சிவாங்கி சிங்: ரஃபால் போர் விமானத்தை இயக்கும் இந்திய விமானப்படை வீராங்கனை - சுவாரஸ்ய தகவல்கள்

    • எழுதியவர், சுஷிலா சிங்
    • பதவி, பிபிசி

"பொதுவாகவே எல்லோருக்கும் மிக உயரம் சென்றால் அச்சம் ஏற்படும். ஆனால், அதை விட கூடுதலான அச்சம் எங்களுடைய மகள், போர் விமானத்தில் வானில் பறக்கப்போகிறேன் என்றபோது ஏற்பட்டது. ஆனால், அந்த பணியை அவள் நேசிக்கிறாள். அதுவே அவளது விருப்பப்படி இந்திய விமானப்படை விமானியாக்கியிருக்கிறது" என்று அவரது தாய் சீமா சிங் பெருமிதப்பட்டார்.

தனது மகளை பற்றி சிவாங்கி சிங்கின் தாய் இப்படிக் கூறியபோது அவருக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை அவரால் அடக்க முடியவில்லை.

அதற்கு கூடுதல் காரணமும் இருக்கிறது. சமீபத்தில் இந்திய விமானப்படையில் அலுவல்பூர்வமாக சேர்க்கப்பட்ட ஐந்து ரஃபால் போர் விமானங்கள் படையணியில் சிவாங்கி சிங் இடம்பெற்றிருக்கிறார்.

ஆம். இந்திய விமானப்படையின் அங்கமான அந்த படையணியில் ஃபிளைட் லெப்டிணன்ட் சிவாங்கி சேர்க்கப்பட்டுள்ளதால் அவர் அந்த விமானத்தை இயக்கப்போவதும் கூடுதல் சிறப்பு.

உத்தர பிரதேசத்தின் வாராணசியைச் சேர்ந்தவர் சிவாங்கி சிங். இந்திய விமானப்படையில் 2017ஆம் ஆண்டில் சேர்ந்த இவரிடம், பயிற்சி முடித்ததும் எம்ஐஜி-21 பைசன் ரக போர் விமானத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

தனது மகள் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது டெல்லியில் உள்ள விமானப்படை அருங்காட்சியகத்துக்கு தனது தாத்தாவுடன் சென்றதுதான் சிவாங்கியின் முதலாவது விமானப்படை கள அனுபவம் என்று அவரது தாய் சீமா நினைவுகூர்கிறார்.

அப்போது விமானப்படை அதிகாரிகள் சீருடையில் பணியாற்றி வருவதை பார்த்து ஈர்க்கப்பட்ட சிவாங்கி, தானும் அவர்களைப் போலவே விமானப்படையில் விமானியாக வேண்டும் என தீர்மானித்ததும் அந்த அருங்காட்சியகத்தில்தான் என்கிறார் சீமா.

பி.எஸ்சி படிக்கும்போது கல்லூரியின் தேசிய சாரணர் படையின் விமானப்படைப்பிரிவில் சேர்ந்தார் சிவாங்கி. இரண்டாம் ஆண்டு படித்தபோது விமானப்படையில் சேருவதற்கான தேர்வை எழுதினார். கடினமான உழைப்பு, ஈடுபாடு காரணமாக அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார்.

ஆனால், படையில் சேர்வானபோது விமானி அல்லாத பிரிவில் பணியைத் தேர்வு செய்யும்படி அவரது தாத்தா கூறியிருக்கிறார்.

ஆனால், எனது கனவே ஒரு விமானப்படை விமானி ஆவதுதான். அது இல்லாமல் போனால் விமானப்படை வேலையே வேண்டாம் என்று சிவாங்கி உறுதிபடக் கூறியதாக சீமா தெரிவித்தார்.

தனது இளம் வயதில் இருந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சிவாங்கி, மிகவும் துணிச்சலுடன் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் விளங்கியதாக அவரத் தாய் குறிப்பிட்டார். தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற அவர் அந்த விளையாட்டில் சாம்பியனாகவும் இருந்திருக்கிறார். இரு முறை தடகள போட்டியில் வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களையும் அவர் பெற்றதாக சீமா கூறினார்.

ஷிவாங்கியின் தாய் சீமா சிங்

சீமா சிங்கும் ராணுவ குடும்ப பின்னணியைக் கொண்டவர். இரவது அப்பா ராணுவத்தில் கர்னல் ஆக பணியாற்றியவர். ஆனால், தனது அப்பாவை போல மகள் சிவாங்கி பாதுகாப்பு படையில் சேருவார் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்கிறார் சீமா. இவரது கணவர் வர்த்தகர். இருந்தபோதும், மகளின் விமானப்படை பணியை நினைத்து அவர் மிகவும் பெருமை கொள்கிறார்.

இளம் வயதில் இருந்தே சிவாங்கி மிகவும் துறுதுறுப்பும் விடாப்பிடியான குணமும் கொண்டவராக இருந்திருக்கிறார். கல்வியில் தீவிர கவனம் செலுத்திப் படிக்க அந்த குணங்களே அவருக்கு உதவியிருக்கின்றன என்று அவரது தாய் சீமா கூறுகிறார்.

இத்தகைய சூழலில் ரஃபால் போர் விமானத்தை இயக்க எனது மகள் தேர்வாகியிருக்கிறார் என்று வரும் செய்திகள், ஒரு தாயாக எனக்கு எத்தகைய உணர்வைத் தரும் என நினைத்துப் பாருங்கள்.

இதை நினைத்துப் பெருமைப்படுவதா, அச்சப்படுவதா என எனக்குத் தெரியவில்லை என்கிறார் சீமா. இருந்தபோதும், ஒரு விமானியாக பணியில் சேரும்போதே, ஆபத்தான சூழல்களையும் அவர்கள் எதிர்கொண்டாக வேண்டியது கள யதார்த்தம். அதனால், மகளின் உச்சத்தை நினைத்து பெருமைப்படும் அதே சமயம், அதனால் ஏற்படும் அச்சமும் என்னுள் குடிகொண்டிருக்கிறது என்கிறார் சீமா.

தற்போது ரஃபால் போர் விமானத்தின் தொழில்நுட்ப அம்சங்களுடன் பரீட்சியமாகும் வகையில் அதற்கான ஒத்திகை பயிற்சியில் சிவாங்கி சிங் ஈடுபட்டு வருகிறார். அந்த பயிற்சி முடிவடைந்ததும் முறைப்படி அவர் வசம் அந்த விமானத்தை இயக்கும் முழு பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய ராணுவத்தில் பெண்கள் நிலை

இந்திய அரசின் சமீபத்திய தகவலின்படி இந்திய பாதுகாப்புப் படைகளில் ராணுவத்தில் 6892 பேர் பெண் அதிகாரிகள். விமானப்படையில் 1878 பேர் பெண்கள். கடற்படையில் 685 பேர் மட்டுமே உள்ளனர்.

சமீபத்தில் அரசு எடுத்த முடிவின்படி இந்திய விமானப்படையின் எந்தவொரு பிரிவிலும் பெண்கள் பணியாற்ற தடை கிடையாது. அரசின் கொள்கை முடிவின்படி விமானப்படை பணியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நடைமுறை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், அரசு வேலைவாய்ப்பு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது.

2015இல்தான் முதல் முறையாக இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பிரிவில் பெண்கள் ஈடுபடுவதற்கான அனுமதியை அரசு வழங்கியது. அப்போது குறுகிய கால பணிகள் அடிப்படையில் பெண்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் போர் விமான நிரந்தர பணியில் இணைவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

தற்போது சிவாங்கி சிங் இயக்கும் ரஃபால் விமானம், அணு ஏவுகணையை தாங்கியவாறு எதிரி இலக்கை சுட்டு வீழத்தும் வகையில், உலகின் மிக நவீனமயமான தொழில்நுட்ப ஆற்றல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரான்ஸில் இருந்து தற்போது 10 ரஃபால் போர் விமானங்கள் இந்தியாவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: