உமர் காலித் விவகாரத்தில் கன்னையா குமார் மெளனம் காக்கிறாரா? - BBC EXCLUSIVE

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சல்மான் ராவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
டெல்லி கலவர வழக்கில் உமர் காலித் கைது விவகாரத்தில் தான் மெளனம் காக்கவில்லை என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கன்னையா குமார் தெரிவித்துள்ளார்.
ஜேஎன்யுவில் சர்ச்சைக்குரிய வகையில் கோஷமிட்டது தொடர்பாக, கன்னையா குமாருடன் இருந்த உமர் காலித் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த விவகாரம், ஒரு உமர் சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உமரும் அதில் ஒருவர் என்று கன்னையா கூறுகிறார்.
"தற்போது நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் சக்தி, மாறுபட்ட கருத்துக்களை வெளியிடும் குரல்களை குற்றமயமாக்கிட விரும்புகிறது. போலி அறிக்கைகளின் அடிப்படையில், போலி விவாதங்களின் அடிப்படையில், தவறான வீடியோக்களை உருவாக்கி, தவறான வழியில் வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்கி, அவர்களது ஆதரவாளர்களிடையே அவதூறை உண்டாக்கவே முயற்சிகள் நடக்கின்றன," என்று கன்னையா கூறுகிறார்.
அரசு மிகவும் நியாயமானதாக இருந்தால், துப்பாக்கிச் சூடு பற்றி வெளிப்படையாகப் பேசியவர்கள், காவல்துறை முன்னிலையில் ஒரு கலவரத்தைத் தூண்டும்விதமாக பேசியவர்கள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லையே என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நாட்டில் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள், தப்பி ஓடியவர்கள் அதிகாரத்தில் அமரும்போது, நீதியின் குரல் ஒடுக்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக 'யுனைடட் அகெயின்ஸ்ட் ஹேட்" அமைப்பின் இணை நிறுவனர் உமர் காலித், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது டெல்லி போலீஸின் காவலில் அவர் உள்ளார். அவர் 'யுஏபிஏ' அதாவது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த கைதுகள் தொடர்பாக டெல்லி பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஆனி ராஜா ஆகியோருடன் பல சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் உரை நிகழ்த்துவோரின் பெயர் பட்டியலில் கன்னையா குமாரின் பெயரும் இருந்தது. ஆனால் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இது குறித்து கன்னையா குமார் கூறுகையில், " பிரஸ் கிளப் செய்தியாளர் கூட்டம் நடந்த அன்று நான் டெல்லியில் இல்லை. எனது ஃபேஸ்புக் பதிவைப் பாருங்கள். நான் அந்த கைது நடவடிக்கைக்கு எதிராக எழுதியுள்ளேன்," என்று கூறினார்.
கன்னையா சிலநாட்கள் முன்பு ஒரு நீண்ட ஃபேஸ்புக் பதவை எழுதியிருந்தார். அதில் பல விஷயங்கள் குறித்து சொல்லப்பட்டிருந்தது. ஆனால் உமர் காலித்தின் பெயரை நேரடியாக அவர் குறிப்பிடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இந்த விஷயத்தில் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எந்தவொரு நபரின் ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுகிறதோ, அவர்களது அடையாளம் எதுவாக இருந்தாலும், எங்களது சித்தாந்தத்திற்கு முரணாக இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் போராடுவோம், அநீதிக்கு எதிராக போராடுவோம் என்று பிபிசியுடனான சிறப்பு உரையாடலில், கன்னையா குமார் குறிப்பிட்டார்.
"இந்த விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, அடுத்த நாள், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் குழு, குடியரசு தலைவரை சந்தித்தது.
டெல்லி கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரிக்கும் விதம் குறித்தும், அப்பாவி மக்களை அது வழக்கில் சிக்க வைப்பது குறித்தும் தங்களின் ஆட்சேபங்கள் அப்போது முன்வைக்கப்பட்டது, "என்று கன்னையா குமார் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் டெல்லியில் நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். அதில் 40 பேர் முஸ்லிம்கள் மற்றும் 12 பேர் இந்துக்கள் என்று டெல்லி போலீசார் கூறுகின்றனர்.
அண்மையில், டெல்லி காவல்துறை இந்த வழக்கில் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில் 15 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது யுஏபிஏ, ஐபிசி மற்றும் ஆயுதச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Nurphoto
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவாரா கன்னையா குமார்?
இது குறித்துப் பேசிய கன்னையா குமார், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்கிறார். ஆயினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு என்ன பொறுப்பை அளிக்கப்போகிறது என்பதைப்பொருத்து இது அமையும் என்று அவர் தெரிவித்தார்.
கன்னையா குமார், சிபிஐ தேசிய கவுன்சில் உறுப்பினராக உள்ளார்.
"நான் தேர்தலில் போட்டியிடுவதை பொருத்தவரை, தனிப்பட்ட முறையில் ஒரு வேட்பாளர் அல்ல. நான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் நடைபெறும்போது, கட்சி அதில் போட்டியிடும். கட்சி உறுப்பினராக, எனக்கு கிடைக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்," என்று அவர் கூறினார்.
பிபிசி நேர்காணலின்போது கன்னையா குமார், கொரோனா தொற்று நிலவும் இந்த காலகட்டத்தில், பிஹாரில் தேர்தல் நடக்கக்கூடாது என்பதில் தனது கட்சி தெளிவாக இருக்கிறது என்றும், தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படும் என்பதை விளக்குமாறும் தனது கட்சி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த சூழலில் தேர்தல் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, எவ்வாறு பிரசாரம் செய்வது என்பதை தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும். வாக்குச் சாவடிகளில் என்ன மாதிரியான ஏற்பாடு இருக்கும், வாக்குச் சாவடி ஊழியர்கள் மற்றும் வாக்காளர்களையும் பாதுகாக்கும் விதமான தேர்தல் எப்படி இருக்கும் என்று தெளிவுபடுத்த வேண்டும். இருப்பினும், அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருந்தால், எங்கள் கட்சியும் வரும் தேர்தலில் பங்கேற்க வேண்டியிருக்கும், " என்றார் அவர்.

பட மூலாதாரம், Hindustan Times
எதிர்கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து இருக்குமா?
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னரே, தாங்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்று இடதுசாரி கட்சிகள் கோடிட்டுக்காட்டியுள்ளன.
இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் சிபிஐ ஆகியவை ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பிஹார் மாநில தலைவரை சந்தித்து கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்தது. ஆயினும், சிபிஐ-எம்எல் (விடுதலை) கட்சி, இடப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சிபிஐ (எம்எல்) க்கு மூன்று இடங்கள் கிடைத்தன. ஆனால், சிபிஎம் மற்றும் சிபிஐக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. 70 களில் பிஹார் சட்டப்பேரவையின் முக்கிய எதிர்கட்சியாக சிபிஐ இருந்து வந்தது.
ஆனால் காலப்போக்கில், செங்கொடி அரசியலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சுருங்கத் தொடங்கியது. அவர்கள் பிஹாரின் சில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றனர். பரஸ்பர கருத்து வேறுபாடுகள் காரணமாக இடதுசாரி கட்சிகள் பாதிப்பை சந்திக்க நேரிட்டதாக கன்னையா ஒப்புக்கொண்டார். ஆனால், மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, இடதுசாரி கட்சிகள் பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக போராடுகின்றன என்றும் அவர் கூறினார்.
"இடதுசாரி கட்சிகளுக்கு வளங்கள் இல்லை. மற்ற முக்கிய அரசியல் கட்சிகள் போல அவர்களிடம் பணம் இல்லை. இப்போது உதாரணமாக, பாரதீய ஜனதா கட்சி, பிகாரில் பிரச்சாரம் செய்வதற்காக 70 ஆயிரம் எல்.ஈ.டி டிவிகளை நிறுவியுள்ளது. இது போல பிரச்சாரம் செய்ய எங்களிடம் போதுமான பணம் இல்லை. அதேபோல் அரசியல் கட்சிகள், சமூக ஊடகங்கள் மூலமும் மிகவும் தீவிரமாக செயல்படுகின்றன. ஆனால் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக எனது கட்சி, இவ்வளவு பெரிய அளவில் இத்தகைய ஏற்பாடுகளை செய்யமுடியவில்லை , ஏனென்றால் இதற்கும் நிறைய பணம் செலவாகும், " என்று அவர் கூறுகிறார்,

பட மூலாதாரம், Getty Images
இடதுசாரிகளின் அடித்தளம் ஏன் சுருங்கியது?
செங்கொடி அரசியல் ஆதரவாளர்களின் வலுவான அடித்தளமாக தலித்துகள், பின்தங்கிய வகுப்பினர், ஓபிசி மற்றும் சிறுபான்மையினரின் போராட்டம் இருந்தது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பின்தங்கிய வகுப்பினருக்காக போராடும் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, எப்போதும் மேல் சாதியினரின் கைகளில் இருந்து வந்தது. அதனால்தான் அமைப்பின் அடித்தளம் சுருங்கிவருகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கன்னையா குமார் இந்த வாதத்தை ஏற்கவில்லை.
டி.ராஜா பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் அவர் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் சிபிஐ வரலாற்றில் இது முதல்முறையாக நடந்துள்ளது என்றும் அதுவும் அமைப்பின் அடித்தளம் பலவீனமாகி வருகிறது என்று தெளிவாகத் தெரிந்தபோதுதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு, சிபிஐ அமைப்பின் முக்கிய முகங்கள் மேல் சாதியை சேர்ந்தவை. பிஹார் சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் சுனில் முகர்ஜி அல்லது ராமாவதர் சாஸ்திரி, போகேந்திர ஜா மற்றும் சதுரானன் மிஸ்ரா ஆகியோர் இதற்கு உதாரணம்.
சிபிஐ தரப்பிலிருந்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பின்தங்கியவர், தலித் மற்றும் சிறுபான்மை பிரிவுகளைச் சேர்ந்த பல தலைவர்கள் இருந்துள்ளனர் என்று கன்னையா கூறினார். அத்தகைய பிரிவில் இருந்து வரும் தலைவர்களை ஊக்குவிக்க இந்த கட்சி பணியாற்றி வருகிறது.
ஆனால் அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாரதிய ஜனதா கட்சியின் ஆக்ரோஷமான இந்துத்துவ அரசியல், மேல் சாதிகளை தனக்கு சாதகமாக ஆக்கத்தொடங்கியது.

பட மூலாதாரம், @kanhaiyakumar
அதே சமயம், மண்டல் கமிஷன் அறிக்கைக்கு பின்னர், பிஹார் அரசியலில் பல கட்சிகள் உருவாயின. இவை இடதுசாரி கட்சிகளின் ஆதரவிலான கூட்டணியில் பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமாக இடதுசாரி கட்சிகள், மேல்சாதி அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்டன.
சிபிஐ, இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை என்று தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்று கன்னையா கூறுகிறார். மண்டல் ஆணையத்தின் அறிக்கைக்கு சிபிஐ ஆதரவளித்து வருகிறது. முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் இடஒதுக்கீடு குறித்து பேசியபோது, கட்சி அதை ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் சிபிஐ எதிர்கொண்டது.
இட ஒதுக்கீடு கேள்விக்கு கன்னையாவின் பதில்
"மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது சிபிஐயின் நிரந்தர நிலைப்பாடாகும். இப்போது உதாரணத்திற்கு உடலை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து உறுப்புகளும் அவற்றின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இருந்தால்தான் நன்றாக இருக்கும். இப்போது மூக்கு மிக நீளமாகிவிட்டால் அல்லது காது சரியாக இல்லாவிட்டால் இயற்கையாக அது சரியாக இருக்காது. அதேபோல், மக்கள் தொகை மற்றும் அவர்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இடஒதுக்கீட்டையும் பார்க்க வேண்டும்," என்று கன்னையா குமார் குறிப்பிட்டார்.
பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்காக கொண்டுவரப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீட்டையும் தனது கட்சி ஆதரிக்கிறது என்று அவர் கூறினார்.
பிஹாரில் பெகுசராய், மிதிலாஞ்சல், சிவான் மற்றும் சம்பாரன் உட்பட ஒரு சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இடதுசாரி கட்சிகள் ஓரளவு செல்வாக்கைக் கொண்டுள்ளன. அதேசமயம், மாநிலத்தின் பிற பகுதிகளில், அவர்களின் பிடி பலவீனமடையத்தொடங்கியது.
பெகுசராய் பற்றிப்பேசினால், சிபிஐ மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் கிரிராஜ் சிங்குக்கு எதிராக தத்தமது வேட்பாளர்களை நிறுத்தின.
சிபிஐ, கன்னையா குமாரை தேர்தலில் களமிறக்கியது. ராஷ்டிரிய ஜனதா தளம் இந்தத்தொகுதியில் தன்வீர் ஹசனை நிறுத்தியது.
ஆனால், கிரிராஜ் சிங் வெற்றி பெற்றார். சிபிஐ மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் இந்த தொகுதியை, ஒரு கெளரவ போட்டியாக ஆக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கன்ஹையா குமார் கூறுகையில், "அந்த நேரத்தில் கூட்டணித் தலைவர்களிடையே பெகுசராய் தொகுதி பற்றி என்ன முடிவு செய்யப்பட்டது என்று எனக்குத் தெரியாது. ஆனால் மற்ற தொகுதிகளில், கூட்டணியின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தனர். நடந்தது நடந்துவிட்டது, இப்போது நாம் நடக்கப்போவதைப்பற்றி சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், TWITTER @ YADAVTEJASHWI
பெகுசராய் தொகுதி, கிராண்ட் அலையன்ஸின் முக்கிய கட்சிகளான சிபிஐ மற்றும் ஆர்ஜேடியின் கெளரவப்போராக மாறியது. ஏனெனில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நேரம் வரை, கன்னையா குமார் நாட்டின் மாணவர் அரசியலில் ஒரு வலுவான பிடியை ஏற்படுத்தி, 'பிராண்ட் கன்னையா' ஆக மாறிவிட்டார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தேஜஸ்வி தலைமையில் தேர்தல் நடைபெறுமா?
ஆர்.ஜே.டி யின் பரம்பரை வாரிசு நிலை, மற்றொரு வளர்ந்து வரும் பிரபலமான 'தேஜஸ்வி யாதவுக்கு' அளிக்கப்பட்ட நிலையில், பிஹார் அரசியலுக்குள் கன்னையா குமாரின் வருகை ராஷ்டிரிய ஜனதா தளத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர்கட்சிகளும் தேர்தலில் போட்டியிட நிர்பந்திக்கப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பலவீனமாக இருந்தபோதிலும், பிஹார் சட்டப்பேரவையில் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமான 50 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கால் மட்டுமே வெற்றி மற்றும் தோல்வி தீர்மானிக்கப்படும் இடங்கள் இவை. தற்போது கிராண்ட் கூட்டணியைப் பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனதா தளம் (யுனைடெட்) கூட்டணியைத் தோற்கடிப்பதே முன்னுரிமை என்றும், யார் முதலமைச்சர் என்பது அல்ல என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்துமே மிகவும் ஆக்கப்பூர்வ அணுகுமுறையுடன் உள்ளன என்று கன்னையா குமார் கூறுகிறார். ஏனெனில் அனைத்து கட்சிகளும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட எதிர்கட்சி ஒற்றுமை பற்றி பேசுகின்றன.
கன்னையா குமார் எப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுவருகிறார். ஆனால் கடந்த பல மாதங்களாக அவர் தொலைக்காட்சி சேனல்களிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ அவ்வளவாக தோன்றவில்லை. இது ஏன்?
கொரோனா வைரஸ் தொற்றுநோய் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது என்று அவர் கூறுகிறார். முன்பு அவர் பிரச்சனைகளுக்காக போராட சாலைகளில் இறங்குவார். "கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, எதிர்ப்பு தெரிவிக்கும் முறையும் மாறிவிட்டது ,"என்று அவர் கூறுகிறார்.
"சமூக ஊடகங்களை, எதிர்ப்பை பதிவு செய்வதற்கான ஒரு ஊடகமாக ஆக்கிட நான் விரும்பவில்லை. ஏனென்றால் மக்களின் தனியுரிமை இதில் பாதுகாக்கப்படவில்லை. இது சரியான ஊடகமும் அல்ல. அடிமட்ட நிலையிலான பிரச்சனைகளுக்கு, அடிமட்டத்தில் தான் போராட்டம் இருக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- திமுக எம்.பி கதிர் ஆனந்தை உளவுத்துறை விசாரித்ததா? மக்களவையில் கிளம்பிய புதிய பிரச்சனை - என்ன நடந்தது?
- இந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்? - ஜாகிர் நாயக் விளக்கம்
- கொரோனா காலத்தில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் எத்தனை தெரியுமா?
- விவசாயிகள் மசோதா: பஞ்சாப், ஹரியாணாவில் கடும் எதிர்ப்பு எழுவது ஏன்?
- இந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்? - ஜாகிர் நாயக் விளக்கம்
- பாலியல் அந்தரங்க காட்சிகளை பதிவு செய்து மிரட்டும் கும்பல் - காவல்துறை எச்சரிக்கை
- நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின் - மேகேதாட்டு அணை கூடாது
- 'இந்தி தெரியாததால் கடன் மறுப்பு': கடன் கிடைக்காத விரக்தியால் போலி புகாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












