You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்: உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணாவுக்கு எதிராக எஸ்.ஏ.போப்தேவுக்கு கடிதம்
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான என்.வி. ரமணாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எஸ்.ஏ.போப்தே ஓய்வுக்குப் பின்பு இந்தியாவின் அடுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவர் என்.வி. ரமணா.
மாநில முதலமைச்சர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, இன்னொரு உச்ச நீதிமன்ற நீதிபதி மீது குற்றம்சாட்டி கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை.
அக்டோபர் 6ஆம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதம் சனிக்கிழமை அன்று ஊடகங்களுக்கு வெளியானது.
எனினும். அக்டோபர் 8ஆம் தேதிதான் அக்கடிதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
அன்று ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் சந்தித்தார். அது வழக்கமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த கடிதத்தை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முதன்மை ஆலோசகர் அஜேயா கல்லம் சனிக்கிழமையன்று ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சில நீதிபதிகள் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில் என்.வி.ரமணாவின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
என்.வி, ரமணாவுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அமராவதி ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்படும் முன்பு அங்கு ரமணாவின் மகள்களின் சில நில ஒப்பந்தங்கள் தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்ததாகவும் எட்டு பக்க கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்,
தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடைய சில முக்கிய விவகாரங்கள், குறிப்பிட்ட சில உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுவதாக ஜெகன்மோகன் ரெட்டி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மே 2019 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திர பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பின்பு, சந்திரபாபு நாயுடு அரசாங்கம் ஜுன் 2014 முதல் மே2019 வரை மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை உத்தரவிடப்பட்ட பின்பு ஆந்திர மாநில நீதித்துறை விவகாரங்களில் நீதிபதி ரமணா தலையிடத் தொடங்கினார் என்று ஜெகன்மோகன் ரெட்டி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரஷாந்த் பூஷன் கருத்து
இந்த குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக உள்ளது என்றும், உடனடியாக நம்பகத்தன்மை கொண்ட விசாரணை தேவை என வழக்கறிஞரும் ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- வெங்காய விளம்பரத்தை "ஆபாசமானதாக" கருதி நிராகரித்த ஃபேஸ்புக்
- "பாலியல் தொழிலாளர்களுக்கும் சலுகைகள்" - தேசிய மனித உரிமைகள் ஆணையம்
- அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?
- ஹாத்ரஸ் வழக்கு: காவல்துறையின் அமைப்பு முறையில் சாதிய வேறுபாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: