You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி வீட்டில் 74 தொன்மையான கோயில் சிலைகள் - தமிழக காவல்துறை சோதனையின் விரிவான தகவல்கள்
புதுச்சேரியில் ஒரே நபரிடம் இருந்து 74 தொன்மை வாய்ந்த சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், நகர்ப் பகுதியில் உள்ள ரோமன் ரொலான் வீதியில், தனி நபருக்குச் சொந்தமான வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் புதுச்சேரியில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன், உலோகம் மற்றும் கற் சிலைகள் உட்பட 74 சிலைகளை தமிழக காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜீன் பால் ராஜரத்தினம் என்பவர், கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரியில் பழமையான 11 சிலைகள் பதுக்கிய வழக்கில் தொடர்புடைய மேரி தெரேசா என்ற பெண்ணின் சகோதரர் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுக்கு தொல்லியல் துறை சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தமிழக சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கூறுகையில், "தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த நம்பத்தகுந்த தகவல் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜீன்பால் ராஜரத்தினம் என்பவரது முகவரியில் தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் இருக்கும் தொன்மையான சிலைகளை இங்கே மறைத்து வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலின் அடிப்படையில், புதுச்சேரியில் உள்ள இவரது வீட்டில் ஆய்வு செய்வதற்காகக் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றோம். பிறகு கட்டட உரிமையாளர் மற்றும் இந்து அறநிலையத்துறை முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) சோதனை செய்யப்பட்டது," என்கிறார் அவர்.
"அதன் அடிப்படையில், 74 சுவாமி சிலைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஐம்பொன் மற்றும் உலோகத்திலான 60 சிலைகளும், 14 கற்களாலான சிலைகளும் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பாக ஆவணங்களும் பறிமுதல் செய்திருக்கிறோம். இதுகுறித்து தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம். விசாரணையில் கிடைக்கக் கூடிய தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்," என்று சக்திவேல் கூறினார்.
"குறிப்பாக, இன்று பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்து எந்தெந்த கோயில்களிலிருந்து கொண்டுவரப்பட்டன என விசாரணை செய்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கோயில்களில் சிலைகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் கோயில் வழிபாட்டிற்கு வைக்கப்படும் உற்சவ சிலைகள். இவை அனைத்தும் வீடுகளில் வைத்து வழிபடும் சிலைகள் இல்லை. ஆகவே, இவை அனைத்து கடத்தப்பட்ட சிலைகளாக இருக்கலாம்," எனத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- எஸ்.பி.பி உடல்நிலை: கலங்கும் திரையுலகம் - டிரெண்டாகும் #SPB #GetwellsoonSPB #SPBalasubrahmanyam ஹேஷ்டேக்குகள்
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனையில் என்ன நடக்கிறது?
- "சசிகலா வெளியில் வருவதால் எந்த தாக்கமும் இருக்காது": அமைச்சர் ஜெயக்குமார்
- கொரோனா அறிகுறிகளுடன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
- சீனா மற்ற நாடுகளை விட மின்னஞ்சலை குறைவாக பயன்படுத்துவது ஏன்?
- கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :