பிகார் சட்டமன்ற தேர்தல்: பதவி விலகிய ஒரே வாரத்தில் பாஜக கூட்டணி கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குப்தேஷ்வர் பாண்டே

பிகார் மாநில காவல் துறை தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து கடந்த வாரம் விலகிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குப்தேஷ்வர் பாண்டே, அந்த மாநிலத்தை ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.

பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் அலுவல்பூர்வ இல்லத்தில் அவரைச் சந்தித்த குப்தேஷ்வர் பாண்டே ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.

1987இல் ஐபிஎஸ் பணிக்கு தேர்வான அவர் பதவி ஓய்வு பெற ஐந்து மாதங்கள் இருக்கும் முன்னரே பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அவர் பதவி விலகிய ஒரே வாரத்தில் அரசியலில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

எனினும், தனது வருங்கால அரசியல் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பெரிதாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

நான் பிகாரின் 34 மாவட்டங்களில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி இருக்கிறேன் நான் இந்த மண்ணின் மைந்தன் என்று குப்தேஷ்வர் பாண்டே கூறினார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் தற்கொலை செய்து கொண்டபோது பிகார் காவல்துறை மற்றும் மகாராஷ்டிர காவல்துறை இடையே நடந்த கருத்து மோதலால் குப்தேஷ்வர் பாண்டே செய்திகளில் சமீப காலங்களில் அதிகமாக இடம்பெற்றார்.

திடீரென அவர் விருப்ப ஓய்வு பெற்றது, அந்த வழக்கின் காரணமாக உண்டான மன அழுத்தத்தினால்தான் என்றும் அவர் அரசியலில் சேரப் போகிறார் என்றும் ஊகங்கள் எழுந்தன.

பிகார் சட்டமன்ற தேர்தல்

243 சட்டமன்ற தொகுதிகள் உள்ள பிகாரில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் மூன்று கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி, லோக் ஜன சக்தி கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்க் கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: