா கணவாய் என்ற பகுதியை நோக்கிய மலையேற்ற நடவடிக்கையை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தொடங்கினார்கள்.
இந்த குழுவினர், மூன்று குழுக்களாக புறப்பட்டனர். அதில் இரு குழுக்கள் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிக்கு திரும்பிய நிலையில், மூன்றாவது குழுவில் இருந்த இரு காவலர்கள், ஒரு சுமை தூக்கும் நபர் என மூவர் முகாமுக்குத் திரும்பவில்லை. அவர்களைத் தேடி ஏராளமான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அடங்கிய குழு துணைக் கண்காணிப்பாளர் கரம் சிங் மற்றும் தியாகி தலைமையில் மறுநாள் புறப்பட்டது.
அப்போது சீன ராணுவத்தினர் அங்கு வந்து சென்றதற்கான கால் தடங்கள், பனியில் பதிவாகியிருந்ததை கண்டனர். இதையடுத்து தியாகி தலைமையிலான படையினரை அங்கேயே முகாமிடச் சொல்லிய கரம் சிங் தலைமையில் 20 பேர் மட்டும் கால்தடங்களை பின்பற்றிச் சென்றனர்.
ஆனால், கடுமையான பனி, சீதோஷ்ண நிலை காரணமாக கரம் சிங் மற்றும் தியாகி தலைமையிலான குழுக்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதேவேளை, பனிப்பிரதேசத்தின் உச்சத்தில் இருந்த சீன படையினர், தங்களை நோக்கி வந்த இந்திய காவலர்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் 10 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து தியாகி தலைமையிலான குழு அவர்களைத் தேடி புறப்பட்டபோது, அவர்களை நோக்கியும் சீன படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது இரவு நேரம் ஆகி விட்டதால், பலியான தங்களுடைய சக வீரர்களின் உடல்களை மீட்கும் தியாகி குழுவின் முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை.
அவரது சக காவலர்களும் காயம் அடைந்திருந்தனர். அந்த இடத்திலேயே அக்டோபர் 22ஆம் தேதிவரை தியாகி தலைமையிலான குழு எதிர் தாக்குதலுக்கு தயாராக நின்றிருந்த நேரத்தில் ட்சோக்ஸ்டாலு என்ற பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு திரும்புமாறு அவரது குழுவினருக்கு சி.ஆர்.பி.எஃப் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து சாவடிக்கு திரும்பியவர்களில் மிகவும் படுகாயம் அடைந்த நால்வர், அங்கிருந்து ஸ்ரீநகருக்கு ஹெலிகாப்டர் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை, எல்லையில் கரம் சிங்கும் சில காவலர்களும் சீனப் படையினரிடம் சிக்கியிருந்தனர். முன்தினம் நடந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார். அந்த வீரரின் சடலத்தை கரம் சிங்கின் குழுவினர் சுமந்து வர கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அங்கு காய்கறிகளை பராமரிக்க வெட்டப்பட்டிருந்த 6 அடி ஆழம், 7 அடி ஆழ குழியில் பலியான இந்திய வீரர்களின் சடலங்களை போடச் செய்த சீன படையினர், கரம் சிங் தலைமையிலான எஞ்சிய குழுவினரை, துப்பாக்கி சூடு நடத்தியதாக ஒப்புக்கொள்ள துன்புறுத்தப்பட்டதாக பின்னாளில் தெரிவிக்கப்பட்டது.
கடும் குளிர், துன்புறுத்தல் என மூன்று அல்லது நான்கு நாட்களாக சீன படையினரின் பிடியில் இருந்த கரம் சிங் குழுவினர், மொத்தம் 12 நாட்கள் சீனப் படையினரின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் தீவிர ராஜீய முயற்சிகள் விளைவால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது ஏற்கெனவே காணாமல் போயிருந்ததால் கரம் சிங் குழு தேடிச் சென்ற காவலர்களில் மூன்று பேரும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது உயிரிழந்த இந்திய படையினரின் 9 சடலங்களை கரம் சிங் தமது தலைமை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டினார்.
ஆனால், இந்திய காவலர் மக்கன் லால் என்பவரின் சடலம் மட்டும் ஒப்படைக்கப்படவில்லை.
ஒப்படைக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் சடலங்கள்
பலத்த காயங்களுடன் கிடந்த அவரது உடலை தாங்கள் பிடிபட்டபோது ச்சாங் சென்மோ நதி அருகே பார்த்ததாக பின்னர் நடந்த விசாரணையின்போது கரம் சிங் தெரிவித்தார். ஆனால், மக்கன் லாலை தாங்கள் பிடித்ததாகவோ கொன்றதாகவோ சீன படையினர் உறுதிப்படுத்தவில்லை. நீண்ட தேடலுக்கு பிறகு அவர் உடல் மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தியா, சீனா நடத்திய ராஜீய பேச்சுவார்த்தையின் பலனாக, 1959ஆம் ஆண்டு, நவம்பர் 13ஆம் தேதி, இந்தியா, சீனா எல்லையில் கொல்லப்பட்ட 10 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் சடலங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆனால், அவை முகாம்களுக்கு சுமந்து செல்லும் அளவுக்கு இல்லாத நிலையில் அவற்றை ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலேயே முழு அரசு மரியாதையுடன் வீரர்கள் தகனம் செய்தனர். இந்த நடவடிக்கையின் முகமாக அடையாளம் காணப்பட்ட கரம் சிங்குக்கு, இந்திய குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்த சம்பவம், லடாக் பகுதியில் 1950களிலேயே சீன ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரமாக இந்தியா கோரியது. இதன் பிறகே, இந்த முகாம் தளத்தில் இந்திய ரிசர்வ் காவல் படைக்கு பதிலாக இந்திய ராணுவத்தினர் முழு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் நடந்த மூன்றாவது ஆண்டில் இந்தியா, சீனா இடையே நடந்த போர், வரலாற்றில் பதிவானது. அதற்கு அடித்தளமாக அமைந்ததுதான் இந்திய ரிசர்வ் காவல் படையினரின் ஹார்ட் ஸ்பிரிங் சம்பவம்.
முன்னதாக, இந்த நிகழ்வுகளின் தாக்கம், ராணுவத்தில் உள்ள வழக்கத்தைப் போல, பணியின் போது உயிரிழக்கும் தங்களுக்கும் உயிர்த் தியாகத்தைப் போற்றக்கூடிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற காவலர்களின் கோரிக்கையை வலுப்பெறச் செய்தது.
அதுவே ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி வீர வணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட காரணமாக அமைந்தது.
பிற செய்திகள்:
- சௌதி இளவரசர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுத்த துருக்கி பெண்
- 2 நாள் இடைவெளியில் 2 சதமடித்த தவான் - ஆனாலும் டெல்லி தோற்றது ஏன்?
- குடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன?
- விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து; வலுக்கும் கண்டனம்
- அமெரிக்க தேர்தல்: இந்தியர்களுடன் கைகோர்க்கும் பாகிஸ்தானியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: