தொல்லியல் படிப்புக்கான தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் சேர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்திய தொல்லியல் துறை நடத்தும் பட்டயப் படிப்புக்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்றாக தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளைச் சேர்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அம்மொழிகளைச் சேர்த்து திருத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீனதயாள் உபாத்யாயா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்க்கியாலஜியில் இரண்டாண்டு தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமீபத்தில் கோரப்பட்டன. இந்திய தொல்லியல் துறை நடத்தும் இந்தப் பட்டயப்படிப்பில் சேர அடிப்படைத் தகுதிகளாக பழங்கால இந்திய வரலாறு, மத்திய கால வரலாறு, மானுடவியல் ஆகிய துறைகளில் பட்டப் படிப்புப் படித்திருப்பதோடு, சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி, பெர்ஷியன் ஆகிய செம்மொழிகளில் ஒன்றைப் படித்திருக்க வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியானதும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, இது தொடர்பாக வியாழக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், "பட்டயப் படிப்புக்கான தகுதியான மொழிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி என 2005ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.
தமிழ் 2004ஆம் ஆண்டிலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. மேலும், இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ள 48 ஆயிரம் கல்வெட்டுகளில் 28 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியைச் சேர்ந்தவை. ஆகவே தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்களுக்கான தகுதிகளில் ஒன்றாக தமிழ் முதுகலைப் படிப்பையும் இணைக்க வேண்டுமென" அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தீனதயாள் உபாத்யாய இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஆர்க்கியாலஜியின் சார்பில் திருத்தம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தில், இந்திய அரசால் செம்மொழி என அறிவிக்கப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், ஒடியா, பாலி, பிராகிருதம், அரபு, பெர்ஷியன் ஆகிய மொழிகளில் ஒன்றைப் படித்திருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. கோரிக்கை ஏற்கப்பட்டதற்காக, தமிழக முதல்வர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு - இந்தியா எப்படி சமாளிக்கும்?
- பீமா கோரேகான் வழக்கில் 83 வயது பழங்குடியின நல ஆர்வலர் ஸ்டேன் ஸ்வாமி கைது
- 67 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடுகள்: 3.18 கோடி டாலர்களுக்கு ஏலம்
- சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இனி இந்தியாவில் பயன்படுத்த முடியாதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












